சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 2 )

ற்றொரு பக்கத்தில் மரபுமார்க்சியர்களின் தரப்பில் சி.மணியின் நரகம் மீதான குறுக்கீடுகளை இனிக்காண்போம். ஒரு படைப்பாளி தன்மைஒருமைக்கூற்றாக பாத்திரம் அல்லது நிகழ்வுப்போக்கைச் சித்திரிக்க நேர்கையில் பாத்திரத்தின் கருத்தினையே படைப்பாளியின் கருத்தென மயங்க இடமாகின்றது. இதுபற்றிப் பேசுமுகமாகவே

அவர்கள் ஆசிரியனுடைய சிந்தனையின் தூதுவர்கள்

எனமயங்குவது இலக்கிய அறியாமையே21

எனக் கடிந்துரைப்பார் ஏங்கல்ஸ். ஆனால் இத்தகைய குறுக்கீடு ஒன்று பேரா. நா.வானமாமலையாலேயே சி.மணி மீது முன்னிறுத்தப்பட்டதும் முரண்நகையே எனலாம். நரகம் கவிதையை முன் வைத்து

இக்காட்சிகளில் பிரவகித்த தாரையோடு கவிஞர்

வீட்டிற்கு வருகிறார்22

எனத் தம் கட்டுரையில் எழுதிச் சென்றார் நா.வா. இதற்கு எதிர்வினையாக சி.மணியின் கடிதம் ஒன்றும் அவர் கட்டுரை வெளியான தாமரை இதழிலேயே வெளியானது. நா.வா.வும் தொடர்ந்தார். இவ்விவாதத் தரப்புகளைக் காண்போம்.

அவருடைய (நா.வா) விளக்கம் முழுவதும் இவ்வாறே அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்வது எப்போதும் தவறு என்று சொல்ல வரவில்லை. தன்மைஒருமையில் எழுதப்பட்ட கவிதையின் தலைவன் அதை எழுதிய கவிஞன் தான் என்று எடுத்துக்கொண்டு பொருள்கூறுவது சிலவேளைகளில் சிக்கலைஉண்டாக்கிவிடும் சி.மணி23.

கவிஞன் பாத்திரமாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டு பேசினால், அப்பேச்சைப் பாத்திரத்தின் பேச்சாகவே கொள்ள வேண்டும் என்று மணி கூறுகிறார். பாத்திரமாகக் கவிஞன் மாறிவிடும் பொழுது, பாத்திரத்தைக் கவிஞனாகவே கருதி விமர்சனம் செய்வதும் தவறல்ல. இங்கும் இதுவோர் உத்திமுறையேயன்றி கவிஞனைக் குறைகூறும் முறையில் எழுதப்பட்டதன்று - நா. வானமாமலை24

என நா.வா. பதிலளித்த போதிலும் அது ஏற்புடைத்தாக அமையவில்லை. மேலும், நரகம் எழுதப்பட்டதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட வகை ஆணைப்பற்றியது. நரகம் அது நடப்பைச் சார்ந்தது; லட்சியத்தைச் சுட்டுவது அல்ல எனத் தம் நிலைப்பாட்டை முன்வைத்த பின்னரும் அதனை ஏற்காமல் சீரழிந்த நோயுற்ற மரபையே சி.மணி முதலான புதுக்கவிஞர்கள் பின்பற்றுகிறார்களென ஒற்றை நிலைப்படுத்திப் பொத்தாம்பொதுவில் இது மரபை மீறுகிற புரட்சியுமல்ல, புதிய மரபைப் படைக்கும் முயற்சியுமல்ல என மறுதலித்து விடுகின்றார். அவரது கணிப்பு இதனைப் பொறுத்தவரையில் சரியானதன்று. இதற்குப் பின்னால் எழுதிய தம் பச்சையம் கவிதைப்படைப்பிற்கூடாகவும் சி.மணி இதற்குக் கவித்துவத்துடன் விடை பகன்றுள்ளது இங்கே மனங் கொள்ளத்தக்கதாகும்.

