சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 3 )

டி.எஸ்.எலியட் என்ன படித்திருக்கின்றாரோ அவற்றை எல்லாம் படிக்கவில்லையெனில் பாழ்நிலத்தைப் புரிந்து கொள்ள முடியாதென சி.மணி குறிப்பிடுவது போலவே சி.மணியின் பன்முகப் பரிமாணங்கள் பல்வேறு ஈடுபாடுகள் எத்தகையன என்றெல்லாம் புரிந்துகொண்டாலன்றி அவரது கவிதைகள் பற்றிய போதுமான புரிதல் வாய்த்திடச் சாத்தியமில்லை. ஏனெனில் அவற்றை எல்லாமும் அவரது கவிதைகளுக்கூடாகவே அவர் கவித்துவ இழையறாமல் ஊடுபாவாக இழையோட வைத்துள்ளார்.

நவீனகவியானவன் எவ்வாறு வெறும் மொழியறிவை, கற்பனையை, கவிப்புனைவைத் தாண்டி, அறிவியல், வரலாறு, விண்ணியல், மனோதத்துவம், மருத்துவம், உடற்கூறியல், இசை, ஓவியம், விளையாட்டு, தொன்மங்கள், வேதாந்தங்கள், சித்தாந்தங்கள், தத்துவ ஞானங்கள், அதற்கு அப்பால் இயங்கிக்கொண்டிருக்கும் சகலத்தையும் தெரிந்திருக்க வேண்டியவனாகின்றான். அத்தனையும் சாத்தியம்தானா என்பது சி.மணியைப் பார்த்ததும் எனக்கு ஆமாம் என்று தோன்றியது -சாகிப்கிரான்48

நீ கவிதை எழுதுவதும் / அவன் மலம் எடுப்பதும்

மதிப்பீட்டில் வேறானாலும் / வகையால் ஒன்றுதான்

ஒரு கோணத்தில் பார்த்தால் / அவனது உனதை விடச்

சிறந்தது / மேலும் / அலைவுகளை விட்டுச் செல்

வதை விட / சுவடற்று மறைவது மேல்49

இது தன்னியல்பாய் வாழ விழையும் ஒரு சென் மனோபாவம். இத்துடன் ஒருசேர மனங்கொள்ள வேண்டியது சி.மணியின் தமிழாக்கத்திலான ஒரு சீன சென் கவிதை.

வரும்போது / போகும்போது / விட்டுச் செல்வதில்லை

காட்டு நீர்ப்பறவை / ஒரு சுவடு / தேவையும் இல்லை / அதற்கு

ஒரு வழிகாட்டி50

அலைவுகளை விட்டுச் செல்வதைவிட சுவடற்று மறைவது மேல் எனும் கோணம் கவிதை குறித்து மெய்யியற்சிந்தனைகள் பற்றி ஆராயமுனைந்த .மதுசூதனன்

இன்றைய மனிதன் அலைவுகளை விட்டுச்செல்ல விரும்புவதில்லை. சுவடின்றி மறையவே ஆசைப்படுகிறான். கவிதை எழுதுவதைவிட மலம்எடுப்பதே மேல் என்பதே இன்றைய மனிதனின் மனநிலையாக இருக்கிறது51

