சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 1 )

ந்த ஒன்றையும் மீற வேண்டுமானால் அதற்கான முன்னிபந்தனை என்னவென்றால் அதனைப்பற்றிய புரிதலின் அடிப்படையிலிருந்து தான் அம்மீறல் தொடங்கப்பட்டாக வேண்டும் என்பதே. மரபின் சாராம்சத்தை உட்கிரகித்துக் கொண்டாலன்றி புதுமையைச் சமைத்திட ஒருபோதும் இயலாது. மரபையறிந்து மரபைமீறுதல் என்பதற்குத் தமிழின் ஆகச்சிறந்த உதாரணம் சி. மணியே. அவருக்கு இத்தகைய சரியான புரிதலுக்கு வழிவகுத்தது எது?

Traditional and Individual” என்ற கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. அதிருஷ்ட்டவசமாக அதில் மரபை முழுதாக அறிந்து கொண்டால் தான் நீ எதை மீற வேண்டும் என்பது தெரியும். நீ மரபைத் தெரிந்து கொள்ளாதவரை நீ புதுமையைப் படைக்க முடியாது. ஆகையால் நீ பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.1

என அவர் ஆங்கில இலக்கியம் பயின்ற போது அவருக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த டி.எஸ். எலியட்டின் கட்டுரையையே அவர் சுட்டிக்காட்டுவார். மரபை மீறுவது புதுக்கவிதை என்னும் போது அது ஏதோ யாப்பை மீறியதே புதுக்கவிதை என்பதான பிழையான அர்த்தப்பாட்டில் பிரயோகப்படலாயிற்று. புதுக்கவிதை என்பதன் உள்ளார்ந்த பொருண்மை அதுவன்று.

புதுக்கவிதையின் விசேசத் தன்மை / யாப்பினை மீறல் அல்ல இதனை / யாப்பியல் நூலில் கவிஞன் சி. மணி / அன்றே அறுதியிட்டதைக் கவனி / கணிப்பொறித் தனமாய் ஓடும் பிரக்ஞை / திடுக்கிடும் படிக்குப் பிறக்கும் / புதுவிதக் கருத்தமைப்புத்தான் கவிதை- பிரேமிள்2

சிவசேகரத்துக்கான தம் அதிரடிக்கவிதையில் இவ்வாறு எடுத்துரைப்பார் பிரேமிள். தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, யாப்படைவிருத்தி, யாப்பதிகாரம் எல்லாவற்றையும் ஈராண்டுகள் ஆராய்ந்து யாப்பும் கவிதையும் என விரிவாக எழுதினார். அதன் சுருக்கமே செல்வமென்ற புனைபெயரில் நடை இதழின் துணையேடாக வெளியிட்ட யாப்பியல் எனும் நூல். அவரது கவிதைகளைப் புரிந்து கொள்ளமாட்டாத புதுக்கவிதையாளர்க்கும் மரபுக்கவிதையாளர்க்கும் சவாலாக தம் அறைகூவலை யாப்பியலுக்கு ஊடாகவும் எழுப்பினார்.

என் பார்வை விசாலமானது. புதுக்கவிதை எழுதுகிறவர்களுக்குப் பழைய கவிதை தெரியாது. யாப்பு, எதுகை, மோனை, சீர், வெண்பா, ஆசிரியப்பா, குறள், வெண்பா, கட்டளைக்கலித்துறை தெரியாது. நடையில் வந்த கவிதைகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒளிச்சேர்க்கையில் வஞ்சிப்பா என்று யாரும் சொல்லவில்லை. யாராவது ஒருவர் கூடச் சொல்லவில்லை. எங்கே மரபு மீறுகிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. உங்களுக்கென்ன மரபு தெரியும்?.... மரபுக்காரர்களுக்குக் கவியரங்கம் மட்டும் தான் தெரியும். மற்றொன்றும் தெரியாது.3

மட்டுமல்லாமல் தம் கவிதைகளுக்கு ஊடாகவும் நயம்பட இவற்றைச் சித்திரித்தார்.

துணியின் தரத்தைக் கூற / உறுதியான வழி வேண்டுமா? / துணியின் மீது மரபு / முத்திரை இருக்கிறதா / பாருங்கள், அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை

அவருக்குத் தெரியும் / வெற்றியின் இரகசியம் / ஐயமென்ன / யாப்பின் / தூயபருத்தி ஆடைகளே / நீங்கள் எப்படித் தோற்றமளிக்க / வேண்டும் என்பதறிந்த / மரபுக்குழுத் தயாரிப்பு.