சொல்கிறார்கள் / எழுத்திலே கூடாதாம்

பாலுணர்ச்சி கூடினால் பச்சையாம்

எழுத்திலே பச்சை எழுத்தாளன் / மனத்திலே

பச்சையென் றாகுமா? / நாடகத்தில்

பாத்திரங்கள் பேச்செல்லாம் / ஆசிரியர்

பேச்சா? / நரகம் எனது நரகமா? / நரகத்

தலைவன் நரகமா?

“பலவகை ஆறுகள் / எனக்குள் இருக்கும் கடலில்

கலக்கும்; / எழுபவை கடல்முகில்25

சி.கனகசபாபதியும் வேறுவார்த்தைகளில் நா.வா. பார்வையையே வழிமொழிபவராகி விடுகின்றார்:

தமது நரகம் பச்சையம் வரும்போகும் ஆகிய மூன்று புதுக்கவிதைகளிலும் பாலியலை மனமுறிவோடுதான் காட்டுகிறார்.

சி.மணி பச்சையாக எழுதுவதால் அவரைப்பற்றி அவர் மீது அதை ஏற்றிவிட முடியாது என்பது மெய்தான். ஆனால் சி.மணி என்ற கவிஞரின் பச்சையப் பார்வையில் தனிமனிதனின் மனமுறிவுக்கு இடமிருக்கிறது.26

இதற்கு மாற்றுத் தரப்புகளையும் ஒருசேரக் காண்போம்:

பச்சையம் காதல் மற்றும் பாலியல் பற்றிய ஆரோக்கியமான ஒரு சொல்லாடல். இவை மூன்றும் (பச்சையம் நரகம் வரும்போகும்) கதை சொல்லுகிற கவிதைகள் அல்ல; ஆனால் நடப்பியல் நிகழ்ச்சிகளை மையமிட்ட கருத்தியல் சித்திரிப்புகள்; வருணிப்புக் கவிதை என்பது இப்படி அமையலாம் என்று வழிகாட்டத்தக்க படைப்புகள் - தி.சு. நடராசன்27

எழுச்சி மனசில் ஏற்படுத்தும் சலனத்தின் தொடர்நிலைதான் நரகம். செக்ஸ் மனசை ஆக்ரமிக்கும்போது, அதில் வசப்பட விரும்பாதவனுக்கு அது ஊட்டும் அருவருப்புணர்ச்சிதான் இங்கு கவிப்பொருள். ஆனால் முதலில் பெறும் இளைஞனின் மன ஓட்டங்கள் கவிப்பொருளாகுமா என யோசித்தேன். பின்னால் தான் அது வெறும் நினைவுத்தொடர் அல்ல, எண்ணங்களின் கோவை அல்ல, மனசில் எழுந்த அருவருப்புணர்ச்சிதான் என்று தெரிகிறது. அந்த அருவருப்புணர்ச்சி அப்படியே வாசகனின் மனசிலும் பாம்பாக நெளிந்து ஊர்வதை சி.மணி சாதித்திருக்கிறார். அதில் வெறும் வாலிப அடோலஸண்ட் - கனவு இல்லை. தூலமாகப் பொருள் வடிவில் பார்த்தாலும், கனவு எப்போதும் முடிவில் இன்பம் என்று செக்ஸ் ஆசையை எழுப்பி அதைத் திருப்தி செய்யும் பொருள் இல்லை. உள்ளதை உள்ளபடிப் பார்க்கும் முதிர்ச்சி தெரிகிறது. செக்ஸ், புத்திக்கு ஊட்டும் அருவருப்பை எழுப்ப சினிமாப் பாட்டிலிருந்து, பழம் இலக்கியங்களிலுள்ள செக்ஸ் எழுச்சியூட்டும் பகுதிவரை போயிருக்கிறார் - பிரேமிள்28

சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள் என்ற அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டு அதைமாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமர்சிக்கும் பொருளில் வைக்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சனமும் பொதிந்தது - வெங்கட் சாமிநாதன்29

காமஉணர்ச்சியின் சுருதியைக் கோக்க இலக்கியவரிகளைப் பொறுக்கி இருப்பதுடன் அருவருப்பும் கலக்க வெட்டுண்ட புண் என்பது போலும் உவமைகளையும் எடுத்துக்காட்டும் பிரேமிள் காமத்தை நாம் நமது இலக்கியங்களில் கிண்டல் பண்ணியிருந்த போதிலும் இத்தகைய அருவருப்புணர்ச்சியை அதற்கு ஏற்றிக்காட்டினது இல்லை என்பார்.

