இலக்கியபீடம் தகர்க்கும் இலக்கியஅரசியல் - ஜமாலன்

சிந்திப்பது படைப்பதற்கே - அதைத் தவிர வேறு படைப்பேதுமில்லை – ஆனால் முதலாவதாக படைத்தல் எனபது சிந்தனையில் ”சிந்திப்பதை” தோற்றுவிப்பதே.
- டெல்யுஸ் (Difference and Repetition, 147) [1]

அரசியல்இலக்கியம் எழுதுவது ஒருவகை என்றால் இலக்கியத்தின் அரசியலை எழுதுவது பிறிதொருவகை. தோழர் பொதி தொடர்ந்து இலக்கியத்தின் அரசியலை எழுதிக்கொண்டிருப்பவர். எந்த பீட உருவாக்கத்தையும் அதன் அடிமடியில் அடித்துத் தகர்ப்பதும், பீடங்களற்ற இலக்கியஆக்கம் பற்றிய அவாவுமே இத்தொகுப்பில் நாம் வாசிக்கும் கட்டுரைகளின் அடிப்படை.  கடந்த 30 ஆண்டுகளில் தோழர் பொதியவெற்பன் அவர்கள் தொடர்ந்து இதனைத் தனது தனித்துவமான இலக்கியச் செயல்பாடாக வரித்துக் கொண்டுள்ளார்.

தோழரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 12-ஆம் வகுப்பு படித்த காலத்தில் (1981-82) நாங்கள் நடத்திய ’ஜனகனமன’ என்ற உருட்டச்சிதழை அவர் நடத்திவந்த ’முனைவனு’-க்கு அனுப்பியபின் ஒருநாள் அவரைச் சந்தித்ததில் துவங்கியது நட்பு. இலக்கியவாசகனாக அவரிடம் கற்றது பல. குடந்தை கல்லூரியில் படித்த அடுத்த மூன்று ஆண்டுகளிலும் தினமும் அவரைச் சந்திப்பதும் இலக்கியம், அரசியல், சிறுபத்திரிக்கை, வாசிப்புகள் என உரையாடல் இரவுவரை நீளும்.  மாலையில் கூடும் இலக்கியஅன்பர்கள், அதன் பின் ஈடுபட்ட தீவிர இடதுசாரி ஆதரவுநிலையில் பேசப்பட்ட அரசியல் என அவரது சிலிக்குயில் ஒரு கேந்திரமாக செயல்பட்ட காலம் அது. இரவுகளில் போஸ்டர்களுக்குப் பசைகாய்ச்சுவது முதல், ஒட்டிவிட்டு அவரது வீட்டுமாடியில் தூங்குவதுவரை பொதி ஒருமுக்கியமான இணைப்புப்பாலமாக இருந்தார். எங்களுக்கு ஓர் இலக்கியப்பட்டறையாக இருந்தது அவரது சிலிக்குயில்தான். பர்வீன் சுல்தானா பாடல்கள் முதல், அவரே பாடும் சுப்பாராவ் பாணிக்கிரஹியின் ’கம்யூனிஸ்டுகள் கஷ்டஜீவிகள்’ வரை இசைகுறித்தும், இலக்கியம் நாவல், பழந்தமிழ் இலக்கியங்கள், பாப்லோ நெருடா என புரட்சிகரஇலக்கியங்கள் இப்படிப் பல தளங்களில் அவரது ஆளுமை படர்ந்திருந்தது.

எனது இலக்கிய எழுத்து வளர்ச்சியில் பொதியின் பங்கு முக்கியமானது. பழந்தமிழ்இலக்கியம், நவீனஇலக்கியம் குறிப்பாக மௌனி, புதுமைப்பித்தன் அறிமுகம் ஆகியவை, எனது இலக்கியச்சிந்தனையில் ஒரு திருப்புமுனை எனலாம்.  தமிழவனின் எழுத்துக்கள் வழியாக சீரிய இலக்கியத்திற்கு வந்த நான் தோழர் பொதியால் அதைத் தொடரமுடிந்தது என்பதை நன்றியோடு இச்சந்தர்ப்பத்தில் பதிய விழைகிறேன்.