என்கிற முறையில் அர்த்தப்படுத்துகின்றார். அவர் சுட்டுமாப்போலே கோணம் கவிதையில் முன்வைக்கப்படுவது பொதுமைப்படுத்தப்பட்ட இன்றைய மனிதனின் மனோபாவம் அன்று. அது அக்கவிதைசொல்லியின் சென் மனோபாவச் சித்திரமே. மேலும் எந்த ஒரு செயலைப் புரிந்த போதிலும் அதில் மனமொன்றி லயித்து ஈடுபடுவதே தியானமாகும் என்கிற கோணமும் இதில் காணக்கிடப்பதே. எழுத்துப்பணியில் ஈடுபடுவதன் மூலம் தமக்குத் தனிக்கொம்பு முளைத்திருப்பதாகத் தருக்கித் திரிபவர்களை முன்னிலைப்படுத்தியே மலம்எடுப்பது உனதைவிடச் சிறந்தது என்பதான கோணத்திலிது முன்வைக்கப்பட்டுள்ள ஒன்றே இது. சி.மணியின் மெய்யியல் தேட்டங்குறித்து காணத்தவறியதனாலேயே இத்தவறான புரிதலுக்கு மதுசூதனன் ஆளாக நேர்ந்துள்ளது. சி.மணியின் தாவோதேஜிங் தமிழாக்கம் அவரது பங்களிப்பாய் தமிழுக்கு வாய்த்த அரும்பெறற்கொடையாகும். அதுகுறித்து வெங்கட் சாமிநாதனும், சாகிப்கிரானும், அசதாவும் ஏலவே சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளின் சீன சென் கவிதைகள் சி.மணியின் தமிழாக்கத்தில் தக்கை இதழிலும் வெளியாகியுள்ளன. அவரைப்பற்றிய சாகிப்கிரானின் கட்டுரையின் வாயிலாகவும் சி.மணியின் சென் மனோபாவ வாழ்க்கைப் பதிவுகளை இனம்காணலாம்.

ஒருஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட அழகும், முரணே போன்ற உண்மையும் கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும் முதற்கவிதையே முற்றிய வித்து / பழைமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம் (1959) தோற்றமுரண் கொண்ட உண்மை. இந்த விசாரம் கடைசிவரை தொடர்கிறது

சிந்திப்பதற்கு மிகச்சிறந்த முறை எது என்றால் சிந்திக்காமல் இருந்து விடுவது தான் (1994) - வெங்கட்சாமி நாதன்52

உலகின் பலவேறு பண்பாடுகளில் காணும் மறைஞானச் சிந்தனைகளைக் கற்றறிந்தவர் சி.மணி எனத் தாவோதேஜிங் பின்னட்டை ப்ளர்ப் குறிப்பிடக்கண்டோம். இதற்கு எடுத்துக்காட்டுகளாக ஞானம் சுபுத்தி உதவுகிறார் புத்தர் கைகொடுக்கிறார் முதலான கவிதைகளை எடுத்துரைக்கலாம்.

நீ நினைக்கிறாய் / அதுவும் தவறாக நினைக்கிறாய்

ஞானம் / அறியாமை மறுப்பு என்று / எனென்றால்

நீ இப்போதெல்லாம் தெளிவாகப் பார்க்கிறாய் / அது /

அறிவு மறுப்பு என்று / அதுசரி, அது எப்போது / வேறு /

எதுவாக இருந்தது?53

இந்த ஞானம் கவிதையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் குரலைக் கேட்கலாம். அறிந்ததனின்றும் விடுதலை’ என்ற அவர் குரலே சி.மணியின் ஞானமாக எதிரொலிக்கின்றது. இதுவரை காலமும் நாம் நமது அறிவென நம்பியது நம் மண்டையில் முன்னோர்களால் திணிக்கப்பட்ட சரக்கு என்பது பிடிபடும்போது அதனின்றும் விடுதலை சாத்தியமாகின்றது. வேறொரு கோணத்தில் இக்குரலில் இன்னொரு பரிமாணம் திருமூலரின் திருமந்திரத்திலும், லாவோட்சின் தாவோயிசத்திலும்கூடச் சங்கமிக்கக்கூடியதே. அது தன்னையறிவதே ஞானம் பின்னை அறிவெல்லாம் பேய்த்தேரே - கானல்நீரே எனும் பார்வைக்கோணம்.