இவருக்குக் கவலையில்லை / இவருக்குக் கிடைத்துவிட்டன / புதுமை / தரும் பாவின் உலகின் பிரபலமான துணிகள்.

என விளம்பர மொழியில் விளம்பரக் கட்டமைப்பிலேயே தொடங்கித் தொடரும் சி. மணியின் கவியரங்கம்.

யாப்பிட்ட பனுவலெனும் விரகஞ் சேர்க்கும்

காப்பிட்ட வனப்புமுலைக் குமரி பார்த்தும்

யாப்பற்ற வெறுங்கவிதை யதனை யெப்படிக்

கைப்பற்றத் துணிந்தாரைம் புலனு மொப்பியே”

எனச் செவ்வியல் முடுகிசையில் தொடர்ந்து

அன்று மணிக்கதவை / தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும் / செய்தார் மாறிமாறி என்றும் / புலவர் அடைப்ப / கவிஞர் திறப்பார்.4

எனவாங்கு முடித்து மரபுப் புலவோர் அடைத்த கவிதையின் மணிக்கதவங்களின் தாழ்திறக்கின்றார் சி. மணி. இதன் விளம்பரமொழி வடிவரீதியான கட்டமைப்பின் காட்சிப்படுத்தல் எனத் தொடங்கி வாதவிவாதத் தரப்புகள் செவ்வியல் மொழியொடும் முடுகிசையோடும் ஊடாடி அவருக்கே உரித்தான அங்கத முத்தாய்ப்புடன் நிறைகின்றது இக்கவிதை. இக்கவிதையில் அவர்தம் செவ்வியில் குறிப்பிட்டது போல மரபுக்காரர்களுக்குக் கவியரங்கம் மட்டும் தான் தெரியும். மற்றொன்றும் தெரியாதெ’ன்பதும், புதுக்கவிதை எழுதுகிறவர்களுக்குப் பழைய கவிதை யாப்பு முதலானவை தெரியாது என்பதும் மிக இயல்பாக எளிமையாக அவரது உத்திகள் வாயிலாக அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ள பாங்கு கவனிக்கத்தக்கதாகும்.

அவரது எழுத்துச் சகபயணிகளுக்கு மத்தியில் யாப்பு பற்றிய புரிதல்கள் எவ்வாறிருந்தன, அவர்களிடமிருந்து சி.மணி எவ்வாறு வேறுபட்டிருந்தார் என்பதுபற்றிக் கண்போம்.

பிச்சமூர்த்தி மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்டு எழுதியபோதிலும் அவருக்கு யாப்புகுறித்த போதுமான புரிதல் இல்லை, கு..ரா.வுக்கும் கூடத்தான். இது குறித்துத் தாம் அவர்களுடன் இட்ட சண்டையின் விளைவாகவே, பயிலமுயன்றும் கைகூடாமல் .பி. யாப்பினைத் துறந்தாரெனவும், கு..ரா.வோ அத்தகைய கவிதை முயற்சிகளையே கைவிட்டாரெனவும் கரிச்சான்குஞ்சு5 புதுக்கவிதைக்குப் பாரதியா வழிகாட்டி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். வசனகவிதை முயற்சியில் தலைப்பட்டவர்களின் யாப்பு பற்றிய புரிதல் குறித்து இன்னும் சில பதிவுகளையும் இத்துடன் ஒரு சேரக் காண்போம்.

வசனகவிதைச் சாத்தியத்தை முன்வைத்தவர்கள் மரபுக்கவிதை இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். இவர்கள் செய்யுள்மரபை மட்டுமல்ல தமிழ்மரபையே மறுக்கும் அளவுக்கு மரபறியாதவராயும் தம்மைத் தனித்த மரபுள்ளவர்களாகவும் கருதும் போக்கினால் கவிதையைப் பற்றிய விவாதங்கள் வேறு தளங்களிலும் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பாரதிதாசனைப் போன்றோர் இப்புதிய முயற்சிகளைப் புறக்கணித்தனர் - சு. அரங்கராசு.6

மரபுக்கவிஞர்களில் பாரதிதாசனும், புதுக்கவிஞர்களில் சி. மணியும் யாப்பினைக் கையாளும் வல்லமையில் துறைபோகியவர்கள்.