அவரது கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பை வாசித்தபோது அன்றுமுதல் இன்றுவரை அவரிடம் தொடர்ந்து வரும் இரண்டு முக்கிய விஷயங்களை அவதானிக்க முடிந்தது.  ஒன்று புதுமைப்பித்தனின் ஆவிமேவிய அவரது ஆளுமை மற்றது இலக்கியஎழுத்து என்பதில் சமரசமற்று சண்டைபிடிக்கும் அவரது போர்க்குண ஆகிருதி. இவற்றைத் தொடர்ந்து அவர் பேணுவது என்பது ஆச்சர்யமான விஷயம் மட்டுமில்லை, அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன என்பது அவருக்குள் உருவாக்கியிருக்கும் சிந்தனைபிம்பம் காட்டும் பரிமாணங்களே. புதுமைப்பித்தன் இலக்கியத்தில் சமரசமற்றவர் என்பதுடன், இலக்கியமற்றதான பீடங்கள் மீதான தொடர்தாக்குதலையும் தொடுத்தவர். பொதி தனக்குள் வரித்துக்கொண்டிருக்கும் பிம்பமாக இதனைக் கொள்ளலாம்.

தமிழிலக்கியம் அகம், புறம், நீதி, பக்தி எனக் கருத்தியல்களால் தொகுத்தும், இலக்கியக்கருத்தாக்கமாக முன்வைத்தும் இயங்கியநிலையில், தமிழில் அறிமுகமான நவீனத்துவம் என்பது கருத்தியலின் இடத்தில் ஆசிரியனை முன்வைத்து, அவனைச் சுற்றிய பீடங்களால் அறியப்பட்டது. இலக்கிய ஆசிரியனே இலக்கியத்துவத்தின் பிதாமகனாக அறியப்பட்டநிலையில் இலக்கியபீட உருவாக்கஅரசியல் (Literary Canonization Politics) தமிழில் கோலோச்சியது. இன்றுவரை இலக்கியபீட உருவாக்கம் என்பது இலக்கிய சொல்லுதலை, மொழிதலை, பாணியை உருவாக்கிப் பெருக்குவதாக உள்ளது.

பிரதி என்பது மற்றொரு பிரதியோடு கொள்ளும் உறவில் உருவாகும் ஒன்றே. இந்த ஊடிழைப்பிரதி (இண்டர்-டெக்ஸ்வாலிட்டி) பற்றிய கோட்பாட்டை ஜீலியா கிறிஸ்தவா என்கிற பல்கேரிய-பிரஞ்சுச் சிந்தனையாளர் விவரிக்கிறார்.  ஒரு பிரதிக்கான அர்த்தம் அச்சமூகத்தில் பயின்றுவரும் பல பிரதிகள் உருவாக்கிய அர்த்தஅமைப்பில் உருவாகும் ஒன்றே. அதேபோல் பிரதியை உருவாக்கும் ஆசிரியனும் பல்வேறு பிரதிகளின் ஊடிழைப்பாவாக நெய்வதே பிரதியாக உருவாகுகிறது என்கிறது இக்கோட்பாடு. ஓர் ஆசிரியனின் பிரதியிலிருந்து உருவானதாக நம்பப்படும் பாணி என்பது அச்சமூக இலக்கியப்புலத்தில் இயங்கும் பல பிரதிகளின் வழி உருவாகி ஒரு வடிவத்தை அடைவதே. 

இலக்கியவடிவம் என்பது ஒரு பாணியாக மாறியவுடன் தொடர்ந்து அதில் உற்பத்திப்பெருக்கம் நிகழ்கிறது. அது மோஸ்தராக மாறியபின், மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் தீர்மானிப்பதாக மாறுகிறது. தமிழ் இலக்கியத்தில் அவ்வாறு பீடமாக்குதல், பீடமாதல் என்ற ஓர் இலக்கிய உற்பத்தி நடவடிக்கை தொடர்ந்து படைப்பாக்கம் என்றபெயரில் நிகழ்கிறது. அத்தகைய நிகழ்வை உரையாடி, எதிர்கேள்வி கேட்டு அதற்கான நியமத்தை, நியாயத்தை ஆட்டம் காணச் செய்வது காத்திரமான இலக்கியவளர்ச்சிக்கு அவசியமானது. பொதியின் இத்தொகுப்பு உரையாடல்களில் இலக்கியம் பற்றிய அவரது அவசங்கள் ஆவேசங்களாக வெளிப்பட்டு பீடங்களின் பீஜங்களை அசைத்துள்ளன. இது வாசகருக்கு ஒரு புதிய வாசிப்பனுபவமாக இருக்கும்.

