5. வெறுங்கையோடு வீடுதிரும்புபவன் நிழல்.

வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்கவேண்டும்.
வெறுங்கையோடு திரும்பிவந்தால்
வெகுளியாய்ச் சிரிக்கவேண்டும்.

வெறுங்கைகளுடன்
திரும்பி கொண்டிருக்கிறீர்கள்.
சிறுமுயலும் கிடைக்காத
இன்றைய வேட்டையை
முடித்துக் கொண்டு.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக
இப்படி நேர்ந்திருக்கிறது.
பாரம் துவளத்
தளர்ந்த நடையோடு போகும்
உங்களைப் பூதாகரமாய்
பின் தொடர்ந்து வருகிறது
அந்தி நிழல்.

"எப்படி வெறுங்கையோட போவ?
இன்னா தாத்தா கொண்ணாந்தே?"ன்ற
கேள்விக்கென்ன பதில் சொல்வேன்?

சிறுங்கண்ணிக்குப்
பறவைகளை அழைத்து அழைத்துச்
சோர்ந்தான்.
சகல வித்தைகளும்
பிரயோகிக்கப்பட்டுத்
தோற்றுக்கொண்டிருந்தன.
கண்ணியைச் சுருட்டக்கூட
மனமின்றி நடந்தான்.
எட்டிப்போட்ட
நடை தளர்ந்திருந்தது.

தள்ளிப்போகத் தள்ளிப்போகப்
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புபவனின் நிழல்.

(வேறு)

நோய்மையில் இற்றுக் கொண்டிருக்கும்
நைந்த வலைகள் என்னுடையவை.
இந்தக்கடல் உருவானதில் இருந்து
வலையெறிந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு மீனும் சிக்கியதில்லை இதுவரை.

வலைகளின் மேல்
நம்பிக்கை யிழந்தவன்
பசியிலும் மூப்பிலும் தளர்ந்துபோய்
சிறுதூண்டில் ஒன்றைத்
தயாரித்துக் கொண்டேன்.

தூண்டில் முள்ளில் புழுவுக்குப்பதில்
என் இதயத்தையே பொறிவைத்துள்ளேன்.
நான் மீன் உண்பேனோ?
என்னை மீன் உண்ணுமோ?
நானறியேன்.
____________________
*யுகபாரதி*இளங்கோ கிருஷ்ணன்*
*பவா செல்லத்துரை*கலாப்ரியா*

(வேறு)
*இளங்கோ கிருஷ்ணன்*


"கலை எங்கிருந்து வருகிறது? இதற்கு பதில் கலை கலையிலிருந்து தோன்றுகிறது என்பதுதான். பின் நவீனத்துவம் இதைத்தான் குறிப்பான், குறிப்பான்களுக்கே இட்டுச்செல்கின்றது என்று சொல்கின்றது. முன்பு பல்பிரதித்துவம் (inter-text) என்று குறிப்பிட்டதும் இதைத்தான். கவிதை, வாழ்க்கை அனுபவத்தில் இருந்து எழுதப்படுவது அல்ல. மாறாக, முந்தைய கவிதைகளில் இருந்தே இன்றைய கவிதை எழுதப்படுகிறது."
--க.பூரணச்சந்திரன்.

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.