பாரதிதாசன் மரபைப் போற்றியவர். மரபுக்கு ஓர் அழகையும் நெகிழ்ச்சியையும் இனிய இசையையும் அந்த மரபுக்கு ஒரு தகுதியையும் தந்துவிட்டுப் போனார். அவர் யாப்புக்களை ஒரு தளையாக - வெறும் வாய்பாடாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனை உயிர்ப்புடையதாக, ஆக்கமும் சுவையும் உடையதாக மொத்தத்தில் கவிதையாக ஆக்கிக் கொண்டார். யாப்பையும் மரபையும் ஒரு கவிஞன் எப்படி வெற்றிகொள்ள முடியும் என்பதற்குப் பாரதிதாசன் சான்று - தி.சு. நடராசன்7

எவ்வாறு யாப்பையும் மரபையும் ஒரு கவிஞன் மரபுக்கவிதையில் வெற்றிகொள்ள முடியும் என்பதற்குப் பாரதிதாசனே தலைசிறந்த உதாரணம் என தி.சு.. சுட்டிக்காட்டுகின்றாரோ அவ்வாறே புதுக்கவிதையிலும் யாப்பையும் மரபையும் வெற்றிகரமாகக் கையாளவல்ல வல்லமைக்கு ஆகச்சிறந்த உதாரணம் சி. மணியே எனலாம். மரபுக்கவிதை புதுக்கவிதை இரண்டிலுமே யாப்பைச் சிறப்பாகக் கையாள்வதென்பது சிற்பிக்கும் கைவந்த கலையே.

உருவம் உள்ளடக்கம் குறித்த அன்றைய காலக்கட்ட விவாதத்தரப்புகளிலிருந்து பொதுவாக வடிவச்சோதனையைப் பிரதானப்படுத்திய எழுத்துமரபு, உள்ளடக்கப் பாடுபொருளையே பிரதானப்படுத்திய வானம்பாடிமரபு இரண்டிலிருந்தும் மாறுபட்டதே சி.மணியின் பார்வை.

உருவம் கவிதையின் புறமாகும். உள்ளடக்கம் கவிதையின் அகமாகும். உருவத்திற்குக் கட்டுக்கோப்பைத் தருவது யாப்பு. உள்ளடக்கத்திற்குக் கட்டுக்கோப்பைத் தருவது இறுக்கம். கவிதையின் புறமாகிய உருவத்தில் விட, அகமாகிய உள்ளடக்கத்தில் தான் கட்டுக்கோப்பு (அழகும்) முக்கியமானது. உள்ளடக்கத்தின் இயல்பே படிமம் என்னும் அழகு தான்; உருவத்தின் இயல்பு, தொடை என்னும் அழகு என்று சொல்ல வேண்டியது இல்லை- செல்வம்8 (சி. மணி)

உருவம் உள்ளடக்கம் என்ற இயந்திரவயப் புரிதலைக் கடந்து புறக்கட்டுமானம், உள்கட்டமைப்பு எனக் காணவல்ல தீர்க்கமான பார்வைத்தீட்சண்யம் சி. மணிக்கு அன்றே வாய்த்திருந்ததனை இனம்காட்டும் இந்தப் புள்ளியும் அவரது தனித்துவச்சிறப்பின் குறிப்பிடத்தக்க அம்சமே எனலாம்.

இந்திய இயக்கத்தில் நவீனத் தமிழ்க்கவிதை விரைவானதோர் உந்துசக்தியாகச் செயல்பட்டது. சென்னையில் (1959) எழுத்து முதல் இதழில் . பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதையை வெளியிட்டுப் புதுக்கவிதை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் சி.சு. செல்லப்பா” - கமில் சுவலபிள்9.

தமிழில் தமக்கு யாரும் முன்மாதிரி கிடையாது எனத் தம்முடனான சிபிச்செல்வன் செவ்வியில் பிரகடனப்படுத்தும் சி. மணி தமது எழுத்துச் சகபயணிகளிடமிருந்து தாம் வேறுபடும் புள்ளியை அச்செவ்வியில் சுட்டிச்செல்கின்றார்.

.பி. பெட்டிக்கடை எழுத்துவில் வந்ததைப் பார்த்து நிறையப் பேர்கள் எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது

முக்கோணம் என்ற கவிதை எழுத்துவில் 1959-இல் முதல்முதலாக எழுதினேன். டி.எஸ்.எலியட்டின் பாதிப்பில் முக்கோணம் எழுதினேன்.