இப்படிக் கூறக்காரணம், இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பெருமாள் முருகனின் ’மாதொருபாகன்’ நாவலுக்கு எழுந்த எதிர்ப்பிற்கான வினையாற்றலாக மூன்று கட்டுரைகள், சோலை சுந்தரபெருமாள் நாவல்கள் குறித்து நான்கு கட்டுரைகள், புதுமைப்பித்தனின் மாய-யதார்த்தப் புனைவு பற்றியும், ஜி. நாகராஜனின் படைப்பு, ரமேஷ்-பிரேதனின் ஐந்திவித்தான் நாவல் பற்றிய விரிவான வாசிப்பு, தமிழவனின் நடனக்காரி தொகுப்பு பற்றிய கதையாடல்ஆய்வு,  ஞானதிரவியத்தின் சிறுகதைகள், தி இந்து-வில் டி.எம். கிருஷ்ணா எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட கட்டுரை என எல்லாக்கட்டுரைகளும், ஒரு விவாதநோக்கில் அல்லது உரையாடும் தன்மையுடன், வாதப்-பிரதிவாதமாக எழுதப்பட்டவை.  ”பாலிமிக்ஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அவ்வகையான ஓர் எதிர்வாதத்தை முன்வைப்பதற்கான தன்தரப்பு வாதங்களை பல துணைச்சான்றுகளுடன் நிறுவும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்.
தனது விரிந்த வாசிப்பில் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் எழுத்தியக்கத்தை தனதுபாணியில் பகடியாக்கி, தலைகீழாக்கி, கட்டுடைத்துக் காட்டுகிறார் இதில்.  தி ஹிந்து துவங்கி பல சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகள், பேசப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் என பேசுபொருளை விரிவாக்கி வெளிப்படுத்தும் பல்முனையில் பரவும் எழுத்துகளாக அமைந்துள்ளன.

”மாஜிக்கல் ரியாலிஸம்” என்ற மாயயதார்த்தவாதம் அல்லது பொதி புதுமைப்பித்தனுக்குப் பிறகு தனது முன்னத்தி ஏராகக் கொண்டிருக்கும் பிரமிள் கூறும் ஜால-யதார்த்தம் குறித்து விவாதிக்கிறார் ”மாயஜால யதார்த்தவாதம் :  புதுமைப்பித்தனை முன்வைத்து” என்ற கட்டுரையில்.  கலைச்சொல்லாக்கக் சிக்கலில் துவங்கி இக்கட்டுரை புதுமைப்பித்தனின் மாய-யதார்த்தவாதக் கதைகள் பற்றிய அறிமுகக்குறிப்புடன் நகர்ந்து, எஸ். தோத்தாத்ரியின் ’எளிமைப்படுத்தப்பட்ட வறட்டுச்சூத்திர வாய்பாடுகள்’ பற்றிய எதிர்வாதத்துடன் முடிக்கிறார். புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் உள்ள நவீன, பின்நவீன மற்றும் பின்காலனியக்கூறுகள் குறித்து விரிவாக எழுதப்பட வேண்டும். அதற்கான ஒரு முன்முயற்சியாக உள்ளது இக்கட்டுரை. புதிதாக எழுதவரும் இளந்தலைமுறையினருக்கு இத்தகைய அறிமுகங்கள் அவசியமானவை.  அதைச் சரியாக முன்வைக்கிறது இக்கட்டுரை.

