‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்
‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’
தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்
வே.மு.பொதியவெற்பன்
நடுவண் அரசு தமிழுக்கான செவ்வியல் அங்கீகாரத்தை வழங்கியதை யொட்டி அதற்கெனச் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனத்தையும் ஏற்படுத்தியது. அந்நிதி நிறுவன நல்கையில் பல்களை வளாகங்களிலும், கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புகள் வாயிலாகவும் இதழைத் தொடர்ந்து ரவிக்குமார் ‘மணற்கேணி’ சார்பில் புதுவைப் பல்கலையுடன் இணைந்து இன்றைய தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் ‘தமிழும் சமஸ்கிருதமும்’ குறித்த ஆய்வரங்குகளை நிகழ்த்தி ஆய்வுக் கட்டுரைகளை மணற்கேணியிலும் வெளிவிட்டார்.
சமஸ்கிருதம் பிராந்திய அடையாள அரசியல் எழுச்சி பெற்ற போது தனது முக்கியத்துவத்தை இழக்க நேர்ந்தது. சமஸ்கிருதத்தைப் பிராமணர்களோடு சமமாக வைத்துப் பார்த்த காரணத்தால் சமஸ்கிருதப்படிப்பு என்பதே கேவலமானதாக, அவமானகரமானதாக ஆக்கப்பட்டு விட்டது என்று பொல்லாக் கருதுகிறார். ஆனால் இப்படியான சமஸ்கிருத எதிர்ப்பு எழுவதற்கு வரலாற்று ரீதியாக இருக்கும் காரணங்களைப் பொல்லாக் பிரிக்கத் தவறுகிறார் என்று தோன்றுகிறது. வெல்டன் பொல்லாக், ஹெர்மன் டீக்கன் ஆகியோரின் சங்க இலக்கியம் குறித்த விமர்சனங்கள் இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவையாகும். அவர்களைப் போலவே சமஸ்கிருதப் புலமைக் கொண்ட ஜார்ஜ் ஹார்ட்டிடம் இருக்கும் நிதானமும் கொண்ட பார்வை அவர்களிடம் இல்லாமற் போனது ஏன் என்பது ஆய்வுக்குரியது ரவிக்குமார் (மணற்கேணி மார்ச்-ஏப்ரல் 2012) பொல்லாக் கருத்தாக ரவிக்குமார் குறிப்பிடுவன மாக்ஸ்முல்லா மனோபாவங்களையும் வரலாற்று முரண் நகையாகவுமே எஞ்சி நிற்கின்றன. தம்மைச் சமமாக வைத்துப் பார்க்க மறுக்கும், தமக்கு சமஸ்கிருதக் கல்வியை மறுதலிக்கும், தம்மொழியையும் பண்பாட்டையும் இழிவுபடுத்தும் அசமத்துவ வாதிகளை வேறு எவ்வாறு பாதிக்கப்பட்டோர் எதிர்கொள்ள வேண்டுமெனப் பொல்லாக்குகள் எதிர்பார்க்கின்றனர். மற்றைமைக்கு மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டமையால் தானே அவர்தம் வேதம் யாவும் மறை யெனப்பட்டன. ரகசிய அறிவாக அவர்களுக்கு மட்டுமே உரித்தானவைகளாகப் பேணப்பட்டவை தாமே மறையீறு வேத அந்தம் எனப்பட்ட உபநிடதம் யாவுமே மற்றைமையையே முற்றாக மறுதலிப்பது தானே சங்கரமாயை யான வேதாந்தம்.
“பின்னர் வேதத்தைக் கேட்குங்கால் காதுகளை உருக்கிய ஈயத்தினாலும் மெழுகினாலும் நிறைக்க வேதங்களை உச்சரிக்குங்கால் நாவை இரண்டாகச் சோதித்தல் வேண்டும் (கௌதம் 12.46) என்னும் ஸ்மிருதியானது வேதத்தைச் சிரவணம் செய்யும் சூத்திரர்களுக்குத் தண்டம் விதிக்கிறது. சுருதி ஸ்மிருதிகளினாற் சூத்திர சமீபத்தில் அத்தியாயனம் முதலியன செய்து நிவேதிக்கப்படுகின்றமையானும் வேதாந்திர விவரம் எங்கிருந்தாகும்? ஆகலின் எப்பிரகாரத்தினாலும் பிராமணர்க்கு எட்டாம் வயதிற் செய்யப்படும் உபநயன சமஸ்காரமின்றி வேதாத்தியாயனம் எவ்விடத்துவெர்க்கும் எய்தா தென்பது சித்தமாயிற்று. ஆகலின் சூத்திரர் பிரம்ம வித்தைக்கு அருகரல்லர்” (பிரம்ம சூத்திரம் சிவாத்துவித மாபாடியம் 1.3.39 காசிவாசி செந்திநாதைய்யர் மொழி பெயர்ப்பு 1907)
“உபநிசத்து என்றால் இரகசியம், 12 ஆண்டுக் குருகுலவாசம் செய்தபின் அருகில் உள்ளவர்களுக்குக் கேட்காத குரலில் மானாவனது காதின் மேல் குருவானவர் தம் வாய்வைத்துக் ‘குசு குசு’ வென்று மெல்லச் சொல்லுவது என்று பொருள். மற்ற எவருக்கும் சொல்லக்கூடாது என்பது கட்டளை” வெள்ளியங்காட்டான் புதுவினக்கம் ப.14) சோழர் வளர்த்த வேதக் கல்வி கடிகைக்கல்வி எனப்பட்டது. அவற்றின் தொடர் நீட்சியான வேதபாடசாலைகள் வரைலியான சமஸ்கிருதக் கல்வி என்பதும் பார்ப்பனார்க்கு மட்டுமே உரியதாயிருந்தது. பொதுவாக சமஸ்கிருதக் கல்வி என்பதே பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் மறுதலிக்கப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பார்ப்பனர் அல்லாதார் கல்விக்கே. அருகராகார் என ஒதுக்கப்பட்டனர். இதுவே இங்கு நிகழ்ந்தேறிய சரஸ்வதிக கடாட்சயத்தின் லெட்சணம்.
“பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மணவாள மாமுனிவர் தமது முமுட்சுப்படி முன்னுரையில் : ஸ்ரீய பதிப்படி உபய தோஷமுமின்றிக்கே யிருந்தாகிலும் ஸமஸ்கிருத வாக்ய – பஹீளமா கையாலே பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமையின் என்று குறிப்பிடுகிறார் (ப.40) பார்ப்பனர் தங்கள் பெண்களுக்குக் கூட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சமஸ்கிருதம் கற்றுத்தரவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வந்த போது கூட பெண்களுக்குக் கற்றுத்தர மறுத்து விட்டார்கள். தொ.பரமசிவன் (சமயங்களின் அரசியல் ப.99.100) இந்த நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்த பத்தாண்டுகளில் மெட்ராஸ் யுனிவர் சிட்டியின் செனட் போன்ற உயர்மட்ட விவாதங்களில் தமிழை சமஸ்கிருதத்தைப் போலக் கருதக் கூடாது என்று கருதியவர்களின் பக்கம் இந்து நாளிதழ் நின்றிருக்கிறது. சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்றும் தமிழ் ஒரு வெர்னாக்குலர் மட்டுமே என்றும் இந்து நாளிதழ் கருதி வந்திருக்கிறது தமிழவன் பாடத்திட்டத்திலும் சென்னை மாகாணத்திலும் சமஸ்கிருத எதிர்ப்பு எனப்பேசி நிற்போர் ஏனைக் காணப் புகுந்தாரில்லை. ஆதிக்கம் செலுத்தும் எதனையும் பாதிக்கப்பட்டோரும், காலகாலமாகக் கல்வி மறுதலிக்கப்பட்டோரும் எதிர்க்காமல் வேறென்ன செய்ய இயலும்?
“குருகுலக் கல்வி, குரு வீட்டில் கல்வி, திண்ணைப் பள்ளிக் கல்வி என்பதே பெரிதும் நடப்பில் இருந்தது. அரசின் பொறுப்பில் நடந்தவை தேவபாடசாலைகளே. அவை பார்ப்பனர்க்கு மட்டுமே. இந்த அமைப்பின் விளைவாக வெகுமக்கள் என்பவர்கள் கல்வி பற வாய்ப்பற்றவர்களாக இருந்தார்கள். தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் இந்த நிலையே கி.பி.1800 வரை நீடித்தது”
“1840க்கு பிறகு எல்லாச் சாதியினரும் உத்தியோகம் பெறலாம் என்கிற வாய்ப்பு உண்டான பின்னரும் பார்ப்பனர்களே பெரும்பாலான உத்தியோகங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். வே.ஆனைமுத்து (வே.ஆ.கருத்துக்கருவூலம் தொகுதி வகுப்பு வாரி உரிமை)
இன்றைய சூழலில் செவ்விலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மற்றொரு செம்மொழியேனும் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருந்தால்தான் அத்துடன் ஒப்பிட்டுச் செவ்விலக்கியக் கல்வியை முன்னெடுக்க இயலும். இந்த வகையில் சமஸ்கிருதப் பயில்பு பெரிதும் நன்மை பயக்கும். இவ்வாறு பன்மொழியறிவு, புலமை மரபு, இலக்கண இலக்கியப் பாரம்பரியம் என்கிற வகையில் ஒப்பீட்டாய்விற்கு உகந்ததாக கல்விப்புல வளாகங்களில் சமஸ்கிருதம் பரிந்துரைக்கப்படலாகின்றது. புலமைமரபில் பயில விரும்புவோர் பயிலட்டும். ஆனால் வழிபாட்டுணர்வின் காரணமாக உயர்த்தியோ தாழ்த்தியோ கூறும இருமுனைத் தவறுகள் நேராகின்றன.