காமம்; பல நோய் ஒருமொழி / புற்று சோகை

ஈளை / இரத்த அழுத்தம் இன்னுமென்ன உண்டோ

அத்தனை அத்தனையும் காமத்துள் அடக்கும்30

ஆக, நா.வானமாமலை பார்வையில் சீரழிந்த நோயுற்ற மரபாகப் படுவது, சி.கனகசபாபதி பார்வையில் தனிமனித மனமுறிவாகப்படுவது, தி.சு.நடராசன் பார்வையில் பாலியல் குறித்த காத்திரமான சொல்லாடலாகப் படுகின்றது; வெங்கட் சாமிநாதன் பார்வையில் சமூக நடப்புகளின் மீதான விமர்சனமாகப் படுகின்றது. ஆனால் பிரேமிள் பார்வையிலோ காமம் மனத்தை ஆக்கிரமிக்கையில் அதற்கு வசப்பட விரும்பாதவனுக்கு அது ஊட்டும் அருவருப்புணர்ச்சியே கவிப்பொருள் என்பதாகி விடுகின்றது. இவ்வாறு பன்முக வாசிப்புகளுக்குமான சாத்தியக்கூறுகளைத் தன்னகப்படுத்தியுள்ளதும் சி.மணியின் நரகம்மின் சாதனை எனலாம்.

பிரேமிள் சுட்டிக்காட்டும் அருவருப்பதிர்ச்சி வடமொழியில் ஜீகுப்ஸ பீபஸ்தம் எனப்படுமென இதற்கு உதாரணமாக சாருவின் எழுத்துக்களை எடுத்துரைப்பார் இந்திரா பார்த்தசாரதி. இதற்கு உதாரணமாக இன்னும் கலிங்கத்துப்பரணி மற்றும் .பிச்சமூர்த்தி வரிகளை எடுத்துரைப்பார் பிரேமிள். காரைக்காலம்மையாரை எடுத்துரைப்பார் தெ.பொ.மீ.. கரிச்சான் குஞ்சுவையும், இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தையும், ரமேஷ் பிரேதனையும் எடுத்துரைப்பேன் நான்.31

* * *

தீர்வு என்னும் கவிதை மீதான இருவேறு வாசிப்பின் பிரதிகளைக் காண்போம். முதல் வாசிப்பு தீர்வு கவிதையை மட்டும் முன்வைத்தும், அடுத்த வாசிப்பு தீர்வுடன் சிக்கல் கவிதையையும் அகப்படுத்தியும் முன்வைக்கப்பட்டுள்ளன:

என்ன செய்வ திந்தக் கையை / என்றேன்

என்ன செய்வ தென்றால் / என்றான் சாமி.

கைக்கு வேலை என்றி ருந்தால் பிரச்னை

இல்லை; / மற்ற நேரம், நடக்கும் போதும்

நிற்கும் போதும் இந்தக் கைகள் / வெறுந்தோள்

முனைத்தொங் கல், தாங் காத / உறுத்தல்

வடிவத் தொல்லை / என்றேன். கையைக்

காலாக் கென்றான்32

கையைக் காலாக்குவ தென்றால் மிருகமாக மாறிவிடுவதா? கால்கள் ஆதாரமாக இருப்பதைப் போலக் கைகளையும் ஆதாரமாக்குவது, கவிதை யாப்பை விட்டவுடனேயே கவிஞனுக்குப் புதிய பிரக்ஞை திறந்து கொண்டுவிட்டது என்று தோன்றுகிறது. அதுதான் உண்மை - நா.முத்துசாமி33