ஜி. நாகராஜனின் புனைகதைகள் அதிர்ச்சிமதிப்பீடானவை என்று கூறும் பிச்சைக்காரனின் கட்டுரையை கட்டுடைக்கும் பொதி அதன்வழியாகச் சிற்றிதழ்களை ஒழித்த நடுநிலைநாயகர்களை இடித்துரைத்துக் காட்டுவது முக்கியமானது. இக்கட்டுரை உண்மைகளைப் புனைகதையாக்கும் உத்திகளில் செயல்படும் அரசியலைப் பேசுகிறது.  இந்திரா பார்த்தசாரதியின் ’குருதிப்புனல்’, ஜெயமோகனின் ’வெள்ளையானை’ போன்ற நாவல்களின் பொய்மையை, புனைவு என்றபெயரில் நிகழ்த்திக்காட்டும் அரசியலை வாசித்து வெளிப்படுத்துகிறார். ஜெயமோகபீட பிம்பங்களையும், அதற்கு அர்ச்சனை செய்து அமளிதுமளி செய்யும் ஆசானின் ஆஸ்தான எழுத்தாளர்களையும் விட்டுவைக்கவில்லை.  தொப்புள்கொடியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு நடக்கும் இலக்கியத்தின் சவால் முன் சவளைப் பிள்ளைகளாய் தவழும் நடுநிலை இலக்கிய சங்கடங்களை சுட்டிக்காட்டுகிறார்.

”முறைகேடாகப் பிறந்த கதைகள் : கோலமாறும் கலைடாஸ்கோப்பின் காட்சிப் பிழைகள்” என்ற கட்டுரை முக்கியமான கட்டுரை. இன்று பரவிவரும் ’கலாச்சார தேசியம்’ என்கிற இந்துத்துவபாசிசத்தின் தமிழக இலக்கியமுகவர்களை அவர்களது மேடையிலேயே அவர்களை அம்மணமாக்கி, ராஜாவின் உள்ளே இருப்பது விடமேறிய விதூஷகக்கோமாளி என்பதைக் கிழித்துப் போட்டுள்ளார். இன்று ”தி இந்து’ உருவாக்கும் இந்துஞானமரபு சமஸ்தானமான சுயமோக ஜெயமோகன்கள் உருவாக்கும் போலியான இந்துமரபு மற்றும் மோடி குறித்த கார்பரேட்பிம்பங்களை இதில் அலசி உலர்த்தி காயப்போட்டுள்ளார். கலாச்சாரத் தளத்தில் நிகழும் இந்துத்துவ நுண்பாசிச அலகுகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். ”மேக் இன் இண்டியா = வெளித்தோற்றத்தில் ஏகாதிபத்தியப் பொலிவும் அகத்தோற்றத்தில் இந்துராட்டிரக் கோட்சே கனவான வேத பொற்காலத்திற்கு இட்டுச்செல்லும் மீட்புவாதமும்” என்ற சூத்திரமாக்கி காட்டும் பொதி இன்றைய கலாச்சார இலக்கியச்சொல்லாடல்களில் மறைந்திருக்கும் உண்மையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

படர்ந்துவரும் பாசிச இந்துத்துவாவின் கலாச்சாரப் போரில் சிக்கிய பெருமாள் முருகனின் ’மாதொரு பாகன்’ குறித்து இரண்டு கட்டுரைகள் தவிர வேறு சில கட்டுரைகளிலும் எழுதிச்செல்கிறார். குறிப்பாக கூறியது கூறலாக பேசப்பட்ட விஷயங்களே கட்டுரைகளில் திரும்பவருவது என்பது வாசிப்பவருக்கு அலுப்பூட்டக்கூடியதாக உள்ளது. சில கட்டுரைகளில் முன்பு பேசப்பட்ட செய்திகளே அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. தொகுப்பாக்கத்தில் இதுபோன்ற திரும்பவரலை கவனித்து நீக்கி ஒரு பொருள்பற்றிய ஒரு கட்டுரையாக்கியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து வெவ்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதப்படும்போது புதிய வாசகர்கள் என்ற முறையில் எழுதப்பட்டதே திரும்ப எழுதுதல் என்பது சரியான நடைமுறையே. என்றாலும், தொகுப்பாக்கும்போது அதை ஒரேகட்டுரையாக மாற்றி எழுதுவதே வாசிப்பிற்கான ஆர்வத்தை தரக்கூடியதாக இருக்கும்.  பெருமாள் முருகன் மற்றும் சோலை சுந்தரபெருமாள் பற்றிய கட்டுரைகள் மட்டுமின்றி ரமேஷ்-பிரேதன், தமிழவன் குறித்த கதையாடல் ஆய்வுகளிலும் இந்த கூறியது கூறலாக சில செய்திகள், குறிப்புகள் வருவது ஓர் இடறலாக உள்ளது.