“தம்ழ்ப்பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரமானதோ, அவ்வளவு பாமரத்தனமானது தமிழைவிட சமஸ்கிருதம் சிறந்தது என்ற சமஸ்கிருத மனோபாவமும் இரண்டும் இலக்கியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் பிறந்தவை” பிரேமின் (படிவம் 1981) “தமிழும் சமஸ்கிருதமும் ஆன்மீகப் பிணைப்பு கொண்டவை தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்குப் போயிருப்பவை கூட அநாதிகாலத்தின் இனப்பாகுபாட்டை மீறிய தமிழ் ரிஷிகள் ஆரிய ரிஷிகள் ஆகியோரின் சங்கமம் எதனுடையதோ ஒரு வினாடி எனல் வேண்டும்” பிரேமின் (லயம்-12)
இந்தியக்கலை இலக்கியப் பாரம்பரிய மரபினை அனைத்திந்திய மரபான அடையாளப்படுத்தி (Pantnian Culture) ப் பெயரிட்டவர் கலாயோடு ஆனந்த குமாரசாமியே. ஆனால் அவர் சுட்டும் அனைத்திந்தியப் பொது மரபென்பது பிராமணியப்பண்பாட்டை முன்னெடுப்பது எனவே கலை விமர்சகர் மோனிகாவால் கணிக்கப்படுகின்றது (தீராநதி பத்தி) அவர் கணிப்பு விவாதித்தற்குரியதே மாற்றுத் தரப்பையும் காண்போம்.
நாடோடிகளாய் வேட்டையாடி ஊர்சுற்றி வாழ்ந்த ஆரியர்கள் நிலையாய் ஓரிடத்தில் தங்கி விவசாயம் வாணிபம் என்று நகர நாகரிகத்தோடு குடிமுறை வாழ்வை வாழ்ந்து வந்த திராவிடர்களின் கலாச்சாரத்துடன் கலந்து மோதி, முரணி, பின்னிட்டு முன்பாய்ந்து இரண்டுக்குமான ஓர் இந்தியக் கலாச்சாரத்தின் ஆரம்ப அடிப்படைகளை அரசியல் ஞானத்தை கலாமேதையை, விஞ்ஞான உள்ளுணர்வை கவிதாலயத்தை முதன்முதலாக இரண்டாம் நூற்றாண்டுகளில் வேத இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்தினார்கள். மூலத்தன்மை யாரைப் பாதித்துத் தன்வயப்படுத்தியது இணைந்து பிணைந்த இந்தியத் தன்மை அன்றே பிறந்தது” தஞ்சை ப்ரகாஷ் (தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் ப.104) ஒப்பீட்டாய்வென்னும் போது பொது மூலந்தேடுதல், வேற்றுமை உணர்தல் என்பன ஒப்பியன் நூலார் செல்வாக்குக் கோட்பாட்டிற்கு (Unfluence thecry) உரியனவே. இவ்வாறு பொதுவியப்பு, சிறப்பியல்பு பற்றிய கணிப்புகளைப் பொருட்படுத்தாது, பொது மரபைப்பற்றி மட்டும் பேசுவது சிறப்பியல்பு பற்றிய கணிப்புகள் விரிவாக என்னால் திருமந்திரம், சிறப்பியம் எனும் புலக்காட்சி (வைசோஷிகதர்வனம்) மாவோயிசம் இவற்றிற்கூடாக விளக்கப்பட்டுள்ளன (காண்க திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருந்தால்)
தமிழ், சமஸ்கிருதம் எனுமிரு மொழிகளிலும் வெளிப்படலாகும் இலக்கியங்கள், அறிவுத்தோட்டம், மெய்காண்முறை, ஆய்வு குறித்து விதந்தோசித் சுட்டும் பன்முகப் பார்வைகளைத் தொகுத்துக் காண்போம் கருமான், குயவன், தச்சன், நெசவாளி, உழவன் ஆகியோருக்குப் பயன்படக் கூடிய சமஸ்கிருத நூல் ஏதும் இல்லை. சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருந்தவர்கள் பயன்படுத்திய நூல்களில் பயன்பாட்டுக்கும் செயல்முறைக்கும் சடங்கு, தத்துவம், இறையியல், கவிதை ஆகியனவே சமஸ்கிருத இலக்கியங்களில் பெரும்பகுதியாக உள்ளன. கோஸாம்பி அறிவு என்ற விஷயம் பற்றிப் பேசுகையில் மகாபாரதம், பாணிணி, கம்பராமாயணம், பக்தியிலக்கியம் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், இவை அனைத்தையும் கூடி வரச் செய்வதற்கு இன்றியமையாத பொருள் வகைச் செல்வங்களை உற்பத்தி செய்யும் உழவர்கள், கொத்தளனார்கள், கொல்லர், கருமார்கள், ஆலைத் தொழிலாளாளிகள் ஆகியோரிடம் மறைந்து கிடக்கும் அறிவையும் அறிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எஸ்.வி.ராஜதுரை – வ.கீதா (திராவிட தினமணியின் பார்ப்பணியம் ப.71)
நாம், நிலம், நீர், உழவு, குடில் மாடுகன்றுகள் இன்னும் இரும்புத் தொழில், நெசவுத் தொழில், மண்பாத்திரத் தொழில் என உளமொன்றி ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் ஆரியரில் சிலர் பூமி, அந்தரிச்சம், வானம், திசைகள், திசை மூலங்கள், அக்கினி, வாயு, ஆதித்யன், சந்திரன், நட்சத்திரங்கள், நீர், செடி கொடிகள் என ஆராய்ந்தனர்” – வெள்ளியங்காட்டான் (புது வெளிச்சம் ப.37)
“உழவுக்கான ஏர்க்கலப்பையையும், வெயிலுக்கான குடையையும் கண்டறிந்த பாரம்பரியத் தமிழ் தொழில்நுட்ப அறிவின் கண்ணி வல்லத்தமாய் அறுக்கப்பட்டது என்று (அயோத்தி தாஸர்) தொடர்ந்து எழுத வந்தார். இரும்பு, தோல், மரம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தித் தொழிற்கருவிகளைச் செய்வோரைச் சமூகம் மதிக்கத் தவறியதாலேயே நமது பாரம்பரிய அறிவு சிதைந்ததாய்ச் சொல்லி வந்தார். டி.தருமராஜன் (புதிய காற்று ஜுன்-08) ஆரியம் என்ற சொல் மொழியால் சமஸ்கிருதத்தையும் இனத்தால் ஆரியரையும், பண்பாட்டால் வேதாந்தத்தையும், சாதியால் பிராமணரையும் சுட்டி நிற்பதே. ஆரியன் தமிழன் என முதன் முதலில் பக்தியிலக்கிய வாயிலாக அப்பராலேயே ஆளப்பட்டதென்பர்.
ஆரியந் தமிழோடு இசையானவன் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்று நாவுக்கரையர் இருமொழிக்கும் பண்பாட்டிற்கும் பொதுவான ஒத்த நிலையில் இறைவனைக் கண்டார். மற்றும் தமிழன் எனும் சொல்லை முதன் முதலில் படைத்து தமிழ் இன உணர்விற்கு அவர் வித்திட்டார். சே.இராசேந்திரன் (தமிழ்க்கவிதைகளின் திராவிட இயக்கத்தின் தாக்கம் ப.9)
கடவுள் எப்படி இருக்கிறான்? வடநாட்டில் இருந்து வந்த ஆரியக் கடவுள் இல்லை. நீ பாகவதம் படிக்க வேண்டாம். பாலி மொழி படிக்க வேண்டாம். அவன் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்கிறார்கள் பக்தி இயத்தார். எதிர்வைத் தெளிவாக முன்வைக்கிறார்கள். ஆரியம் என்றால் இன்றைக்குள்ள பொருள் அல்ல, ஆரியம் என்றால் சமணம். அவர்கடைய கடவுள் ஆரியன், நம்முடைய கடவுள் ஆரியனாகவும் இருக்கிறான். தமிழனாகவும் இருக்கிறான். தமிழன் என்ற இன உணர்வோடு வைக்கப்பட்ட வார்த்தை இது- தொ.பரமசிவன் (ப.143)சைவ சமயத்திற்கு ஊடாக வெளிப்பட்ட இன உணர்வை எடுத்துக்காட்டும் பாங்கில் இருவரும் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கதே ஆனால் ஆரியம் என்றால் சமணம் எனும் தொ.ப.வின் பார்வை ஏற்புடையதன்று. அவ்வாறு கொள்வதாயின் ஆரியன் கண்டான், தமிழன் கண்டாய் என்பதற்குப் பொருந்துமாறு ஆரியந் தமிழோடு இசையானவன் என் கையில் பொருந்துமாறில்லை. ஆரியம் சமணம் எனில் இளங்கோவடிகளும் சமணத்தமிழ் இலக்கண இலக்கியக் கொடையாளர் யாவரும் ஆரியரே? மாறாக தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவன் என்பதுதானே சைவ சமய நிலைப்பாடு. எனவே வேறு வாத்தையில் கூறுவதானால் சிவனே ஆரிய வேதாந்த சித்தாந்த சமரச சன்மார்க்கத்தை (வேதம், பொது ஆகமம் சிறப்பை வலியுறுத்துவதாக நானதளனை அர்த்தப்படுத்தி கொள்கின்றேன்.
“பரிமேலழகர் உரையில் கொள்ளத்தக்கன பல உள. எனினும் அதன் நிறம் தமிழன்று. வள்ளுவர் கூறிய பொது அறத்தை ஒது குலத்துக்கு ஒரு நீதி கூறும் மனு முதலிய நூலிற் காண்கவென்று அது கற்பிக்கின்றது. பெண்கல்வி வேண்டாமென்று பேசுகின்றது. காமத்துப்பாலும் வடவர் வழித் தென்கிறது. அதனால் தமிழரது பண்டைப் பெருமை நெறி மறைவுற்து வருகைக் கொற்கை மதிப்புறுவதாயிற்று.