நம்மிடையே சிலருக்கு கேப்ரியல் கார்ஸியா மார்க்கஸ் புரியும், ஜோர்ஸ் லூயிஸ் போர்ஜஸ் புரியும், ஆனால் புதுமைப்பித்தனைமட்டும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவர்களைப் பற்றிப் பேசுகிறது சி.மணியின் சுபுத்தி உதவுகிறார். அதில் இவ்வாறே ஃபாக்னரும் வார்லேனும் புரிகிறது. காப்கா, எலியட், இப்சன், செகாவ், ஸ்டெந்தால் புரிகிறது. இந்தத் தமிழ் இலக்கியம் மட்டும் கொஞ்சமும் புரியவில்லை என்கிறவர்களை நோக்கி

பௌத்த / சந்நியாசிகளுக்கு ஒருநாள் சுபுத்தி

தந்த பதிலை இவருக்கும் தரலாம் / புரிவதற்கு

ஒன்றும் இல்லை / புரிவதற்கு ஒன்றும் இல்லை54

இன்றைய இலக்கியத்தின் உருவற்ற உருவத்தை - அருவுருவை புத்தர் கூற்றான பிரக்ஞ பரமித ஹ்ருதய சூத்ர என்பதை முன்னிறுத்திக் கோடிகாட்டிச் செல்கின்றார்.

வெறுமையும் உருவமும் / வேறுபட வில்லை

வெறுமைதான் உருவம் / உருவுந்தான் வெறுமை

என்று புத்தர் சொல்லிப் / புண்ணியங் கட்டிக்

கொண்டார் / நல்லவேளை / இல்லை

யென்றால் / இன்றைய இலக்கியத்தில் உருவம்

இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது?55

இங்கே இலக்கியத்தில் உருவம் - வெறுமையே உருவம் என்பதும் முன் தீர்வு கவிதையில் இந்தக் கைகள் வெறும் தோள்முனைத்தொங்கல் தாங்காத உறுத்தல் வடிவத்தொல்லை என்பதும் யாப்பியல் நூலில் ஏலவே சுட்டிக்காட்டியபடி கவிதையின் புறமாகிய உருவத்தில் விட, அகமாகிய உள்ளடக்கத்தில் தான் கட்டுக்கோப்பு (அழகும்) முக்கியமானது’ என வலியுறுத்துவதும் ஒத்துறழ்ந்து நோக்குதற்குரியனவாகும். சி.மணியும் கம்மிங்ஸின் பாணியில் கட்புலப் படிமங்களைக் கையாண்டதும் உண்டுதான். கம்மிங்ஸின் பாணிக்கு முன்பே தமிழ் மரபிலேயே சித்திரகவிகள்’ என்பனவும் உண்டு - அவற்றின் சித்திரவதைகளிலிருந்துத் தமிழை விடுவிக்க முனைந்து நின்றவன் பாரதி.

யமகம், திரிபு முதலிய சித்திரக்கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திhpத்துக் கொண்டு போகும் கயிறுபின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறான். மனமறிந்த உண்மைக்கு மாறுசொல்லும் சாஸ்திரக்காரனும், பாட்டுக்காரனும் சரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்தில் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம் - பாரதி56

தேக்கங்களைத் தகர்த்து இயக்கத்தை முன்னெடுக்க விழைந்தவர் சி.மணி. அவரது இதுகுறித்த வலியிறுத்தல் பற்றியும், அலைவு எனும் கவிதை குறித்தும் இங்கே மனங்கொண்டாக வேண்டியுள்ளது.

ஒரு மனிதனுக்கு இயக்கம் மிக முக்கியமான ஒன்று என சி.மணி குறிப்பிடுவார். mobility என்பதும் தற்சார்புத் தன்மையை உறுதிப்படுத்தும் - சாகிப்கிரான்57

கிளைத்தள்ளும் ஆலம் / வளைந்தள்ளும் வானவில்

அலைந்தள்ளும் கார்குழல் / இறக்க வேற்றம்

துள்ளும் / கயல் புரளும் கண்ணி

மாறா ஓசையில் இன்பமில்லை / ஆலைச்

சங்கையது நினைவூட்டும்

அசையாது நிலைத்திருப்பதில் இன்பமில்லை /

ஆடி ஓய்ந்த பிணத்தையது நினைவூட்டும்

இருப்பதை நினைவூட்ட அசைவு தேவை.