பெருமாள் முருகனின் நாவலுக்கு அறிவிக்கப்பட்ட எதிர்ப்பும் அடக்குமுறையும் கடுமையான கண்டனத்திற்கு உரியவை என்பதை இலக்கிய வரலாற்றில் பதியவைக்கும் முகமாக, அதையொட்டி வந்த பல கருத்துக்களை தொகுத்து அவற்றிற்கு எதிர்வாதங்களும், பதில்களும், அம்பலப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன இக்கட்டுரைகளில். என்றாலும், காவிகள் அல்லது இந்துத்துவர்கள் இந்நாவலை ஆங்கிலநாவல் வந்தபின் பிரச்சினைக்குள்ளாக்குவதில் ஓர் அரசியல் உள்ளது. பொதுவாக இது ஒரு பதிப்பகத்தின் விளம்பரஉத்தி என்பதான கருத்துக்களும் அதேநேரங்களில் வெளிப்படுத்தப்பட்டன.

இத்தகைய நாட்டார்ஆய்வுகளைக் கொண்ட கதையாடல்கள் பின்னால் உள்ள நிதியாதாரசக்திகள் பற்றிய வாதங்களும் வந்தன. இவற்றை எல்லாம் இப்பிரச்சினையில் கணக்கில் கொள்வது அவசியம். ஆதிக்கசக்தி தனது எதிரியைத் தானே உருவாக்கி தனது கட்டுக்குள் வைத்துக்கொண்டு, சரியான எதிரியை வளரவிடாமல் செய்யும் என்பதைக் கவனத்தில் கொண்டால், இப்பிரச்சினையின் அந்தரங்கஅரசியல் புரிபடலாம். காரணம் இதை ஒட்டி நடத்தப்பட்ட நாடகங்கள் ஐயுறத்தக்கவையாக அமைந்தன என்பதும் முக்கியம். என்றாலும், துரை குணா, புலியுர் முருகேசன் போன்றவர்களையும் உள்ளடக்கி இதனை விவாதப்பொருளாக்கியதில் பொதியின் தனித்துவமிக்க இடதுசாரி அரசியல் வெளிப்படுகிறது. அம்பேத்கர்-பெரியாரிய-மார்க்சிய அரசியல் பற்றியும், ஒரு வானவில் கூட்டணி பாசிச எதிர்ப்பாக உருவாக்கப்பட வேண்டியது பற்றியும் விவரித்துக் கட்டுரையை முடிப்பதில் உள்ள நுண்ணரசியல் மனங்கொள்ளத்தக்கது. காரணம் பார்ப்பனியத்தின் கலாச்சார விளையாட்டில் நாம் கவனம் கொள்ளவேண்டியதை நுட்பமாக்கிச் செல்கின்றன இவ்வெழுத்துக்கள்.

சோலை சுந்தரபெருமாளின் புனைவிலக்கியம் குறித்து இவரது நான்கு கட்டுரைகள் (அதிலும் கூறியது கூறல் உண்டென்றாலும்) மிக முக்கியமான ஒரு கருத்தியல்புலத்தை சைவம் குறித்தும் அதன் பாசிசம் குறித்தும் தமிழ்மரபில் வைத்து விரிவாக விவாதிக்கின்றன. வரலாற்றில் அதன் கொடுங்கோன்மை குறித்தும் விவரிக்கும் பகுதிகள் முக்கியமானவை. ஏற்கனவே பலராலும் தொடப்பட்ட புள்ளிகள் என்றாலும், அவற்றை ஒருங்கிணைத்துத் தொகுத்து புனைவில் உள்ள அரசியலை அம்பலப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகள்.  ”ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல வர்ணமும் ஒளிந்திருக்கிறது” என்ற வாக்கியம் முக்கியமானது. சாதி, வர்ணம், வேதாந்தம், சித்தாந்தம் என சைவம் எப்படி ஒரு கொடுங்கோன்மைச் சமயமாக தமிழில் பிறமதங்களை, எதிர்மரபுகளை ஒழித்தது என்பதைப் புனைவின் விடுபட்ட மௌனங்களை வாசிப்பதன் வழியாக எடுத்துக்காட்டுகிறார். ’திராவிட சிசு’ எனப்படும் ஞானசம்பந்தர் பற்றிய மாற்று வரலாற்று வாசிப்பிற்கான முன்முயற்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார். பார்ப்பனியம் எப்படி சைவத்தின் பக்தி இயக்கத்தை உள்வாங்கியது என்பதைச் சுட்டும் பகுதிகள் முக்கியமானவை. சமயப்பிரதிகளின் அரசியலை வாசித்துக் காட்டியிருப்பது முக்கியமானது. இதை விரிவாக விளக்காமல் வாசகர்களின் வாசிப்பிற்கே விட்டுவிடலாம்.