கா.சு.பிள்ளை தமிழின் நிறமென்றும் தமிழரது பண்டைப் பெருநெறி என்றும் வள்ளுவர் கூறும் பொது அறத்தையே அளிக்கப்டுத்துகின்றார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வாழ்வறகே தமிழின் நிறமாகும். வர்ணதர்மமே ஆரியத்தின் வர்ணமாகும்.
***********
17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை பியோக விவேகம் இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து எனும் இலக்கண நூல் மூன்றுமாம். முறையே இவற்றின் ஆசிரியர்களான சுப்பிரமணிய தீட்சிதரும் வைத்தியநாத தேசிகரும், சாமிநாததேசிகரும் தமிழின் இலக்கண இலக்கியங்கள் சமஸ்கிருதத்தைப் பின்பற்றி எழுந்தனவே எனதும் நிலைப்பாட்டில் நின்றோரே இவருள்ளும் சாமிநாத தேசிகர் தமிழில் யாதுமில்லை என்னும் அளவிற்கு மற்றிருவரைக் காட்டிலும் மடிதந்து முந்தற்றவர்.
“அன்றியும் தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?
அன்றியும் அய்ந்தெழுத் தானொரு பாடையென்று
அறையவு நாணுவர் அறியுடை யோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக (பாயிரம்)
“வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது சியமமே என்பது தோன்ற வடநூல் வழி கலவாதே என்பது முதலாக, யானும் அதுவே என்பதீறாக வினா விடைவிற் கூறினோம்”
சாமிநாத தேசிகர் (இலக்கணக் கொத்து மூலமும் உரையும் ப.8.9.11) இதனையொட்டி மொழிநூல் பயிற்சி அற்றது. வரலாற்றுப் பார்வையற்றது வடமொழிக் கொடுங்கோலாட்சிக்கான சான்தாரம் எனவாங்கு காலந்தோறும் எழுந்த எதிர் வினை தரப்புகளை சே.இராசேந்திரன் தம்நூலில் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார்.
பாஷைநூல் எனும் அரிய சாஸ்திரத்தின் பயிற்சியும் சரித்திரக் கண்ணும் இல்லாத குறைவினா லெழுந்த பொருந்தாக் கூற்றுக்களா மென்பது திண்ணம் – வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (தமிழ் மொழியின் வரலாறு-ப.30)
“மொழி நூலுணர்ச்சியற்ற சுவாமி நாத தேசிகர் தமிழுக்குச் சிறப்பான உரிய எ, ஞ, ழ, ற, ன என்ற எழுத்துக்களால் ஒரு மொழி இருக்கவும், முடியுமா என்ற கேள்வி கேட்கவுந் துணிந்தார். (ப.88) “இவை எல்லாம் தமிழ்மொழி யுலகில் வடமொழி கொடுங்கோலாட்சிபுரிந்து வந்தது என்பதற்குத் தக்க சான்றாகும். இக்கொடுங்கோலாட்சியை எதிர்க்கத் தூய தமிழ்க் கிளர்ச்சி தோன்றியதாயின் அது நியாயமே”
-எஸ்.வையாபுரிப்பிள்ளை (தமிழின் மறுமலர்ச்சி ப.89)
“மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுவதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியாயிருந்தலால் நாகரிகம் வாய்ந்த் எந்த மொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது... இங்ஙனம் காணப்படுதல் தமிழ்மொழியின் நாகரிகச் சிறப்பையும் அதன் வளப்பத்தினையும் காட்டுகின்றதே யல்லாமல், அதற்கு அது தாழ்தலைக் குறிக்கின்றதில்லை, இதனைச் சிறிதும் உரைமாட்டாமல் நாமிநாத தேசிகர், ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ எனக் கூறியது வெற்றார வாரமின்றிப் பிறிதென்னை?”
- மறைமலையடிகள் (தமிழில் பிறமொழிக் கலப்பு ப.4) வடமொழிக் கொடுங்கோலாட்சி தூயதமிழ் கிளர்ச்சி என்றெல்லாம் இருத்தல் இயலாதென மறைமலையடிகள் பேசிநிற்பதும் விசித்திர முரண்நகையாய் இவற்றிக்கூடாகக் காணக்கிடக்கின்றன.
“சாமிநாத தேசிகரின் வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியின் இலக்கணமுமொன்றே யென்றெண்ணுக என அமைந்த பாயிரத்தை மிக வன்மையாத் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் (சிவஞான முனிவர் கண்டிக்கிறார்)
“ஐந்திர நோக்கிற் தொகுத்தா எனின் தமிழ் மொழிப் புணர்ச்சிக் கண்படும் செய்கைகளும், குறியீடுகளும் வினைக் குறிப்பு, வினைத் தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், அகம் புறமென்னும் பொருட்பாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகு பாடுகளும் அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரென்ன பிறவும் வடமொழியாற் பெறப்பாடமையானும்” என்னும் உரையில் தமிழ் மொழியின் செய்யுளிலக்கணம், பொருளிலக்கணம் எல்லாமே தனித்தன்மையுடையன, அவற்றில் வடமொழியின் செல்வாக்குச் சிறிதுமில்லை” என்பதை அவர் (தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம் ப.27)
இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற இலக்கணகொத்தை மறுத்து, தமிழ்மொழி இலக்கணத் தனிச்சிறப்பில்புகள் இவை இவை எனச் சிவஞான முனிவர் இனம் காண்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றொரு கோணத்தில் மடங்களின் வாயிலான கல்விச் சூழலூடே ஊடாடிக் கிடக்கின்ற சமயச் சார்பு, சமயக் காழ்ப்பு இவற்றைப் பற்றிப் பேசுமுகமாக ஆ.சிவசுப்ரமணியன் சித்திரிப்பதைக் காண்போம்.
“சங்க காலத்தில் மன்றங்களில் பயிற்றுவிக்கப்பட்ட கல்வியானது கடிகைகள், மடங்கள் மற்றும் கோயில்களுக்குள் நுழைந்த பின்னர் அதுதான் சமயச் சார்பற்ற தன்மையை இழந்து, சமயம் சார்ந்த கல்வியாக மாறி விட்டது. அத்துடன் மநுதாமத்தை உள்வாங்கி கல்வியைப் பலருக்கு எட்டாக்கனியாக்கி விட்டது செய்யுள் இலக்கணம் கூற வந்த பாட்டியல் நூல்கள், சாதி வேறு பாடுகளை யாப்பு வகையிலும் புகுத்தின. பாடல்களின் எண்ணிக்கையளவும் எழுதப்படும் ஓலையின் நீளமும் கூட சாதியடிப்படையில் வரையறுக்கப்பட்டன. இதன் விளைவாக நம் இலக்கியக் கல்வி என்பது சமயம் சார்ந்த கல்வியாக படிப்படியாக மாற்றமடைந்தது. சமயம் சார்ந்த புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் இலக்கிய கல்வியில் சிறப்பிடம் பெற்றன. சமயக் காழ்ப்புணர்வினால் சிறந்த இலக்கிணங்களைப் புறக்கணிக்கும் நிலையும் கூட உருவானது – ஆ.சிவசுப்ரமணியன் (உங்கள் நூலகம் ஜுலை-08) அதற்கான எடுத்துக்காட்டாக இலக்கணக் கொததிலிருந்து சுட்டிக்காட்டுகின்றார். அதில் சாமிநாத தேசிகர் தப்பித்தவறிச் சுட்டிக்காட்டிய ஒரே ஒரு சித்தர்பாடல்கள் தவிர சைவ சமய சாத்திர தோத்திர நூல்களை மட்டுமே உச்சிமேற் கொண்டாடி நிற்கின்றார். வேதத்தை அபௌருஷய (கடவுளாற் படைக்கப் பட்டது) எனப் புனிதங்கற்பிப்பதைப் போலவே தேசிகரும் திருவாசகத்திற்குப் புனிதங் கற்பிக்கின்றார்.
மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம் அன்றியும், அழகிய சிற்றம்லபமுடையான் (சிவபெருமான்) அவர் (மாணிக்க வாசகர்) வாக்கிற கலந்திருந்து, அருமைத் திருக்கையாலெழுதினார். அப்பெருமையை சோக்காது. சிந்தாமணி, மாக்கதை முதலிவற்றோடு, சேர்த்துச் செய்யுள்களோ டொன்றாக்குவர். அம்மட்டோ இறையனார் அகபொருள் முதலான இலக்கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன்கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும், ஒரு பொருளாக எண்ணி, வாணாள் வீணாகக் கழிப்பார். அவர் இவைகளிருக்கவே அவைகளை விரும்புதலென்னெனின், பாற்கடலுட் பிறந்து அதனுள்ளே வாழு மீன்கள், அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை என்க சாமிநாத தேசிகர் (இலக்கணக் கொத்து – ஏழாம் நூற்பா உரை)
இத்தகைய சாமிநாத தேசிகரின் குரலுடைய தொடர்நீட்சயாகவே இரசிக மணி டி.கே.சி.யின் குரலுங்கூட எதிரொலிக்கலாகின்றது. தருமபுரம் மடத்திலவர் இரண்டு நாளாகத் தங்க நேர்ந்த போது மகாசந்நிதானம் நடத்தும் பூஜையான பக்தியாலும் ரம்மியத்தாலும் அவருக்கு வாய்த்த மனசுவலிக்கும் அழகானந்த லயிப்பு அவருக்கு சாந்தி நிகேதனத்தில் கிட்டவில்லையாம். கிறித்து மாக்க சாயலான வறட்சி, நம்மவர்கள் பொருள்புரியாமல் கிரியைகளை வெற்றிச் உடங்காகி விடுகின்றனர் என்கிற ஆதங்கத்தில் ரசிகமணி புலம்புகின்றார்.