தாங்காத உறுத்தல் வடிவத் தொல்லை என்பதனை முன்னிறுத்தி யாப்பினையே வடிவத்தொல்லை என்பதாக முத்துசாமி அர்த்தப்படுத்திக் கொள்கின்றார். இங்கே வடிவத்தொல்லை என்பதனை யாப்பென்கிற அளவிலே மட்டுமே சுருக்கிக் காணாமல் புறவடிவச்சோதனை என்பதோடு மட்டும் நில்லாமல் உள்கட்டமைப்பின் ஆதாரத்தையும் வலியுறுத்த முனைவதாக எடுத்துக்கொள்வதே பொருத்தமானதாகப் படுகின்றது. ஏலவே யாப்பியல் நூலில் சி.மணி புதுக்கவிதையின் விசேஷத்தன்மை யாப்பினை மீறல் அல்ல என அறுதியிட்டதைச் சுட்டிக்காட்டி கணிப்பொறித்தனமாய் ஓடும் பிரக்ஞை திடுக்கிடும் படிக்குப் பிறக்கும் புதுவிதக் கருத்தமைப்புத்தான் கவித்துவம் என்னும் பிரேமிளின் அதிரடிக்கவிதையிலும், உருவத்தின் கட்டுக்கோப்பாக யாப்பையும், உள்ளடக்கத்தின் கட்டுக்கோப்பாக இறுக்கத்தையும் இனம்கண்டு கவிதையின் புறமாகிய உருவத்தைவிட அகமாகிய உள்ளடக்கத்தில் தான் அழகென சி.மணி தம் யாப்பியல் நூலிலும் வலியுறுத்தக் கண்டதனைக் கவனத்திற்கொண்டே இத்தகைய புரிதலுக்கு நாம் வந்தடைய வேண்டியதாகின்றது.

இன்றைய சூழலில் மனிதனுக்கு வேலை இல்லை. அறிவுத் துறையில் நுட்பங்கள் பெருகிவிட்டன. மூளை உழைப்பாளிக்கும் கைகளைக் கொண்டு செய்வதற்கு வேலை இல்லை

என்பதாக இதனை அர்த்தப்படுத்த முயலும் . மதுசூதனன் பார்வையோ, அதற்கு ஏற்றாற்போல் அடுத்துவரும் சிக்கல் என்ற கவிதையையும் இக்கவிதையுடன் ஒருசேர நோக்கி வேறுவிதமான வாசிப்பை முன்வைக்கலாகின்றது.

பூ என்றூதித் தள்ளக் / கூடியதையும் கூந்தல் பிய்த்துக் / கொள்ளும் சிக்கலாக்கிக் / கொண்டுவிடும் / புதுப்பழக்கம் நம்மைத் தொத்திக்கொண்டு விட்டது34

இன்றைய மனிதனுக்கு ஏற்பட்டுள்ள புதுச்சிக்கல் மூளைச்சிக்கல். காரணம் தனித்திறன் பெருக்கம். இது பூ என்றூதித் தள்ளக் கூடியதையும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் சிக்கலாக்கிக் கொண்டு விடும் புதுப்பழக்கம். இதனாலேயே கையைக் காலாக்கும் தீர்வுக்குச் செல்கின்றான் - . மதுசூதனன்35

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே எனவும், பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் எனவும் உணர்வோர்க்கும் உணர்த்துவோர்க்கும் ஆன உணர்ச்சிவாயில் பற்றியும் உணர்த்தும் வல்லமை பற்றியும் வரையறுக்கும் தொல்காப்பியம்.

சொல்ல விரும்பிய தெல்லாம் / சொல்லில்வருவதில்லை

சொல்ல வந்தது சொல்லில் / வந்தாலும் கேட்பதில் சிக்கல் / கனியின் இனிமை / கனியில் மட்டுமில்லை / சுவைப்போன் பசியை, / சுவைமுடிச்சைச் சார்ந்தது, எண்ணம் / வெளியீடு / கேட்டல் / இம்மூன்றும் ஒன்றல்ல / ஒன்றென்றால் / மூன்றான காலம் போல் ஒன்று36

தேனீ காண்பது மலர்வனம் / ஆநிரை காண்பது பசுந்தரை / காண்பது நோக்கைச் சார்ந்தது37

எனத்தம் கவிதைகளுக்கூடாகவே ஏற்பின் அழகியல் பற்றி எடுத்துரைக்கின்றார்.

நவீனவாதமென மாடர்னிசத்தைச் சுட்டுகின்ற நுஃமான் அதுபற்றிச் சமூக விஞ்ஞானக்கலைக்களஞ்சியத்திலிருந்து எடுத்துரைக்கின்றார்.