விழியசைவில் காதல் / இடையசைவில்

கூடல் / மூச்சசைவில் வாழ்வு58

வடிவத்தொல்லையில் சிக்கித் தேங்கிவிடாமல் கையைக் காலாக்கிக் கவிதையை இயக்குவித்தவர் சி.மணி. இங்கே தமிழ்க்கவிதையின் இயல்பாக இதுகுறித்து எடுத்துரைப்பதோடு, தமிழின் நவீனகவிதை குறித்த ஒரு மாறுபட்ட சித்திரத்தையும் முன்னிறுத்தும் ஒரு வரையறையும் ஒருசேர நோக்குவோம்.

தமிழ்க்கவிதை பெருமளவுக்கு நவீனத்துவத்திற்கு எதிரானது. காரணம் நவீனத்துவக் கவிதை வடிவத்திற்கு முதன்மை தருகிறது; தமிழ்க்கவிதை எப்போதுமே வடிவச் சோதனையைப் பெருமளவு ஏற்றுக்கொண்டதில்லை. தமிழ்க்கவிதை பெரும்பாலும் (இன்று வரை) உள்ளடக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக இருந்து வருகிறது. ஆகவே தமிழ்க்கவிதையை எதிர்நவீனத்துவக் கவிதை (anti modernist poetry) என்று தான் கொள்ள முடியும்” - .பூரணச்சந்திரன்59

பூரணச்சந்திரனின் இத்தகைய பார்வைக்கு நெருக்கமானவையாகவே சி.மணியின் பார்வைகளும் காணக்கிடக்கின்றன. யாப்பை சர்வலாவகமாக இயல்பாகக் கையாளுவது என்பதெல்லாம் சி.மணிக்குக் கைவந்த கலையே. சி.மணியின் கவிதைகளில் சீர்பிரித்து வெளியிடப்பட்டிருக்கும் பாங்கு வரை யாப்பு வழாமல் இடம்பெற்றிருப்பதனை இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன். ஏலவே சுட்டியவாறு அவரும் கட்புல வடிவச்சோதனைகளில் ஈடுபட்டவரே என்றபோதிலும் எந்தப் புள்ளியிலும் யாப்பினால் கவிதை தேக்கமுறாமல் அதனைக் கொண்டுசெலுத்தவல்ல ஒப்பற்ற உத்தியாக அவருக்குக் கைகொடுத்ததுதான் பழந்தமிழ் இலக்கியம் முதல் தனிப்பாடல், திரைப்பாடல்வரை ஊடிழைப்பிரதிகளாக அவர் ஊடாடவிட்ட உத்தி. இதனை அவர் ஓவியக்கலையின் கொல்லாஜ் உத்தியிலிருந்தும் டி.எஸ்.எலியட்டின் பாழ்நில’ உத்தியிலிருந்தும் வடிவமைத்து வடிவத் தொல்லையில் சிக்கித் தேங்கிவிடாமல் தமிழ் நவீனகவிதையில் அசைவியக்கத்தைச் சாதித்தவராய் வீற்றிருக்கின்றார்.

கசடதபறவில் வெளியான மிகச்சிறந்த கட்டுரைகள் யாவும் வெங்கட் சாமிநாதன், நான், ஓலூலூ (சி. மணி), கி..சச்சிதானந்தம் ஆகிய எழுத்து தலைமுறையினரால் எழுதப்பட்டவைதாம் என்பதும் இலக்கிய அபிப்பிராயங்களை ஆழமாகவும் தகுந்த காரணங்கள் காட்டியும் சொல்லக்கூடியவர்கள் இன்று இவர்கள்தாம் என்பதும் இவர்களது கட்டுரைகளை எழுத்து முதலிய பத்திரிகைகளில் அவதானத்தோடு படித்தவர்களுக்குத் தெரியும் - பிரேமிள்60