எல்லாம் கிளிப்பிள்ளை மயம், சமஸ்கிருதம் விட்ட பாக்கியை இங்லீஸ் வந்து பூர்த்தி செய்துவிட்டது. ஆனால் சங்க நூல்கள் வந்து அவர்களை ஒன்றும் செய்யவில்லை. அவ்வளவுக்கு அவர்கள் தப்பினார்கள் நமக்கோ ஓம்குண்டம் சமஸ்கிருதம் இங்லீஸ், சங்கத்தமிழ் நாலுமே வந்து குட்டிச்சுவர் அடித்து விட்டன. உண்மையில் கிரியைகள் சந்தோஷத்தை உண்டுபண்ண வேண்டும். பொருள் இருக்க வேண்டும். எல்லோரும் அனுபவிக்க வேண்டும். இதற்கெல்லாம் நேர்மாறாக நம்மை வறிம்சைக்கு உள்ளாக்குகின்றன. அர்த்தமில்லாமல் பேசுகிறது என்பது அளவற்ற கேட்டுக்கு விளை நிலம். நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று என்கிறார் குறளாசிரியர். இப்போது எங்கே பார்த்தாலும் பயனில சொல்லத்தானே காண்கிறோம். காரணம் மேலே சொன்னபடி மூன்று வடமொழி, இங்லீஸ் செந்தமிழ் டி.கே.சி.(ரஸஞ்ஞானி ப.35, 36, 38) சங்க இலக்கியம் சிலம்பு, திருக்குறள், கம்பராமாயணம், நான்கையும் பேரிலக்கியங்கள் ஆக வரையறுப்பார் தி.சு.நடராசன், தாமறிந்த புலவரிலே கம்பன், வள்ளுவர், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லையெனக் கொண்டாடுவார் பாரதி. இவ்வாறே ஈராயிரமாண்டு இலக்கிய வரலாற்றில் மறுபேச்சுக்கு இடமின்றி அவர்களே தகிச்சிகரங்கள் என வழிமொழிவார் சிற்பி தி.சு.ந.வரையறையைக் காண்போம்.
“இந்நான்கிற்கும் ஊடிழையாக ஒரு பொதுமையான கருத்து நிலை மையங்கொண்டுள்ளது. அதாவது சாதி சமயச் சார்பற்ற ஒரு பொது மனித குல மேன்மை (Secular and universal Humanity ) அதனை அடியொற்றிய தமிழ் இனப்பெருமை (Tamil Ethos) என்பது மையமாக அல்லது செய்தி விடுப்பாக இருக்கின்றது. இவற்றின் உறுப்புகளில் அல்லது பகுதியில் சமய உண்மைகளும் சார்புகளும் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் இவை மொத்த நிலைப் படுகின்ற போது, பக்கச் சார்பான ஒற்றைச் சமய மேம்பாடு ( Religaus Hegemcony) என்ற கருத்து நிலை அழிந்து போய் விடுகிறது. தி.சு.நடராசன் (தமிழின் அடையாளம் ப.21)
இதிகாசங்கள் திராவிட மக்களை இழிவு படுத்துபவை என்கின்ற அடிப்படையில் கம்பராமாயணத்தை எதிர்த்து தீபரவட்டும் என இயக்கம் நடத்தியது திராவிட இயக்கம். எனவே கம்பராமாயணத்தைத் தவிர்த்த மேற்கட்டிய மூன்று பேரிலக்கியங்களை மட்டுமே அவ்வியக்கம் கொண்டாடி நின்ற தன் சூட்சுமமும் இதுவேதான். ஆக இத்தகு பேரிலக்கியம் யாவற்றையுமே பொருட்படுத்தாமல் ஒற்றைச் சயம மேம்பாட்டையே முன்னிறுத்தும் தேசிகருக்கு வாய்த்த பாற்கடலென்பது சைவச் சிற்றிலக்கிய மீன் தொட்டி மட்டுமே. வேறு வார்த்தையில் கூறுவதானால் ரசிகமணி இழை பின்னிய தன் வலையிலேயே தானும் சிக்கி உழலும் பரிதாபச் சிலந்தியே.
நான் உங்கள் முன் வைக்கும் ஒரே நிபந்தனை நான் கம்பன் என்று சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் அவ்வளவே. இதற்கு உட்பட்டால் கம்பனின் இன்கங்களை உங்களுக்குக் காட்டுகின்றேன்.. இது கம்பர் இல்லை என்றால் அவ்வளவு தான். மேற்கொண்டு பேச்சில்லை – டி.கே.சி.
(கம்பர் தரும் ராமாயணம்)
நவீன உண்மை ஒன்று வெளியாகும் தருணத்தில் அதனை ஆவலோடு எதிர்கொள்ளுந்திராணி இல்லாமல் வெறுப்பவர்களை வெளிச்சந்தைக் கண்டு அலறும் ஆந்தைகள் எனப் பாரதி சுட்டிக் காட்டுவதே இங்கே மனத்தில் மின்வெட்டுகின்றது. சாமிநாத தேசிகராகட்டும் அல்லது டி.கே.சிதம்பரநாத முதலியாராகட்டும் இத்தகைய சைவமடச்சம்பிரதாய வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் நம்புகிற கடவுளின் சாட்சிகள் மட்டுமே அவருக்குக் கிடைப்பதைப் போலவே அவர்கள் நம்புகிற இலக்கியங்கள் மட்டுமே அவர்களுக்கான மனசுவக்கும் மனோரம்மியமானவை ஆகிப் போகின்றன. அவர்களது கடவுள் நம்பிக்கையைப் பற்றிப் பேச நமக்கேதுமில்லை. ஆனால் நம்பிக்கைகளால் தீர்மானிக்கப் படுவதில்லை இலக்கியங்கள் என்று மட்டுமே நாமவர்களிடம் சுட்டி விடை பெறலாம் அவ்வளவே.
சாமிநாத தேசிகர் திருவாவடுதுறை மடத்தின் ஈசான (தலைமைத் தேசிகர் சிவஞான முனிவர் அதே மடத்தில் பெரும்புலவராய் வீற்றிருந்தவர். வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கம் நூலுக்கு சிவஞான போதத்தின் உரைப்பகுதியில் இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் கண்டன நூலைச் சிவஞான முனிவர் எழுதினார். இலக்கண விளக்கச் சூறாவளி பற்றிய இருபதிவுகளைக் காண்போம்.
“இலக்கிய இலக்கண மொழித்துறையில் வடமொழியாளர் அஞ்சத்தக்க வகையில் அம்மறுப்பு எழுந்தது சே.இராசேந்திரன் (ப.20)
“நம் தமிழ் இலக்கியவாதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்கிற மரபை ஏற்படுத்தி வைத்த சிவஞான முனிவர் தன் இலக்கண விளக்கச் சூறாவளி நூலோடு காட்சி தருகிறார் இலக்கண விளக்கம் சொன்ன நூல்களை எல்லாம் சூறாவளியாகி அழிக்க வந்தார். நூல் முழுக்க ஒரு பாராட்டு கூட இல்லை. வெறுத்துப்போன சி.வை.தாமோதரனார் அநியாயக்கண்டனம் என்றார். வஸந்த் செந்தில் (சாளரம் ப.43) சிவஞான முனிவரைக் கொண்டு இலக்கண விளக்கச் சூறாவளியை வெளியிடச் செய்த திருவாவடுதுறை ஆதீனத்திடமே போராடி அவ்வாதீனப் பணியாகவே இலக்கண விளக்கம் மற்றும் சூளாமணி பதிப்புகளைச் சி.வை தாமோதரம்பிள்ளை வெளிக் கொணர்ந்தார். அவ்வாதீனத்திற்கும் தருமபுரி ஆதீனத்திற்குமிடையே பன்னூற்றாண்டுக் காலமாகப் புகைந்து கொண்டிருந்த பிணத்தின் பின்புலத்தில் மாறுபட்ட சித்தரிப்பைத் தரமுற்படும் கா.இரவிச்சந்திரன் சி.வை.தா.வின் பதிவையும் அதுபற்றிய ஓர் எதிரீடு பற்றியும் எழுதிச் செல்கின்றார்.
இஃது (இலக்கணவிளக்கம்) இவ்வாறு பிரசித்தி அடைந்து வருகையில் ஸ்ரீனிவாச பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனத்தார் சோழ நாட்டில் தமது ஆதீன மரபையொத்து சந்தான குரவர் வழித் தோன்றியமையானும், பலகாலும் பல விஷயங்களிலே தம்மோடு முரணிய தருமாதீனபுர சம்பந்தம் இதற்கு ஒரே வழி உண்மை பற்றி இதன் மகிமையைக் குறைக்க நினைத்தோ அல்லது நன்னூலின் பண்டைக் கொள்கையான் அதன்மேற் பச்சாத்தாபங் கொண்டோ நன்னூலை மேன்மைப்படுத்த எண்ணி அதற்கு தருமாபுராதீனத்துச் சங்கர நமச்சிவாயப் புலவரால் ஒரு விருந்தியுரை எழுதுவித்தும், அதுவும் நமச்சிவாயப் புலவரால் ஒருவிருத்தியுரை எழுதுவித்தும், அதுவும் போதாதென்று கண்டு, அம்முனிவரால் இலக்கண விளக்கச் சூறாவளி என்று ஓர் அநியாயக் கண்டனம் இயற்றுவித்து இந்நூலை நசுக்க முயல்வாராயினர் சி.வை.தாமோதரம்பிள்ளை.
சி.வை.தா.வின் இத்தாக்குதலுக்குத் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நெருக்கமான சபாபதி நாவலர் தம்முடைய திராவிடப் பிரகாசகை என்னும் நூலின் முன்னுரையில் எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார்.