கதையாடல் ஆய்வாக நிகழ்த்தப்பட்டுள்ள ஞானதிரவியத்தின் சிறுகதைகள், ரமேஷ்-பிரேதனின் ஐந்திவித்தான் நாவல் மற்றும் தமிழவனின் ’நடனக்காரி…’ சிறுகதைத் தொகுப்பு குறித்து விரிவான ஆய்வைச் செய்துள்ளார். அமைப்பியல் மற்றும் பின்நவீனக் கதையாடல் உத்திகளை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் வழியாக இவரது தனித்துவமான வாசிப்பை முன்வைத்துள்ளார்.

”ஒரு கொசுவின் கடவுள் ஒரு கொசுவாகத்தான் இருக்க முடியும்” என்பதுபோன்ற எளிமையாக பெரிய சிந்தனையைத் தூண்டும் வாக்கியத்தை எழுதுகிறார் ஞானதிரவியம் தனது கதைகளில் என எடுத்துரைக்கும் கட்டுரையில், விரிவாக அவரது சிறுகதைகள் கதையியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஞானதிரவியத்தின் புனைவுவெளியில் நிகழும் பல காட்சிகளை எடுத்துக்காட்டி, மதுவருந்தி ஆணாதிக்கத்தை கலாய்க்கும் பெண்கள், சிறுதெய்வ பெருங்கடவுள் முரணை முன்வைத்த எழுதப்பட்ட இன்றைய இந்துத்துவ பெருமத பரவலாக்க அரசியலைப் பேசும் கதைகள், ஆகமவிதிகளை மீறும் பாத்திரங்கள் என கதையின் பலகூறுகளையும் அதன் நுண்தளங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

ரமேஷ்-பிரேதனின் ”ஐந்திவித்தான்” என்ற நாவல் பற்றிய ஒரு புதியமுறைக் கதையாடல்ஆய்வை நிகழ்த்த முயன்றிருக்கிறார். தொல்காப்பியத்தைக் கொண்டு நவீனஇலக்கியங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற தமிழவனின் கோட்பாட்டைக் கொண்டு தொல்காப்பியம் சொன்மை எனக்கூறும் அமைப்பு மொழியில் முன்வைத்த சிவசு அவர்களின் பிரதிச்சொன்மை என்கிற பிரதியின்-குறிப்பான் அடிப்படையிலான ஆய்வாக இதை நிகழ்த்த முனைந்துளளார்.  தொல்காப்பியம் முன்வைக்கும் பிரதிச் செயல்பாடுகளாக அதன் எழுத்து, சொல், பொருள் இலக்கண முறையியலைக் கொண்டு விவரிக்கிறார். குறிப்பாக பூஃக்கோவின் ஒப்புமை, டெல்யுஸின் திரும்பவரல் (ரெப்பிட்டீசன்), பார்த்தின் பிரதியின்பம் போன்ற கருத்தாக்கங்களை சுட்டிக்காட்டி அந்நாவலை ஆய்வு செய்துள்ளார்.  இந்நவலின் பல குறியீட்டுத்தளங்களை வெளிப்படுத்திக் குறுக்கும்மறுக்குமாக நாவலை வாசித்துக் காட்டியுள்ளார்.