மரபு ரீதியானவற்றைப் புதுமைக்குக் கீழ்ப்படுத்துகின்றதும் நிலைபேறடைந்த சம்பிரதாய பூர்வமானவற்றை இன்றையத் தேவை நிர்ப்பந்தங்களுக்கு இணங்கப்படுத்துகின்றதுமான ஒரு மனப்போக்காகும். இந்த மனப்போக்கின் செயன்முறைத்தாக்கம், பழைமை பேணுவதாக அல்லது புரட்சிகரமானதாக இருக்கலாம். பழைமையை அழியாது காப்பாற்றுவதற்காக அதைப் புதுமையுடன் இணங்கப்படுத்தும்போது அது பழைமை பேணுவதாகின்றது. புதுமையின் நிமித்தம் பழைமையை நிராகரிக்கும்போது அது புரட்சிகரமானதாகின்றது38

இவ்வாறு எதன் நிமித்தமாக இணங்கப்படுத்தி எதனைப் பேணிட முயல்கின்றதென்பதைப் பொறுத்தே அவரவரின் நவீனத்துவம் பற்றியும் நாம் இனம்காண ஏதுவாகும்.

ஒழிக கடவுள் / அழிக சாதி / புரட்சி ஓங்குக / புதுமை

தோன்றுக எனக் கூவினாய் / நீயோ, நானோ / மரபான

பழைமையும் முதிர்ந்த நெறியும் /

வாய்ந்த நம்வீடு / அந்நியம் ஆவதா / எனக்

குமைகின்றேன் - சி.சு.செல்லப்பா39

சிவப்பின் மிரட்டல் / பச்சையின் விரட்டல்

வெண்மைக்கு வைத்த உலை / ஆன்மிகத்

தூய்மைக்கு / விழுந்துள்ள வேர்ப்புழு / நிலைப்பின்

ஆட்டம் / மீட்சிக்குத் தடுமாற்றம் / ஆன்மீக

அராஜகம் / ஒழுக்க திவால் / ஹிப்பி

வாழ்வு ஆதர்ஸம் - சி.சு. செல்லப்பா40

சிவப்பு மார்க்சியத்தையும் பச்சை பிராய்டியத்தையும், வெண்மை காந்தியத்தையும் குறித்து நிற்கின்றன. இத்தகைய செல்லப்பாவின் அந்நியம் ஆவதா எனும்

குமைச்சலும் ஆன்மிகக் தூய்மைக்கு விழுந்துள்ள வேர்ப்புழு என்னும் அச்சமும் பேணி நிற்பதெல்லாம் சனாதனத்தைத்தானே. திராவிட இயக்கத்தை எதிர்த்தலைக்காரணியாகக் கொண்டெழுந்த எழுத்து மரபில் .பிச்சமூர்த்தியும், சி.மணியும், பிரேமிளும், மீனாட்சியும் சிந்தனைமரபால் தம் எழுத்துச்சகபயணிகளிடம் இருந்து வேறுபட்டவர்கள். இவர்களுக்கிடையே பார்வை வேறுபாடுகளும் உண்டென்றபோதிலும் இந்நால்வரும் மதநீக்கிய (செக்குலர்) சிந்தனை மரபைச் சார்ந்தவர்களே. சி.மணியின் அதிகம் பேசப்படாத படைப்பு கவிதைக்கு ஊடாக இதனை இனங்காணலாம். படைப்பு அவருடைய சிந்தனைமரபின் செக்குலரிசத்திற்கும் மரபுரீதியானவற்றை நவீனத்துவத்துடன் இணங்கப்படுத்துமுகமாக புரட்சிகரமானதாகவும் இருப்பதற்குப் போதுமான உதாரணமாகும்.

நீலத்தாள் படத்திற்குக் / கயிறுநீட்டிச் சரிபார்த்துக்

கலவை கொட்டிக் கல்லடுக்கிக் / கலவை கொட்டி வீடு

கட்ட வரவில்லை; / அருங்கல்லொன்று கிடைத்தபோது

அகத்திலூறிச் சுழல்கின்ற / நிழலைச் / செதுக்க வந்தேன்

பல்லாண்டு படித்துப் / பழகிப் பழகிப் / பாடும் பாட்டிற்கும்

போடும் தாளத்திற்கும் / ஆட வரவில்லை; புதுப்புது

மெட்டுக்கு / மயங்கி நினைவிழந்து உடலாட்டித்

தாளமிடும் / மக்கள்நடம் ஆடவந்தேன்.