கா.இரவிச்சந்திரன் (1 புறனடை 1 ஜனவரி 2012)
இரவிச் சந்திரன் குறிப்பிடும் யாழ்ப்பானத்துக் கோப்பாய் சபாபதி நாவலரின் தாமோதரக் கண்டனமான திராவிடப் பிரகாசிகைத் தரப்பு சி.வை.தா.வின் இலக்கண விளக்கச் சூறாவளி மதிப்பீட்டின் மீதான சி.வை.தா.வரலாற்றாசிரியர் தரப்பு, வஸந்த் செந்திலின் தரப்பு ஆகியவற்றைக் காண்போம்.
“தமிழ்த் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், இலக்கிய மரபினையும், சரித்திர மரபினையும் நல்லாசிரியர், வழிநின்று தெளிதற்குரிய, நற்றவ மாட்சியுடையவரல்லாதார் சிலர், இக்காலத்துத் தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியினும், பிறமொழியினும் பலவாறெழுதி வரம்பழுத்தலானும் சபாபதி நாவலர் (திராவிடப் பிரகாசிகை) அங்ஙனந் தாபிக்கப் புகுந்த பிள்ளையவர்கள் யோகீஸ்வரர் தெரிந்த குற்றங்களில் ஐந்தினை அவர் சொற்ற முறைப்படியே யெடுத்துப் போதிய நியாயங் காட்டித் தர்க்கவிலக்கணஞ்சிதைவுறாது எவருமங்கீரிக்கும் வண்ணம் கண்டித்து, அவையும் அவை போன்ற பிறவும் போலிக் குற்றங்களே யன்றி, நியாயமானவையல்லவென்றும், வாதஞ் செய்யப் புகுங்கால் நிலையாதனவா மெனமென்னும் கரதலாமலகம் (கரதலா கமலம்) போற்காட்டி இலக்கண விளக்க மகிமையை நாட்டினர்.
எஸ்.காரள சிங்கம் (ஸ்ரீமான் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் சரித்திரம்)
“அவரே (சி.வை.தா.வே) ஓரிடத்தில் அவரது பேரறிவு இமய மலை ஒப்பது. எளியேன் சிற்றறிவு அதற்குமுன் ஏறி பூதூஸ போல்வது. அன்னோர் தப்பை ஒப்பென்று தாபிக்கவும், ஒப்பைத் தப்பென்று விவாதிக்கவும் வல்லர். அஃது அவர் காஞ்சிபுரத்து வைஷ்ணவ வித்துவான்கள் கொண்ட இறுமாப்பை அழித்தல் பொருட்டு அவர்கள் தலைமேற் கொண்ட இராமாயணத்து நாந்திச் செய்யுளை முதலில் பங்கப்படுத்திப் பின்னர், அதனையே அவர்கள் தலைவணங்கித் தம் பிழையைப் பொறுத்தருக்க என்று வேண்டிய பொழுது சரியென்று நாட்டியதனான் வாங்கும் என்று சரணடைகிறார். இந்த நேரத்தைக் கண்டனமும் மறுப்பும் களித்தாடிய காலமது என்கிறார் பெரியவர் (?) ஒருவர்.
வஸந்த் செந்தில் (சாளரம் ப.43-44) இவ்வாறு குறிப்பிடப்படும் அக்காலக்கட்டத்தில் எவ்வாறு கண்டனமும் மறுப்பும் களித்தாடின? கண்டமை என்பது எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்பட்டது? நாமின்று அதனை எவ்வாறு அரித்துப் படுத்துவது என்னுமிவை குறித்த தரவுகளையும் அகராதிப் பொறுந்துகளையும் தொகுத்துக் காண்போம்.
“7ஆம் நூற்றாண்டில் கவனிக்க வேண்டிய நிகழ்வு சமய எதிர்ப்புகள் குறிப்பாகச் சைவம் கிறித்தவம், இரண்டு சமயங்களுக்கு இடையில் நிகழ்த்தப்பட்ட கருத்தாடல்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சமயக் கருத்தை எதிர்த்து இன்னொரு சமயத்தார் வாதிடுகின்ற முறையில் அமைவன கண்டன நூல்கள். மறுப்பு, திக்காகரம், நிந்தனை, அடம், தூலினம், அசப்பியச்சொல், கண்டனம், நிராகரணம் இப்படி ஒரே இலக்கிய மாதிரிக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தினர் சே.இராஜலட்சுமி (தமிழ்மணி தினமணி 15.5.2011) “Criticism என்ற சொல் கண்டனம் (சாடுதல்) என்றும் விமர்சனம் (திறனாய்வு) என்றும் பொருள்படும். அதே வேளை கண்டனம், விமர்சனம், இரண்டும் ஒத்த சொற்கள் ஆகா விமர்சனம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கண்டனம் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வேறுபாடு சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. (ப.59) மணி வேலுப்பிள்ளை (மொழியினால் அமைந்த வீடு)
“கண்டனம் பெ. (நிகழ்வை, செயல்பாட்டை, கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வன்மையாகத் தெரிவிக்கும் நிலைப்பாடு Condemnation, denun இராஜலட்சுமியின் பதிவு அக்காலச் சூழல் பற்றிய நோக்கிலும், மணி வேலுப்பிள்ளை ஈழத்தமிழர் ஆகலின் அவரது பதிவு ஈழத்தின் இவற்றிற்கும் அப்பால் குறிப்பிட்ட பனுவற் சூழமைவில் (Texeeal Context) கண்டனம் என்பது எவ்வாறு பாவிக்கப்பட்டுள்ளது என்கிற முறையிலேயே நாமதனை அரித்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சி.வை.தா.இலக்கண விளக்கச் சூறாவளியை அநியாயக் கண்டனம் எனக்குறிப்பிடுவது கவனங்கொள்ளத்தக்கது. அதன் பொருளை அறியாமலே இரவிச்சந்திரனும், வஸந்த் செந்திலும் தாக்குதல் என்ற பொருளிலேயே கண்டனம் என்பதனைப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் அநியாயக் கண்டனம் எனும் சி.வை.தா.வின் சொல்லாட்சியில் அநியாயம் எனும் முன்னொட்டுச் சொல்லுடன் பாவிக்கப்படும் போது தான் அது முறையற்ற கண்டனம் எனப் பொருள்படுமேயன்றி, கண்டனம் என்று மட்டுமே பாவிக்கப்படுகையில் அது தாக்குதல் என்று பொருள்படாது. மாறாக தவறாக முன்னிறுத்தப்பட்ட தரப்புகள் மீதான கண்டித்துரைக்கும் கடிந்துரை என்று தான் கண்டனம் என்பதனை அர்த்தப்படுத்த வேண்டும்.
கடுமையாக ஒருவறை ஒருவர் தாக்கிக் கொள்வதென்பது காழ்ப்புணர்வின் வெளிப்பாடே. காய்தலெனில் வெறுப்பின் விளைவான தாக்குதல் உவத்தல் என்பது விருப்பின் வழிப்பட பாராட்டுதல், காய்தலும் உவத்தலும் அற்றதே ஆய்வுச் செலநெறி. எனவே தாக்கிக் கொள்ளும் மரபிற்குச் சிவஞான முனிவரை ரிஷிமூலம் ஆக்க முயலும் வஸந்த் செந்திலின் அவதூறு வன்மையான கண்டனத்திற்குரியதே.
யாழ்ப்பாணத்துக்கோப்பாய் சபாபதி நாவலரே வேதநெறி வழுவாத ஆகமச் சைவ நெறிகளில் ஊன்றி நின்றவர். சி.வை.தாவின் ஆய்வு முறையியலையும், முடிபுகளையும், கால முற்பாடு, பிற்பாடு கணிப்பீடுகளையும் வேத வழக்கோடு மாறுபடஞ் செயல் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தவர். அவர் வரம்பழித்தலான் என்பதன் பொருள் வேதவழக்கு ஆகம மரபுகளுக்கான அத்துமீறல் புண்யா பலனாய் வாய்ந்த பிறவிக் கொடையான் அறிவு மாண்பு என்பதேயாகும். சபாபதி நாவலர் வலியுறுத்த முனையும் கல்விப் பயிற்சி முறை சைவமடங்கள் சார்ந்த கல்விப் பயிற்சி (அது குறித்து பின்னர் வள்ளலார் பற்றிக்கூறும் போது காண்போம்) சி.வை.தா.சபாபதிநாவலர் இருவர் பற்றிய கைலாசபதி கணிப்புகள் மேலதிகப் புரிதலுக்கு உறுதுணையானவாகும்.
“சி.வை.தா.பிள்ளையிடத்து வரலாற்று மெய்ம்மை (Historicity) நாட்டத்தைக் காணக்கூடிய தாயிருக்கிறது. சபாபதி நாவலரோ விழுமியங்களையே வேதவாக்கு எனக் கூட்டி வரலாற்று நோக்கை நிராகரித்தார். மூலபாடத் திறனாய்வு வளர்ச்சிக்குப் பெரும்பங்களித்து தாமோதரம் பிள்ளை சூளாமணிப்பதிப்புரையில் (1889) கூறியுள்ள சில கருத்துகள் அவரது சுதந்திரப் போக்கையும் அவசிய மேற்படின் மரபையும் நிராகரித்து உண்மை காடும் மனோபாவத்தையும் அய்யத்துக்கு இடமின்றிக் காட்டுகின்றன க.கைலாசபதி. (ஈழத்து இலக்கிய முன்னோடிகள்)
மேலை நாட்டுக்கல்வியும் அதையொட்டிய வேலை வாய்ப்பும் அவர் காலத்தில் கிறிஸ்த்தவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்ததால் அதனை பயிலுமுகமாகவே சி.வை.தா. கிறித்துவந்தழுவி சி.எல்.டபிள்யூ கிங்ஸ்பரி எனக்கிறித்துவருமானார் (ஆதாரம் காராளசிங்கம் நூல் மாறாக சான்ஸ்வின்ஸ்லோ என மாற்றிக் கொண்டதாக தமிழ்நூல் பதிப்புப்பணியில் 2 வே.சா. நூலாதாரத்தை முன்வைத்து இரவிச் சந்திரனால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதமாற்றப் பின்புலமும் சபாபதி நாவலருக்கு சி.வை.கா.வின் மீதான வெறுப்பிற்குக் காரணமாயிற்று உரிய பனுவற் ஆழமைவு செந்தில் எடுத்தாண்ட சி.வை.தா.மேற்கோளின் உரிய முழுவடிவத்தை இங்கே காண்போம்.