இது பிரேமிள் முன்னிறுத்தும் சி.மணியின் இன்னொரு பரிமாணம். நன்கறியப்பட்ட கவிஞர் என்கிற பரிமாணத்திற்கப்பால் கட்டுரையாளர், புனைகதையாளர், அகராதியியலாளர் (lexcicographer), நாடகாசிரியர், யாப்பியல் மற்றும் இலக்கண இலக்கியப் புலமையாளர், கலாரசனையாளர், இதழாசிரியர் என்றெல்லாமும் சி. மணியே வே. மாலி, .சாமி, பெரியசாமி, செல்வம், ஓலூலூ என்கிற வெவ்வேறு நாமரூபங்களில் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் வசனகவிதையின் தந்தை பாரதியென்றால் புதுக்கவிதையின் தந்தை .பிச்சமூர்த்தி எனலாம். தமிழ் எதிர்க்கவிதையின் தந்தை .நா.சு என்றால், தமிழ் நவீனகவிதையின் தந்தை சி.மணியே என்பேன். (இங்கு நவீன கவிதை எனும் பிரயோகம் பூரணசந்திரன் பேசிநிற்கும் எதிர்நவீனத்துக்கவிதை என்ற அர்த்தப்பாட்டையும் அகப்படுத்திய ஒன்றே).

உயிர் எழுத்தில் வெளியான சி.மணியின் பிரசுரமாகாத கவிதைகள் வாயிலாக அவரது இசைக்கோலங்களும் அவற்றுக்கூடாக இழைபிரியும் மெய்யியற்பாங்கும் குறிப்பிடத்தக்கன. தத்வமஸி யேட்ஸின் கேள்விக்கு எலியட் அடிக்குறிப்பிட, மல்லிகார்ஜீன் மன்ஸீர் விளக்க முற்படுவதாக முடிவுறும். அறியமுடியார் யாரே கூத்திலிருந்து கூத்தனை என்பது கேள்வி. அச்சங்கீதமே நீதான் அது நீடிக்கும் வரையும் என்பது அடிக்குறிப்பு. இது லயிக்கும் பொருளும் தானும் இரண்டற ஒன்றும் அத்வைத சித்தி. இதுவே சென்னின் நோக்குமாகும்.

பிரக்ஞையின் ஆழத்தில் / சங்கீதத் தலைவாயும்

கடைவாயும் ஒருவாயாகி / அம்மூச்சே இசையாகி

ஒவ்வொரு ஸ்வரமும் / அடுத்துவரும் ஸ்வரத்தை

இருகைவிhpத்து நீட்டி / வரவேற்பை விளம்புகையில்61

சீக்கிரமாகவே கவிதையில் ஷெனாயும் சாரங்கியும் ஒப்பிடப்படுகின்றன. ஏராளமான நரம்புகளினாலான சாரங்கி ஓர் அரிய இசைக்கருவி. இத்துடன் கீற்று’ வலைத்தளத்தில் தேடிப்பிடித்து வெங்கட் சாமிநாதன் எடுத்துக்காட்டும் செவ்விசைக்கருவி கவிதையும் ஒருசேர நோக்கத்தக்கதே.

ஷெனாய் இசைக்கும் சோகம், ஆஹா

செவிமடுக்காத செவியென்ன செவியோ

செவிமமடுத்துக் கரையாத மனமென்ன மனமோ

என்கிறான் மணி. என்ன செய்ய?

ஒருமுறையேனும் மாலி / முழுவீச்சுத் தொனி

பூரண / சாரங்கி இழைப்பில், ஒற்றைச் சோகக்

கீற்றை, ஆஹா / மடுக்கச் சொல் செவியால்62

செவ்விசை என்றால் இப்போதெல்லாம் / மாண்

டலின் உண்டு சிதார் உண்டு / சாக்ஸ போன் கூட

உண்டு இனி / எதுவெல்லாம் செவ்விசைக்கருவி

என்றாகுமோ தெரியாது / ஆனால் / இப்போதும் சடி

அப்போதும் சரி / செவ்விசை என்றால் நீதான்

உண்டு சாரங்கி63

தத்துவமஸி தத்துவத்தில் தொடங்கி இசைக்கோலத்தில் முடிகிறதென்றால், நாதாவளி இசைக்கோலத்தில் தொடங்கிச் சென் மெய்யியலில் நிறைகின்றது.