அப்போது நான் பெட்டிக்கடை நாரணன் படித்தது கிடையாது. சங்க இலக்கியம் படித்திருக்கிறேன். பட்டினப்பாலையின் வான் பொய்ப்பினும் தான் பொய்யாத் தலைக்காவிரி என்று தொடங்குகிற கவிதை இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பத்துப்பாட்டிலும் இருந்த பாடல்கள் என்னைப் பாதித்தன. இவ்வளவு நீண்ட கவிதைகள் பட்டினப்பாலையிலும், பத்துப்பாட்டிலும் படித்தேன். சி.சு. செல்லப்பாவுடன் எழுதி எழுத்துவில் பிரசுரமானது.

பழைய ஆட்களுக்கு நாம் எல்லோரும் கடன்பட்டிருக்கிறோம். அண்மையில் இருக்கிற யாருக்கும் கடன்படவில்லை. ஆனால் தொன்மையில் இருக்கிறவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம்.

சீரடி வஞ்சிப்பா தமிழில் இப்போது பழக்கமானதாகிவிட்டது. எதுகை, மோனை இப்படியும் வரலாம். அப்படியும் வரலாம். இது யார் கொடுத்தது. 20ஆம் நூற்றாண்டின் சி.மணி தான் இதைக் கொடுத்தார். நரகத்தில் நீண்ட கவிதைகளில் கொடுத்தேன்.10

இந்தப்புள்ளியும் சி.மணி தம் சகபயணியரிடமிருந்து தனித்து வீற்றிருக்கும் இடம். சங்கப்பாடல்களின் செவ்வியல்மரபை அவர் மீட்டெடுக்கும் இடம். பட்டினப்பாலை வரிகளுடன் சி.மணியின் நரகம் வரிகளை ஒப்பிட்டு நிகழிடம், காலம், களன் ஆகியவற்றை ஒப்பிட்டும், செயற்கை வழித் தடுமாற்றத்தை விதந்தோதியும் முன்வைக்கப்படும் ஓர் ஒப்பாய்வுப் பதிவினை சி.கனகசபாபதி அருமையாக முன்வைத்துள்ளார்.11

சங்ககாலம் செவ்வியல் இலக்கியக் காலம். நமக்குத் தற்காலத்தில் புதுக்கவிதையால் செவ்வியல் மரபு திரும்பியிருக்கிறது. அதிலும் அதீதப் புனைவியல் போக்கை விட்டு மாறியிருக்கிறது.

பட்டினப்பாலையில் ஒருசில வஞ்சிவரிகளைப் பார்ப்போம்.

பொய்யா மரபின் பூமலி பெருந்துறைத்

துணைப்புணர்ந்த மடமங்கையர் / பட்டுநீக்கித்

துகிலுடுத்து / மட்டுநீக்கி மகிழ்ந்து / மைந்தர்

கண்ணி மகளிர் ஆடவும் / மகளிர் கோதை

மைந்தர் மலையவும் / நெடுங்கான் மாடத்து

ஒள்ளெரி நோக்கிக் / கொடுத்திமிற் பரதவர்

குரூஉச்சுடர் எண்ணவும் / பாடல் ஓர்த்தும்

நாடகம் நயந்தும் / வெண்ணிலவின் பயன் துய்த்தும்

இங்கே ஆசிரியப்பாவுடன் தொடர்ந்து வருகிற வஞ்சிவரிகளுக்காக உதாரணமாக நான் காட்ட விரும்பவில்லை. இதிலுள்ள செவ்வியல் பாங்கையே உணரவேண்டுமென்று சொல்லுகிறேன். சி.மணியின் நரகம்மில் இதுக்கு ஒப்பான பகுதி காணப்படுகிறது. என்ன இது, உருத்திரங்கண்ணனாருக்கும் சி.மணிக்கும் ஒப்புமையா என்று அதிர்ச்சி அடைவார்கள் கவிதை வாசகர்கள்.

பகல் பன்னிரண்டு மணி; பின் / இரவு பன்னிரண்டு நரகப்பகல், பெருநரக / இரவு எத்தனை எத்தனை? ஐயோ / திரைப்படவரங்கு நுழைவதற்கே சீட்டு வழங்கும் அறைக்கதவு / திறப்பது எப்போதெப்போதென / உளம் வெளியேறப் பார்ப்பதுபோல் / தந்தைவாய் திறப்பதென்றோ / எனவயர்ந்து நோக்கி நோக்கி, / விளக்கணைப்பை வரவேற்பை செய்திச்சுருளை திரைப்படத்தை / மனக்கண்ணில் ஓட்டும் நிலை; / தானியங்கி ஏற நின்று / நிற்காமல் போவதை ஏங்கி / நோக்கும் மலடிநிலை

இந்தப் புதுக்கவிதையில் வஞ்சிவரிகளின் நினைவு எழுந்து அதே அசைவு பிறக்கிறது.