“சூறாவளி மாறாய் மோதியென்? கன்ன துரோண சயித்திரர் என்னதுரோகம் இயைத்திடினும் தேரொன்று கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது”
“அகத்திய முனிவர் வரத்தினாற் றோன்றித் தென்மொழி வடமொழிக் கடல்களின் நிலைகண்டுணர்ந்து முன்னும் பின்னும் தமக்கிணையின்றி வீறித் தமிழிலுள்ள நூல்களுக்கெல்லாம் சீரோததினமாய்ச் சொலியாதிற்கும் மாபாடியத்தை அருளிச்செய்த யோகீஸ்வரரது பேரறவு இமாசலமொப்பது.
எளியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதூளி போல்வது அன்னோர் தப்பை ஒப்பென்று தாவிக்கவும், ஒப்பைத்தப்பென்று விவாதிக்கவும் வல்லவர்.
இன்னோரன்ன பெருஞ்சிறப்பினரை எதிர்த்து, இலக்கிய இலக்கணப் படைக்கலங்கள் தாங்கி அவர் சூறாவளியை மாறாயழிக்கப் புகுந்தேனென்று கொள்ளன்மன். அவரும் அவர் மரபினோரும் உவந்து பாராட்டிய நன்னூலுக்கு இந்நூல் இழிசடைய தன்றெனும் மாத்திரையே யான் சொல்லலாயினேன் – சி.வை.
தாமோதரம்பிள்ளை (காராளசிங்கம் நூல் மேற்கோள் சிவஞான முனிவரின் நூலை மறுத்துரைக்கப் புகுந்த போதுங்கூட அவரது தனிச்சிறப்பியல்புகளையும், மாபாடியத்தின் ஒருதனி வீறான அரும்பாங்கையும் விதந்து சுட்டிப் போற்றியும், அவர் மீதான மதிப்பின் இழையறாமலே தம் தரப்பு நியாயத்தின் நிலைப்பாட்டையும் கறாராக முன்னிறுத்தியும், தமது கண்டனத்தின் எல்லையையும் சுட்டிக்காட்டியும் வலியுறுத்தும் பாங்கு நம்மை மலைக்கவைக்கின்றது. இத்துடன் காராள சிங்கம் எவ்வாறு இலக்கண விளக்க மகிமையை சி.வை.தா.நிலைநாட்டினார் என எடுத்துரைப்பதும் பரபக்கம் மறுத்து சுபக்கம் நிறுவும் வாத விவாத மரபின் அமிசங்களை நமக்குணர்த்துகின்றது போதிய நியாயங்காட்டித் தர்க்கவிலக்கனந் சிதையாது எவருமங்கீகரிக்கும் வண்ணம் கண்டித்து எனக்காராளசிங்கம் சுட்டுமிடத்து ஏலவே அர்த்தப்படுத்திய வண்ணம் சி.வை.தாவின் இலக்கண விளக்கச் சூறாவளி மீதான எதிரீடு நியாயமான கண்டனமாகவே அமைந்தியல்கின்றது. இவற்றான் ஏலவே சி.வை.தா.வின் மீது நமக்கிருக்கும் மதிப்பு மீதூர்வதோடு இலக்கண விளக்கம் இலக்கண விளக்கச் சூறாவளி சி.வை.தாவின் எதிரீடு மூன்றையும் தேடிப்பிடித்து ஒருசேர வாசிக்க வேண்டுமென்ற விழைவை நம்மில் இவை எழுப்பி விடுகின்றன. உ.வே.சா வைச் சி.வை.தா.வோடு ஒப்பிட்டு கைலாசபதி கணித்துரைப்பதும் இங்கே கவனங் கொள்ளத்தக்கதாகும்.
குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த பெருந்தன்மை அவரிடத்து (உ.வே.சாவிடத்து)க் குறைவாகவே இருந்திருக்கிறது. மாத்திரமென்று அவரது கல்வியின் தன்மையாலும் ஏற்பட்டதெனலாம்...” இவரோடு (உ.வே.சா.வோடு) தாமோதரம் பிள்ளையை ஒப்பிடும்போது உன்னத பதிப்பாசிரிய இலக்கணங்கள் அவரிடமே (சி.வை.தா.விடமே) பொருந்தியிருக்கக் காணலாம். இதற்கு முக்கியக் காரணம் பிள்ளையவர்கள் இளமைக் காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைச்சூழலில் ஆங்கில இலக்கிய ஆள்வாளர் தொடர்பாகவும் பெற்ற மனப்பக்குவம் எனலாம்”
க-கைலாசபதி முற்சுட்டிய நூல்.
உன்னத பதிப்பாசிரிய இலக்கணம் யாவும் சி.வை.தா.விடம் காணக் கிடப்பதாகக் கைலாசபதி சுட்டிக்காட்டுவதற்கு எடுத்துக் காட்டாகவே தேரொன்று கிடையாத குறையன்றோ இலக்கண விளக்கம் மடங்கியது எனும் அவரின் அரியநூல் அச்சுவாகனம் ஏற இயலாமைக்கு அழுந்திநிற்கும் நெஞ்சத்தவலத்தையே இமைகாணலாம்.
சென்னை பல்கலை முதல் இளங்கலைப்பட்டதாரி, கல்லூரிப்பேராசிரியர், தினவர்த்தமானி பத்திரிகாசிரியர், வரவு செலவுக்கணக்கு உயர் உத்தியோகஸ்தர், விசாரணைக்கர்த்தர், புதுவை நியாயசபை நடுவர் முதலான அரச கருமத்துறைத்தனப் பணிகள் ஆற்றியதன் வாயிலாகப் பெற்ற பரந்துபட்ட மக்களுடனான ஊடாட்ட அனுபவங்களும். மேலைக்கல்விப் பயிற்சியால் வாய்ந்த நவீன சிந்தனைகளின் விசாலிப்பும் சி.வை.தாவின் பெருந்தன்மைக்கும் பரிபக்குவத்திற்கும் காரணிகளாயின.
•••••••••
வள்ளலார்க்கும் சங்கராச்சாரியாருக்கும் இடையில் நிகழ்ந்த ஓர் உரையாடலுக்கூடாகவும், வள்ளலாரின் திரு அருட்பா உரைநடைப் பகுதி முதலியவற்றாலும், ஆறாந்திருமுறை வாயிலாகவு, ஆரியம் மற்றும் தென்மொழி குறித்த அவரது கணிப்பீடுகளையும், வடமொழி பயில்வதில் உள்ள சிக்கல்களையும், உரைகோள் முறைமைகளையும் பற்றியெல்லாம் உணரலாம். சமஸ்கிருதமே உயர்ந்த மொழியென வள்ளலாரிடம் வாதாடிச் சங்கராச் சாரியாரும், கோடக நல்லூர் சுந்தரசாமியும் தோற்றுப் போயினர். இவற்றைப்பற்றிக் காண்போம்.
சங்கராச்சாரியார், உலக மொழிக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி (மாத்ருபாஷா) என்று கூறினார். வள்ளலார் அவர் கூறியதை மறுத்துப் பேசாது தன் கருத்தையும் நிலைகாட்டி சமஸ்கிருதம் தாய்மொழியெனில் தமிழ் வேண்டும் என்று அவருக்குப் பதில் கூறினார். மட்டுமின்றி ஞானம்பற்றியும் நங்கராச்சாரியார்க்கு எடுத்துக்கூறி ஒரு நீண்ட உரையே நிகழ்த்தினார். சங்கராச்சாரியார் மட்டுமல்ல, கோடகநல்லூர் சுந்தரசாமியும் சமஸ்கிருதம் தான் உயர்ந்த மொழி என்று பல அறிஞர்கள் மத்தியில் வள்ளலாரிடம் வாதாடி தோற்றுப்போனார் தவற்றை உணர்ந்து பிற்காலத்தில் நண்பரானார் – ப.சரவணன்.
(சாளரம் இலக்கிய மலர் 2008-ப.110)
‘அவிர ஆரவாரம், சொல்லாடம்பரம், போதுபோக்கு, பெருமறைப்பு முதலிய பெண்மை ஆரவாரமின்றி எப்பாஷையின் சந்தசு (மந்திரங்)களையும் தன் பாஷையுடன் அடக்கி ஆளுகையால் ஆண்தன்மை பொருந்தியதுமான (ப.215) இடம்பத்தையும், ஆரவாரத்தையும், விரயாறுத்தையும், பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது. பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கலையை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம்பற்றச் செய்து அந்தென் மொழிகளாற் பல்வகைத் தோத்திரப்பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் (ப.451-452) இருமொழிகளின் இயல்புகளாக வள்ளலார் இவ்வாறெல்லாம் அவ்வவற்றிற்குரிய அமிசங்களை இனம் கண்டு எடுத்துரைப்பதோடல்லாமல் வடமொழிப்பயில்வில் ஏற்படும் இடர்ப்பாடுகள், எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் பற்றியும் குறிப்பிடுவதனையும் சரவணன் பதிவு செய்துள்ளார்.
பல நாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுரஒலி பேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுதது ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாகவும், பாடமானாலும் பாஷியம், வியாக்கியானம், பீக்கர், ரூக்கா, டுக்காடி முதலிய உரைகோர் கருவிகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்குப் பாஷியக்காரர்கள் வியாஜ்ஜியமான கர்த்தர்கள் டீக்கர் வல்லபர்கள், டூக்கா சூசர்கள் முதலிய போதக ஆசிரியர்கள் இட்டுவது அருமையிலும் அருமையாய் இருக்கின்ற அரியபாஷை – வள்ளலார்.