சம்பூரணத்துவம் / என்று நீங்கள் தேடுவதானால்

சம்பூரணத்துவம் / இங்கு இந்தியாவில் / சங்கீ

தத்தில் காணக் கிடைக்கிறது / என்றார் அபிநவ்

கோஷ் / என்றேன் பெரியசாமியிடம்

நல்லது. ஆனால் மாலி / சங்கீதம் தவிர வேறு ஒன்றில் / சம்பூரணத்துவம் காணக் கிடைக்கின்ற நாடு / எதுவென்று சொல்லேன். அல்லது / இருப்

பது தெரியாமல் வேறு / எந்த ஒன்று சுவடற்று

நிலைக்கிறது சொல்லேன் என்றான்”64

ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்கு மட்டுமல்லாமல், இசைக்கோலங்களின் ப்யூஷன்களாகவும், ஒரு கலையிலிருந்து இன்னொரு கலைக்கு மட்டுமல்லாமல், மெய்யியலும் கலையும் சங்கமிப்பதாகவும் மாறிமாறி வடிவெடுக்கின்றன சி.மணியின் கவிதைகள். பழமரபின் தாக்கமும் புத்தாக்கமும் கலந்து மயங்கும் வெவ்வேறு பண்களை மீட்டுமொரு சாரங்கியின் சம்பூர்ண செவ்விசைக் கீற்றுகளே சி.மணியின் கவிதைகள் யாவும். என்னதான் அவரது வாழ்க்கை அலைவுகளை விட்டுச்செல்வதைக் காட்டிலும் சுவடற்று மறைவதே மேலென இயல்பே வாழ்வாக இயங்கி நின்றதென்றபோதிலும் அவரது பங்களிப்பு எல்லாமும் நம்மில் இருப்பது தெரியாமல் சுவடற்று நிலைத்த பூரண சாரங்கி இழைப்பின் கமகங்களே.

1. சி.மணியுடனான சிபிச்செல்வன் செவ்வி - உயிர் எழுத்து மே 2009.

2. பிரேமிள் - பிரகடனம் (சிவசேகரத்திற்கான அதிரடிக்கவிதை) மீட்சி

3. முற்சுட்டிய உயிர் எழுத்து செவ்வி

4. கவியரங்கம் - வரும்போகும் - செப்டம்பர் 1974

5. கரிச்சான் குஞ்சு - புதுவிழிகள் - 1984.

6. சு.அரங்கராசு (அக்னிபுத்திரன் - கனல்மைந்தன்) - தமிழ்ப் புதுக்கவிதை ஒரு திறனாய்வு - திசம்பர் 1991 - .132

7. தி.சு. நடராசன் - தமிழின் அடையாளம் - செப்டம்பர் 1999 - .114.

8. செல்வம் (சி. மணி) - யாப்பியல் - நடை இணை வெளியீடு.

9. Kamil V. Zvelabil - New Voices In Tamil Poetry - மேற்கோள் - தமிழ்ப் புதுக்கவிதை ஒரு திறனாய்வு.

10. முற்சுட்டிய உயிர் எழுத்து செவ்வி.

11. சி.கனகசபாபதி கட்டுரைகள் - கவிதை: மரபம் புதுசும் திசம்பர் 2003 - .157-159.

12. நரகம் - வரும்போகும்.

13. ஜகன் - புதுக்கவிதையின் உருவம்-தாமரை பிப்ரவரி 1969.

14. பிரேமிள் - தமிழின் நவீனத்துவம்- திசம்பர் 2011 - .131 & 128 - 129.

15. மீட்சி: 19 - அக்டோபர் 1989.

16. சு.அரங்கராசு - முற்சுட்டிய நூல்.

17. தி.சு.நடராசன் - கவிதையெனும் மொழி - ஆகஸ்ட் 2008 - .101.

18. பிரம்மராஜன் - மீட்சி: 7 - பிப்ரவரி 1994.

19. பிரேமிள் - முற்சுட்டிய நூல் - .133

20. முற்சுட்டிய உயிர் எழுத்து செவ்வி.

21. ஏங்கல்ஸ் - மின்னாகோட்ஸ்க்கிக்கு எழுதிய அஞ்சல்.

22. நா. வானமாமலை - புதுக்கவிதையில் உள்ளடக்கம் - தாமரை - திசம்பர் 1968.

23. சி. மணியின் கடிதம் - தாமரை - பிப்ரவரி 1969.