இத்தொகுப்பில் தமிழவன் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் (நானும்கூட தமிழவனின் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவன்தான்) அவரைப் பீடமாக்குவதாகவும், அதற்கு மாற்றாக சில விமர்சனங்களையும் எடுத்துக்காட்டும் பொதி, தமிழவனின் சமீபத்திய சிறுகதைத்தொகுப்பான ”நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்” என்ற நூலில் உள்ள கதைகள் குறித்து மிகவிரிவான கதையாடல் ஆய்வொன்றைச் செய்துள்ளார்.  அந்த நூல் குறித்து நானும் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியுள்ளேன். அதில் பல சிறுகதைகள் தற்காலத் தமிழ்எழுத்துலகம் பற்றிய பகடியை முன்வைக்கக் கூடியவை.

இக்கட்டுரையின் முதல்பகுதியில் வழக்கம்போல் பொதி தமிழவன் என்கிற பீடம் உருவாகிவிட்டதான முனைப்பில் தமிழவன் பற்றி எழுதியுள்ள சிவசு, நிதா எழிலரசி மற்றும் சண்முக.விமல்குமார் ஆகியோர் கருத்துக்களுக்கான எதிர்வாதங்களை முன்வைக்கிறார். அதன் வாத-விவாதங்களில் நுழையாமல் வாசகர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். அமைப்பியலில் இரண்டு போக்குகள் தமிழில் நிகழ்ந்துள்ளன.  ஒன்று தமிழவனின் அறிமுகம் ஒட்டி வந்தது. மற்றது தமிழவனை விமர்சித்து வந்த பேரா. ஜோசப் நோயல் இருதயராஜ் முன்வைத்தது.  அந்த விவாதக்களத்தின் ஒரு தொடர்ச்சியாக இதில் முதல் பகுதியைத் தொகுத்துள்ளார். தமிழவனின் சிந்தனைப்பள்ளி என்ற ஒரு சொல்லாடலை முதன்முதலாக இதில் முன்வைத்துள்ளார்.
”உரையாடல், உபமொழி, உறைபுள்ளி இம்முக்கூறுகளும் ’கலந்த மயக்க’மாகவே இத்தொகுப்பின் பனுவலாக்கம் ஊடாடிக் கிடக்கின்றது.” என்று சரியாக வாசித்துக்காட்டி அதன் கதையியல்புள்ளிகளைத் தொட்டுக்காட்டியுள்ளார். தமிழவன் முன்வைக்கும் கோட்பாட்டுக் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி அவரது கதைகளை ஆராய்ந்திருப்பது வித்தியாசமான ஒரு வாசிப்பை நவில்கிறது.  தெரிதாவின் ’சப்ளிமெண்ட்’ என்ற கருத்தாக்கம் பற்றிய அறிமுகம் இக்கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. 

தெரிதாவின் உலகப் புகழ்பெற்ற கட்டுரையான, அவரது தத்துவச்சிந்தனையின் விதைகளைக் கொண்ட 1966-இல் அமேரிக்க ஹாப்கின்ஸ் பல்கலையில் பேசிய முதல் அறிமுகக்கட்டுரையான ” Structure, Sign, and Play in the Discourse of the Human Sciences” என்ற கட்டுரையைத் தமிழில் சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக வாசித்து வரிவரியாக விளக்கங்களுடன் சிறுநூலாக தமிழில் தந்துள்ளார் முனைவர் பொ. நா. கமலா. அந்த நூல் ஆங்கிலத்தில் உள்ள ஏழு அல்லது எட்டு பக்கங்களை பகுதி பகுதியாக பிரித்து வாசித்து விரிவான மொழிபெயர்ப்பாக ஆக்கியுள்ளார். தெரிதாவே மிகவும் சிக்கலாக எழுதி வாசித்த கட்டுரை அது.  தெரிதாவை தீவிரமாக வாசித்த அவர் தெரிதாவின் ’Of Gramatology’-இல் மொழியின் பொருள்கொள்தலில் உள்ள சிக்கல்பற்றிப் பேசும்போது பயன்படுத்திய supplement என்ற கருத்தாக்கத்தை தமிழில் ”குறைநிரப்பி” என்பதாக மொழிபெயர்த்துள்ளார்.  (தமிழில் அதைக் குறைநிரப்பி என்ற சொல்லலாமா? என்கிற விவாதமும் உண்டு.  காரணம் ஒரே நேரத்தில் கூடுதல் பொருள் சேர்ப்பதாகவும், மற்றொரு பொருளை பதிலீடு செய்வதாகவும் பொருள்தரக்கூடிய ஒரு கருத்தாக்கம். குறைநிரப்பி என்பது ரூசோ சொன்ன குறையை நிரப்புவது என்ற பொருள் என்றும் அதில் கூடுதலாக பதலீட்டையும் சேர்க்கிறார் தெரிதா.) அதைப்பயன்படுத்தி பொதி தமிழவனின் நடனக்காரி. சிறுகதையை ஆராய்ந்துள்ளார். 