“பாஷியம் = பேருரை, வியாஜ்ஜியானம் = விருத்தியுரை, டீக்கர் = உரை, டூக்கர் = குறிப்புரை, டுக்காடி=பேருரை முதலிய அனைத்தையும் குறிப்பது – ப.சரவணன் (சாளரம்)
போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து பயிலும் நிர்பந்தம் வடமொழிப்பயில்விற்கூடாக மட்டுமல்ல பாடங்கேட்கும் மடச்சம்பிரதாயங்கள் பள்ளியெல்லாம் அம்பலவான முனிவரிடம் பாடம் கேட்கையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பட்டபாட்டை என் சரித்திரத்தில் உ.வே.சா.எடுத்துரைப்பதன் வாயிலாகவும், கோடல்மரபே கூறுங்காலை, எனத் தொடங்கும் நன்னூல் நூற்பாக்கள் வாயிலாக அவர் வாழ்ந்த சோழர் காலத்திய (1178-1218) கல்விமுறை குறித்த பதிவாகக் கொள்ள முடியுமென ஆ.சிவசுப்ரமணியன் விளக்கிச் செல்வதனாலும் உணரலாம். சமயச்சீர்திருத்தம் செய்வதற்கு வடமொழியும் வேத சாஸ்திரங்களும் தடைகளாக இருக்கலாகாதென்ற மனோபாவத்தில் வடமொழி எதிர்ப்பு தமிழகச் சான்றோர்க்கு ஏற்பட்டதெனப் பேசுமுகமாக வள்ளலார் இலக்கணக் கொத்தை எதிர் கொண்டதையும், வேதத்தை எதிர்கொண்டதையும் சே.இராசேந்திரன் எடுத்துக்ட்டுகின்றார்.
“ழ்ற்ன் முடிநடு அடி சிறப்பிய லக்கரங்களில்முடிநிலை இன்பானுபவ மோனாதீத்த்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை, யுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியால் எனத்தமிழ் எழுத்தொலிகளின் அமைப்பின் சிறப்பைத் தத்துவக் கண்ணோட்டத்தில் அடிகள் தெளிவுறுத்தியுள்ளார்.
சே.இராசேந்திரன் (ப.26)
வருணாச் சிரம மானத்தாற் பந்தப்பட்டேக தேசத்தான் வழங்குகின்ற வேதம், வருணாச்சிரம மானத்தாற் பந்தப்படாது – யாண்டும் பூரணத்தான் வழங்கும் மெய்ம்மொழிக்குப் பிரமாண மாகாதென்க – வள்ளலார் (மேற்கோள் மு.சு.நூல் ப.40) சமயசீர்திருத்தம் செய்வதற்கென இராசேந்திரன் சுட்டுமாப் போல் அவ்வளவிலேயே நில்லாமல் சமய ஏற்பாட்டையே விட்டொழிப்பதாகவே வள்ளலாரின் பார்வை பரிணமிக்கலாகின்றது.
“தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள், ஆதலால் இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலோழிய காருண்ணியம் விருத்தி ஆகி கடவுள் அருளைப் பெற்று அனந்தசித்தி வல்லபங்களைப் பெறமுடியாது. வள்ளலார் (உபதேசப்பகுதி ப.63)
“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக / அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க எனும் வள்ளலாரின் தாரகமந்திர உட்கிடை இதுவேயாகும். திருமந்திரத்திற்கூடாகவும், அப்பரின் காபாலிக (அகப்புறச்சமய) தேவாரக்குரலாகவும், வேதத்தை ஒருபுடை ஏற்றும், வேத எதிர்வழக்காகவும், பனிப்போராக வெளிப்பட்ட ஆரிய எதிர்ப்பு, சித்தர் மரபில் வீச்சுக்களோடு விசையுடன் வீசிடத் தொடங்கி பேதம் யாவும் கடந்த போதமாக – சமயங் கடந்த ஆன்மீகமான சுத்த சன்மார்க்கமாக – ஆரியத்தின் தங்குத்தளம் யாவற்றையுமே மூர்த்தண்யமாக நின்றெதிர்க்கும் சூறாவளியாக ஆறாக திருமுறையில் சுழன்றடிக்கலானது.
“இதுவரை நாம் பார்த்தும் கேட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் கவனம் செலுத்த வேண்டாம் (4-5) இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்களை முழுவதும் குற்றமே (ப.7) சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் இவைகளில் ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது இவைகளுக்கெல்லாம் நானே சான்றாக இருக்கின்றேன். நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று சொல்ல முடியாது அது இப்போது எப்படிப் போய்விட்டது. (ப.8) ஏன் அத்தனை அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. (ப.9) வள்ளலார் (பேருபதேசப்பிழிவு)
“இது தொடங்கி எக்காலத்துக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசாரசங்கற்ப விகற்பங்களும், வருமை, ஆசிரமம முதலிய உலகசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாவண்ணம் வாழ்வோம். ஆன்மநேய ஒருமைப்பாட்டுமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்திலும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க வாழ்வோம் – வள்ளலார்.
(சுத்த சன்மார்க்கச்சத்தியச் சிறு விண்ணப்பம் இவ்வாறு படிக்கத் தெளிவாய் (Crystal clear clarity) ப் பிரகடனப் படுத்திவிடுகின்றார்.
வள்ளலார் விகற்பங்கள் என்பதனை முத்துமோகன் அந்நியமாதலென அர்த்தப்படுத்துகின்றார். அயந்துதிருமுறைவரை அவரை அணைத்து நின்ற சைவசமய சக்திகள் அவரது ஆறாந்திருமுறையைப் பிரசுரிக்கவும் தயாராகவில்லாமல் அவரை விட்டே தெறித்தோடின. இத்தகைய சுத்த சன்மார்க்கத்தின் பெறுபேறாகத்தான் சுயமரியாதை இயக்கமே பிறக்க நேர்ந்தது. அவ்வகையில் திராவிட இயக்கத் தோற்றக் காரணிகளில் ஒன்றாகவும் ஆறாம் திருமுறையின் ஆரிய எதிர்ப்பு கால் கோளிட்டது.
“சுயமரியாதை இயக்கத்துக்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்கள் இருவரும் மாயவரம் சன்மார்க்கக் கூட்டத்தில் பெற்ற பிள்ளையே சுயமரியாதை இயக்கமாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
திரு.வி.க.(புதிய பார்வை 1-15-1966)
திராவிடர் இயக்கம் உருப்பெற அடித்தளங்கள் ஆனைவ எனப் பேசுமுகமாக தமிழகத்தில் ஆறாந்திருமுறை பாடியதன் மூலம் ஆரிய எதிர்ப்பைத்துவக்கி வைத்த வடலூர் வள்ளலார் இயக்கமும் எனச் சுட்டித் தொடர்வார் வே.ஆணை முத்து (சிந்தனையாளன் ஜுன்-1984) பெரியார் மதக்கறையிற்த இலக்கியம் எனச்சுட்டுவதற்கான மூலவித்துக்களும் கூட பேருபதேசத்திலேயே காணக்கிடப்பனவே. பரமார்த்திக சைவசித்தாந்தியும் தத்துவப் பேராசிரியருமான சுந்தரனார் ஆரிய திராவிட இருமை எதிர்ப்பைக் கட்டமைத்ததும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா எனத் தமிழின் சீரிளமைத்திறம் வியந்து போற்றி நின்றதும் விதந்தோதிக்காண வேண்டியனவே.
“உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவெனவிருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்திற்கும் சம்மந்தம் ஒன்றும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன். – சுந்தரம்பிள்ளை (ரசனை அக்.2008)
இவ்வாறவர் தமிழின் நிறத்தை ஆர்யவர்ணத்திலிருந்து விதந்தோரி இன உணர்வின் தனிச்சிறப்பை இனங்காட்டியதைத் தயாளன் சித்தரிப்பார் 1948,ல் திராவிட நாட்டுப்பாடத்திறப்பு விழாவில் திரு.வி.க ஆற்றிய வரையில் குறிப்பிட்டவையும் இத்துடன் ஒருசேர மனங்கொள்ளத்தக்கன.
‘இந்த நாட்டு மக்கள் எல்லோரும் திராவிடர்கள் தான். நானும் திராவிடன்தான். திராவிடர் என்பதற்கு ஓடுபவர் என்று வடமொழிச் சார்புடையவர்கள் சொல்லுவார்கள். ஓட்டுபவர் என்று சிவஞான முனிவர் சொல்லுவார். இவற்றுள் எதைக் கொள்வது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
“ஆரிய கலாச்சாரம் சுரண்டலையும் ஏமாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது. திராவிட கலாச்சாரம் சமதர்மத்தையும் சோலசிசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆரியத்திற்கு ஆட்படவே நம் நிலை மிகவும் தாழ்ந்து விட்டது. திரு.வி.க (குடி அரசு 6.11.1948)
இங்கே திரு.வி.க ஆரிய என வேதாந்த கலாச்சாரத்தையே குறிப்பிடுகின்றன. அன்றையக் காலகட்டத்தில் ஆரிய திராவிடப் பிரச்சினை அபத்தம், ஆபத்தானது. புதை குழியைத் தோண்டிப் பார்க்கும் போக்கு எனவும், கேவலமானது, கேடு பயப்பது இல்லாதது இட்டுக்கட்டியது எனவும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தரப்புகளில் திசை திருப்பப்பட்டது. இவற்றை எதிர்கொள்ளுமுகமாக அன்று பீகார் மாநிலத்தின் இந்தியன் நேஷன் எழுதியதனைத் தம்தரப்பிற்குரிய சான்றாதாரமாக அன்று அண்ணா எடுத்துரைத்தார். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழகத்தில் தி.மு.கழகமும் வெற்றி பெற்ற காலக்கட்டமது. அச்சூழலில் கம்யூனிஸ் கட்சி வெற்றி பெறக் காரணமாக இருந்தது திராவிடப் பண்பாடே என்றெழுதியது அவ்விதழ்.