24. நா. வானமாமலையின் பதில் - தாமரை பிப்ரவரி 1969.

25. பச்சையம் - வரும் போகும்

26. சி. கனகசபாபதி கட்டுரைகள் - முற்சுட்டிய நூல் - .307.

27. தி.சு. நடராசன் - கவிதையெனும் மொழி - .101.

28. பிரேமிள் - முற்சுட்டிய நூல் - .130.

29. வெங்கட் சாமிநாதன் - இப்படியும் ஒரு பயணம் - உயிர் எழுத்து மே 2009.

30. நரகம் - வரும் போகும்

31. பொதிகைச்சித்தர் - புதுப்புனல் - திசம்பர் 2011.

32. தீர்வு - வரும் போகும்.

33. . முத்துசாமி - புதுக்கவிதையில் புதுமொழி அமைப்புகளும், புது

அர்த்தத்தளங்களும் புதுக்கவிதையும் புதுப்ரக்ஞையும் - இலக்கு கட்டுரைகள் - திசம்பர் 1985 - .149.

34. சிக்கல் - வரும் போகும்.

35. .மதுசூதனன் - தமிழ்ப் புதுக்கவிதைகளும் மெய்யியற் சிந்தனைகளும் - நவம்பர் 2003 - .66.

36. இடையீடு - வரும்போகும்.

37. பச்சையம் - வரும்போகும்

38. நுஃமான் - திறனாய்வுக் கட்டுரைகள் - திசம்பர் 1985 - .146&147.

39 & 40. சி.சு. செல்லப்பா -மாற்று இதயம்- மே 1974 - .49-54.

41. படைப்பு - ஒளிச்சேர்க்கை - ஜீன் 1976.

42. சி. மணி - தோண்டி - .184 - 2006 -பிரசுரமாகாத கவிதைகள் - உயிர் எழுத்து - மே 2009.

43. பிரேமிள் - முற்சுட்டிய நூல்.

44-45. . பூரணச்சந்திரன் - கவிதை மொழி : தகர்ப்பும் அமைப்பும்; - மே 1998.

46. சிதைவை நோக்கி - புது எழுத்து - .18 - 2010.

47. சி. மணியின் கவிதைகள் குறித்து என் சிலர் - 2010.

48. சிதைவை நோக்கி- முற்சுட்டிய கட்டுரை - 2010.

49. கோணம் - ஒளிச்சேர்க்கை

50. புது எழுத்து : 18 - 2010.

51. . மதுசூதனன் - முற்சுட்டிய நூல் - .67 & 68.

52. வெங்கட்சாமிநாதன் - முற்சுட்டிய நூல் - உயிர் எழுத்துக் கட்டுரை.

53. ஞானம் - 5-8-193 - இதுவரை

54. சுபுத்தி உதவுகிறார் -ஞானரதம் ஒளிச்சேர்க்கை.

55. புத்தர் கை கொடுக்கிறார் - ஒளிச்சேர்க்கை.

56. பாரதி - மேற்கோள் - யதார்த்தமும் ஆத்மார்த்தமும் - மு.பொன்னம்பலம்.

57. முற்சுட்டிய புது எழுத்து இதழ்.

58. அலைவு - வரும் போகும்.

59. . பூரணச்சந்திரன் - முற்சுட்டிய நூல் - .79.

60. பிரேமிள் - வெயிலும் நிழலும்- திசம்பர் 2011 - .233 (அக்டோபர் 2005.)

61. தத்வமஸி - பிரசுரமாகாத கவிதைகள் - உயிர் எழுத்து - முற்சுட்டிய இதழ்

62. சீக்கிரமாகவே நவம்பர் 2005 - உயிர் எழுத்து - முற்சுட்டிய இதழ்.

63. செவ்விசைக்கருவி - வெ.சா. மேற்கோள் - உயிர் எழுத்து - முற்சுட்டிய இதழ்.

64. நாதாவளி- 16.4.2006 - உயிர் எழுத்து - முற்சுட்டிய இதழ்.

முற்றும்.

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

’திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ மீதான ஒரு மருத்துவப் பரிசோதனை அறிக்கை