வாயில்முன் வழக்கம் போல் / புள்ளியிட்டுக் கோட்டைப்

போட வரவில்லை; / ஒற்றைக்கண் நிலவு ஒற்றை

யடித்து வெள்ளை பூசி / ஒளியாக்கிய வானில்

வலிந்தோ மெலிந்தோ / எழுகின்ற காற்றில்

தானாய் இசைந்தரும்பும் முகிற்கோலம் போடவந்தேன்.

சாத்திரக் கோட்பாடுகளை / நெஞ்சில் கரையவிட்டு

குறித்தபடிக் கோயில் / எழுப்ப வரவில்லை;

நிறைந்த அனலாவியை / விழைந்த கோளமாக்கும்

விரிந்த பாழ்வெளியில் / பால்வெளியாய்ப்

படைக்க வந்தேன்41

இதிலவரின் மீறலென்பது வெறும் வடிவமீறல் மட்டுமன்று. அகத்தில் ஊறும் நிழல் செதுக்கல், எழுகின்ற காற்றில் தானாய் இசைந்தரும்பும் முகிற்கோலம், மயங்கி நினைவிழந்து உடலாட்டித் தாளமிடும் மக்கள்நடம், விரிந்த பாழ்வெளியில் பால்வெளி எனவாங்கு அவரின் படைப்பாக்க முறைப்பாடுகளும், கோயில்பண்பாடு கடந்த வெட்டவெளி வேட்கையும் சிறப்பாக நமக்குப் புலனாகின்றன.

இன்னொரு கவிதை தோண்டி அது நந்தவனத்தில் ஓர் ஆண்டி எனும் கடுவெளிச்சித்தர் பாடல்வரிகளைத் தொடக்கமான ஊடிழைப்பிரதியாக்கிக் தொடங்குகின்றது. ஆனால் அப்பாடலின் முடிவில் மாறுதலுடன் தொடர்கின்றது.

கூத்தாடிக் கூத்தாடிப் / போட்டுடைக்காமல் அதைப்

பின்னோருக்காய்க் கொடுத்துச் சென்றாண்டி

பின்னோரும் அதைப் / பேரழிவு சீரழிவின்

போதெல்லாம் / ஏதோ பாதுகாத்தாயிற்று

இப்போதெல்லாம் அதைக் / கடவுளே விரும்பினும்

காப்பாற்ற முடியாது, / முட்டாள்களின் கையிலிருந்து42

கடவுளே விரும்பினாலும் இப்போததனைக் காப்பாற்றமுடியாத அளவிற்கு முட்டாள்களின் கையிலிருந்தென அவர் குறிப்பிடுவது மதங்களைப் பற்றித்தானே? மோட்சகுண்டத்தில் தான் எழுப்பிய பூதத்திற்குத் தானே ஆட்பட்டு விடுவதைப்போல எனத்தம் கைவண்டிச்சரக்கு கட்டுரையில் புதுமைப்பித்தன் தத்துவ வழிபாட்டைப்பற்றிப் பேசுவதும் இங்கே எண்ணத்தக்கது. விழிப்புணர்வின் ஆன்மிகமாகச் செயல்படவேண்டி மனிதன் படைத்துக்கொண்ட சமயமென்பது அதிகாரத்தைக் காபந்து பண்ணும் பூசாரிகளின் கையில் மதவாதமாகத் திரிந்திருக்கும் அவலத்தையே சி.மணியின் தோண்டி சிறப்பாகச் சித்திரிக்கின்றது. கவிஞன் பழையவற்றுடன் பூணும் உறவே மரபு. தற்காலத்தில் உயிரோடு இருப்பவனே கவிஞன் என்பார் டி.எஸ்.எலியட். இத்துடன் பிரேமிள் பார்வையும் ஒப்புநோக்கத்தக்கது.

மரபு அனுபவத்தோடு சார்ந்து நிற்பது… பழைமையோடு பூண்ட உறவில் தன் அடையாளங்களைப் பிறப்பிப்பது தான் படைப்பு. பாதையில் பார்த்து நடந்துவந்து, அதன் குருட்டுமுனையில் வெட்டி

விட்டதே மரபு- பிரேமிள்43

சி.மணி பழையவற்றுடன் பூணும் உறவும், அதன் குருட்டுமுனையில் வெட்டிவிட்ட மரபும் படைப்பிலும் தோண்டியிலும் காணக்கிடக்கின்றன.

ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதே எத்தனையோ தன்மைகளை மனத்திற் கொண்டு அதைப் பிற புத்தகங்களோடு ஒத்தும் உறழ்ந்தும் பார்ப்பதாகிறது. இதைத்தான் நவீனவிமர்சகர்கள் பல்பிரதித்துவம் (intertextuality) என்கிறார்கள்44

கலை எங்கிருந்து வருகிறது? இதற்குப் பதில் கலை கலையிலிருந்து தோன்றுகிறது என்பது தான். பின் நவீனத்துவம் இதைத்தான் குறிப்பான் குறிப்பான்களுக்கே இட்டுச் செல்கின்றன என்று சொல்கின்றது. முன்பு பல்பிரதித்துவம் என்று குறிப்பிட்டதும இதுதான். கவிதை வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதப்படுவது அல்ல மாறாக முந்திய கவிதைகளிலிருந்தே இன்றைய கவிதை எழுதப்படுகிறது- . பூரணச்சந்திரன்45

சி.மணியின் பழந்தமிழ் இலக்கியவரிகளை ஊடிழைப்பிரதிகளாக்கி நவீனத்துவத்துடன் இணங்கப்படுத்தும் உத்தி இத்தகைய குறிப்பான் குறிப்பான்களுக்கே இட்டுச்செல்வதற்கு உதாரணமே. சி.மணி கவிதைகளில் பிரதான அம்சமான பழமரபின் தாக்கமும் புத்தாக்கமும் எத்தகைய வீச்சுமிக்கன என்பது குறித்த இன்னும் சில பதிவுகளையும் காண்போம்.

சி.மணியின் கவிதைகள் தனது செவ்வியல்தன்மையில் இருந்து இந்தியத்தன்மையில் மிக விசித்திரமான மேற்கத்தியச் சிந்தனை மரபுகளின் வேர்களைப் பாய்ச்ச ஆரம்பித்தன. ஒவ்வொரு கவிதையும் அந்தக் கவிதைக்கான ஒரு நுழைவைக் கொண்டிருக்கும். அதுவே அந்தக் கவிதையை நம்முன் கொண்டு செலுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது - சாகிப்ரான்46

நவீன தமிழ்க்கவிதையின் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதல்களுக்கும் அக்கவிதைகளிலியங்கும் எதிர்த்தன்மை, செவ்வியலின் வடிவவிதிகளை நவீனத்தில் புனைவென அல்லது நிகழ்வென இணைத்தல் ஆகியவை குறிப்புகளில் உணர்த்தும் வகைகளில் நேசங்களுக்கும், சூட்சுமங்களுக்கும், இறுக்கமான புதிர்வெளியின் வெளிப்பாட்டு முறைகளுக்கும் காரணமாய்த் திகழ்ந்தவர் சி.மணி

சொற்களின் புராதனங்களையும் , அவற்றின் அழகுணர்ச்சிகளையும் எப்போதும் தேடிச் செல்பவராகவும், அவற்றை நவீனத்துவத்தில் மிகச்சரியாக இணைத்தலும், அவற்றின் எதிர்த்தன்மையின் விளைவுகளை அக்கவிதைகளிலேயே நிகழ்த்திக்காட்டியிருப்பதுமே சி.மணியின் வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது - ஜீவன் பென்னி47

வடிவரீதியலான அளவில் நவீனத்துவத்தை வரித்துக்கொண்டு உள்ளடக்கத்தில் சனாதனத்தை வலியுறுத்துகின்ற சி.சு.செல்லப்பா போலும் எழுத்துச்சகபயணிகளுக்கு மத்தியில் செவ்வியல்மரபை நவீனத்துவத்தில் இணங்கப்படுத்திப் பொருத்துவிக்கும் உத்தியாக அவர் பழந்தமிழிலக்கியச் சொல்லாடல்களைக் கையாண்ட விதம் முற்றிலும் வித்தியாசமானது.

தொடரும்...

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.