The Aryan mind which may be charaterised as the Brahminical mind may be sharp, but it is rigid.
It is lurdened with rites and taloors it may be metaphysical but it is not emotional as such it is not very respective.
ஆரிய மனப்பான்மையைப் பிராமண மனப்பான்மை என்று கூறலாம். அந்த மனப்போக்கு கூர்மை நிரம்பியதாக இருக்கலாம். ஆனால் அது வளர்ச்சி பெற மறுக்கும், ஆழ்ந்து விட்ட நிலையில் உள்ளது. தடைவிதிகளையும் சடங்குகளையும் சுமந்து கொண்டிருப்பது வேதாந்தப் போக்காக இருக்கலாம். எனவே புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக் கொள்ளும் வளம் ஆரிய மனப்பான்மைக்கு இல்லை.
“The non-Aryan mind is differently emotional it is receptive to new ideas. The Dravidian mind is a daring mind with expressions and rich varities.
“ஆரியரல்லாதார் மனப்பான்மை நிச்சயமாக எழுச்சிமிக்கது. புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக் கொள்ளும் மனவளம் கொண்டது. அஞ்சாதது. புத்தம் புது முறையைக் கையாண்டித் துடிப்பது Indian Nation (தமிழாக்கம் – அண்ணா தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், தொகுதி 2 கடிதம்-84 படமும் பாடமும் – 3 11-4-1957 – ப-311&312)
இங்கே ஒன்றை நாம் மனத்தில் இருத்தியாக வேண்டும். இன்றைய நிலையில் இருந்து மட்டும் இதனைப் புரிந்து கொள்ள முயலலாகாது. இன்றைய திராவிடக் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் (சுரண்டல், ஏமாற்றுதல், கொத்தடிமைத் தனம், இன உணர்விற்கு இரண்டகம் புரிதல், இரட்டை வேடம் போடுதல்) என்பது வேறு. இது கடுமையாக விமர்சித்தகுரியதே- மாறாகத் திராவிடக் கலாச்சாரம் சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்னும் திரு.வி.க. பார்வையும் எனக்கும் கோத்திரத்திற்கும் சம்மந்தம் கிடையாது. தன்மானங்காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்ற சுந்தரனார் பார்வையும், திராவிட மனம் புதிய கருத்துக்களை வரவேற்று ஏற்றுக் கொள்ளும் மன வளம் கொண்டது. அஞ்சாதது. புத்தம் புதுமுறையாகக் கையாண்டிடத் துடிப்பது எனும் பீகார் இண்டியன்நேசன் பார்வையும் நிறத்தையும் ஆரிய வர்ணத்தையும் விதந்தோறும் அந்தப் புள்ளியிலேயே இவையாவும் சங்கமிக்கின்றன எனலாம். இதற்குப் புறனடையாக நவீனவியலை (Modernity ) எதிர்கொண்ட பாரதியின் பாங்கையும், இதற்கு உதாரணமாக சி.சு.செல்லப்பாவின் கவிதைகளையும் இத்துடன் காண்போம்.
“ஒரு நவீன உண்மை வரும் போது அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்) ஆந்தையே பாரதி (பாரதி தமிழ் வசனத்திரட்டு ப.155)
“சகோதரிகளே! நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தின் சேர்க்கையைக் குறித்துச் சிறிதும் வருத்தப்பட வேண்டாம். அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சவரும் பிசாசன்று – பாரதி (தமிழ் நாட்டு மாதருக்கு)
‘ஒழிக கடவுள் / அழிக சாதி / புரட்சி ஓங்குக / புதுமை தோன்றுக எனக் கூவினாய் / நீயோ, நானோ / மரபான பழைமையும் / முதிர்ந்த நெறியும் / வாய்ந்த நம்வீடு / அந்நியம் ஆவதா/ எனக்குமைகின்றேன்” (ப.49) “சிவப்பின் மிரட்டல் / பச்சையின் விரட்டல் / வெண்மைக்கு வைத்த உலை / ஆன்மீகத் தூய்மைக்கு விழுந்துள்ள வேர்ப்புழு / நிலைப்பின் ஆட்டம் / மீட்டிக்குத் தடுமாற்றம் / ஆன்மீக அராஜகம் / ஒழுக்க திவால் / ஹிப்பி வாழ்வு ஆதர்ஸம”
சி.சு.செல்லப்பா (மாற்று இதயம் (ப.54)
“பூமண்டலப் புதியவிழிப்பின் விடிவெள்ளியாக வள்ளலாரை இனங்காணப் பாரதியால் முடிந்தது (ப.82) நவீன உண்மைகளையும், அய்ரோப்பிய நாகரிகத்தையும் ஏற்ற பெற்றியில் பண்பாட்டுத் தகவலைமைப்பாக (Cultural) (mosis) தகவமைத்துக் கொள்ளும் பரிகக்குவம் பாரதிக்கு வாய்திருக்கின்றது. இங்கு ஆரிய நாடெனக் கொண்டாடும் பாரதி ஆரியவர்ணமாய் அல்லாமல் தமிழின் நிறமாகவே நின்று சுடர்கின்றான். மாறாக அந்நியம் ஆவதா என மனங்குமையும் ஆன்மீகத் தூய்மைக்கு வேப்புழு என அஞ்சிக்கிடக்கும் மாடர்னிட்டியை அஞ்ச வரும் பிசாசாகக் கண்டலமரும் சி.சு.செல்லாப்பின் வண்ணம் ஆரியவர்ணமாகவே எஞ்சிக்கிடக்கின்றது.
அமைப்பியலின் வெளிச்சத்தில் (அமைப்பியல், பின்னமைப்பியல், குறியியல்) காண முற்படுகையில் நமக்கு மொழியின் இலக்கணம் என்பதெல்லாம் அதன் உடற்கூற்றை (Antemy) அதன் கட்டமைப்பை எடுத்துரைப்பதே அதற்கும் அப்பால் நம்மைத் தீர்மானிக்க வல்லதாக தொழிற்படுவது எல்லாம் உள்கட்டுமானமான மொழியின் வழிபாகமே. இங்கே இன்னொரு கோணத்தில் அயோத்திதாசர் பயன்படுத்தும் இருசொற்கள் (இலக்கணம், இலட்சணம்) கருத்தாக்கமாக வளர்ந்தெடுக்கப்பட வேண்டியவை என்முன் நிறுத்தப்படும் பார்வையும் இத்துடன் ஒரு சேர நோக்கத் தக்கதே யாகும்.
“இலக்கணம் போல் வெளிப்பார்வைக் புலப்படாதது இலட்சணம் உள்ளே மறைந்து கிடப்பது. பண்பாட்டுச் செயல்பாடுகளில் வெளிப்படக் கூடியது... இலக்கணம் என்பது அர்த்தம் என்றால் இலட்சணம் என்பது அந்தரார்த்தம் (உள்ளார்த்தம்) கல்வி என்பது இலக்கணத்தைக் கற்றுக் கொள்வது இல்லை. இலட்சணத்தைக் கற்றுக் கொள்வது புறவொழுங்கை இலக்கணம் என்றும் அகவொழுங்கை இலட்சணம் என்றும் சொல்ல வேண்டும். (exterior / interior / maintest / immanent ) டி-தருமராஜன் (புதிய காற்று ஜுன்-2008)
மொழி அறிவை மீறியதே கல்வியென அயோத்திதாசரின் கணிப்பை தருமராஜன் அருமையாக வளர்த்தெடுக்க முற்படுகின்றார். இதே மூச்சில் கால்டுவெல்லின் மிக முகாமையான ஒரு களிப்பினையும் இணைத்துக் காண்போம். “திராவிட மொழிகளின் இடப் பெயர்களும், எண்ணுப் பெயர்களும், பெயர் வினைகளின் சொல்லக்கங்களும், வாக்கிய அமைப்பு முறைகளும், சுருங்கச் சொன்னால் ஒரு மொழியின் உயிர்நாடியென மதிக்கத்தக்க அத்துணை இயல்புகளும், சமஸ்கிருத மொழியில்புகளோடு அப்படையிலேயே அறவே வேறுபடுகின்றன” கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) (ப.60)
மொழியின் உயிர்நாடியான அத்துணை இயல்புகளாலும் தம்முள் அடிப்படையிலேயே இருமொழிகளும் வேறு படுமாற்றை விதற்தோதுகின்றார். இத்தகைய புரிதல்களோடு நோக்குகையில் மொழியின் நிறமான அறம், மொழி தொழிற்படும் பண்பாட்டு அமிசங்கள், மொழியின் உயிர்நாடியான இயல்புகள் மற்றும் மெய்காண்முறைமை, மெய்யியற் பாங்கு எனவாங்கு பாரிய வேறுபாடுகள் ஆரியத்திற்கும் தமிழுக்குமிடையே ஊடாடிக் கிடக்கக் காணலாம். எனவே புலமைப் பயில்வாக வடமொழியைப் பயிலப்புகுவோர் அதற்கான முன்நிபந்தனையாக மேற்சுட்டிய மொழியின் நிறம், இலட்சணம், உயிர்நாடி இயல்புகள்இவற்றைப் புறந்தள்ளிப்போனால் அவர்தம் கல்வி நிற்கும். அல்லாமலும் சமஸ்கிருத எதிர்ப்பு என்பதை வெறும் மொழி இன எதிர்ப்பு என்கிற அளவிலேயே பேச முற்பது மிகை எளிமைப் படுத்தப்பட்ட பண்பாட்டுச் சுருக்க வாதமாகவே (Cultural Reductionism) ஆகவே எஞ்சி நிற்கும் மாறாக சமஸ்கிருத எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த ஆரிய எதிர்ப்பின் ஒரு கூறேயேயாகும்.
••••••••••••

Comments