தமிழவன் மீதும் அவரது சிந்தனைப்பள்ளியைப் பின்பற்றுபவர்கள் மீதும் சில விமர்சனங்கள் முன்மொழியப்படும் அக்கட்டுரையில், பல கதைகளை சிறப்பான கதையாடல் ஆய்விற்கும் உட்படுத்தியுள்ளார். சில கதைகளை உள்ளீடற்ற வெற்றுக் குறிப்பான்களாகக் கொண்டு அவற்றின் குறிப்பீடுகளை மாற்றி வாசித்துக் காட்டியுள்ளார். சான்றாக ”பழைய நாணயம் விற்பவன்” என்ற கதையை ”பழைய புத்தகம் விற்பவன்” என்பதாக..

இறுதியாக, ’இது பற்றியெல்லாம் ஆங்காங்கே காண்போம்’ போன்ற வாக்கியங்களை தவிர்த்திருக்கலாம். அது ஒரு பழையவகை எழுத்துப்பாணியாக உள்ளது. கருத்துக்களை பலரின் கூற்றாக முன்வைக்கும்போது ஆசிரியராக இவரது கருத்து என்ன என்பது மறைந்துபோகிறது. அதில் கூர்மையும் கவனமும் சிதறியிருப்பதாகத் தோன்றுகிறது. வாசகர்களுக்கு ஆசிரியர் கருத்தை அறிவது கடினமாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. தான் கண்டறிந்த புதிய கருத்தாக்கங்களை குவிமையப்படுத்தாமல் போகிறபோக்கில் சொல்வதால் ஏற்படும் குழப்பம். முன்பு சுட்டிக்காட்டிய கூறியது கூறலாக வரும் பல குறிப்புகள், செய்திகள், கருத்தாக்கங்கள் தவிர்க்கப்பட்டு செம்மைப்படுத்தப் பட்டிருந்தால் இன்னும் கூர்மையான வாசிப்பைத் தருவதாக அமைந்திருக்கும்.

இத்தொகுப்பு தமிழ்ச்சூழலில் பல வாத-விவாதங்கள முன்வைத்து இலக்கிய பீடங்களை கேள்வி கேட்கிறது தற்போதைய எழுத்து என்பது பெரும்பத்திரிக்கைக்கானதே, சிறுபத்திரிக்கையில் எழுதப் பழகி, நடுபத்திரிக்கையில் எழுதி ’எஷ்டாபிளிஸ்’ ஆகி, பெரும்பத்திரிக்கையில் கவர் செய்து காலந்தள்ளும் எழுத்திலக்கிய ஏணிப்படி தியரிகளுக்கு எதிரான சிறுபத்திரிக்கை என்பது மட்டுமே இலக்கியத்தைப் பயிர் செய்வதற்கான சிறுவாரிநிலம் என்பதைச் சொல்கிறது. அவ்வகையில் இது தமிழிலக்கிய வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு முக்கிய ஆவணமாக இருக்கும். இலக்கியஆர்வலர்களுக்கு இது இலக்கிய உலகைப் புரிந்துகொள்ள ஏதுவாக அமையும். இலக்கியபடைப்பாளிகளுக்கு கதையாடல்ஆய்வு வழியாக நுட்பங்களைச் சொல்வதாக அமையும்.
("அகரம்” வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கும் வெ.மு. பொதியவெற்பனின் ’வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’ (புனைவு விமர்சனம், கதையாடலாய்வுகள்) நூலுக்கான முன்னுரை.)

[1] ”To think is to create – there is no other creation – but to create is first of all to engender ‘thinking’ in thought”  -  (Deleuze 2004: 185).

Comments

Popular Posts

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.