பட்டினப்பாலை வரிகளிலும் நரகம் வரிகளிலும் செவ்வியல் பாங்கே தழைக்கிறது. இந்த ஒன்றையே சிந்தியுங்கள் நீங்கள். புதுக்கவிதைக்கும் சங்கப்பாட்டுக்கும் மரபுத்தொடர்ச்சி இல்லாமலா போகிறது?

கவிதைரசனையோடு இக்கேள்விக்கு விடைகாண வேண்டுகின்றார் சி.. இங்கு அவர் வலியுறுத்தும் சங்கப்பாடல்களின் செவ்வியல்மரபின் தாக்கம் மட்டும் அல்லாமல் யாப்புமரபு, கவிதைமரபு என்கிற வகையிலும் விதவிதமாக விதந்தோதி இனங்காணப்பட வேண்டியதே சி.மணியின் நரகம் ஆகும். நரகம் கருத்தியல் முறைமையாக மரபு மார்க்சியர்களாலும், பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி, பழைய இலக்கியவரிகளுக்கு வலிப்புநோய் என உருவவியல் நோக்காளர்களாலும், டி.எஸ். எலியட் செய்ததை சி.மணி செய்கிறார் என மிகை எளிமைப்படுத்திப் பிறழ முன்வைப்பதாய் பழமரபறியாதவர்களாலும் அன்று குறுக்கீடுகள் நிகழ்த்தப்படலாயின. இத்தகைய தரப்புகளையும் இவற்றிற்கு எதிரதான மாற்றுத்தரப்புகளையும் இங்கே ஒருசேர ஒத்துறழ்ந்து நோக்குவோம்.

சி.மணியின் நரகம்மில் கலித்தொகை, கம்பராமாயணம் விவேகசிந்தாமணி வரிகள் ஊடிழைப் பிரதிகளாகக் காணக்கிடக்கின்றன.12

சூடகத் தளிர்க்கை மற்றைச் / சுடர் மணித்

தடக்கை பற்றி எனும் கம்பராமாயண வரிகள்

சூடகத் தளிர்க்கை மாதரொடு / சிகரெட்

பிடிகை மைந்தரும் என வாங்கும்

மாந்தரே பெரிதென்பாரும் / மகளிரே

பெரிதென்பாரும் / போந்ததே பெரிதென்பாரும் /

புகுவதே பெரிதென்பாரும் / தேர்ந்ததே

தேரினல்லால் / யாவரே தெரியக் கண்டார் எனும் கம்பர் வரிகள்

சேவலே முன் என்போரும், இல்லை / பெட்டையே

முன் என்போரும், இல்லை / வரிசையே

நன்றென் போரும் ஏறுவோரும் / தேர்ந்ததே

தேரினல்லால் / யாவரே தெரியக்கண்டார் எனவாங்கும்

பொய்யோ எனும் இடையாளொடும் / இளையானொடும்

போனான் / மையோ மரகதமோ மறி / கடலோ

மழைமுகிலோ / ஐயோ, யிவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான் எனும் கம்பர் வரிகள்

பொய்யோ எனும் இடையோடு / ஐயோ வெனும்

அரும்பினர் கிடைத்தாரென நெறிப்பன எனவாங்கும்

அரும்பேந்திய கலசத்துணை அமுதேந்திய மதமா

மருப்பேந்திய எனலா முலை வஞ்சி, .. காவின்கீழ்

போதர் அகடாரப் புல்லி முயங்குவேம் / துகள்தபு காட்சி

வையத்தார் ஓலை / முகடு காப்பி யாத்துவிட்டாங்கு… /

கற்பகஞ் சேர்ந்த மார்பில் கன தன மிரண்டுந் தைத்தே /

அப்புறம் உருவிற்றென்றே / அங்கையால் தடவிப் பார்த்தாள்

என முறையே கம்பராமாயண, கலித்தொகை, விவேகசிந்தாமணி இலக்கியவரிகள் அப்படி அப்படியேயும் ஊடிழைப்பிரதிகளாக ஊடாட விடப்பட்டுள்ளன. இவ்வாறு இவையிவை இன்னின்ன இலக்கியத்திற்குரிய வரிகள் என இனங்காண முடிந்தபோதிலும் ஊடிழைப்பிரதியான உத்தியெனப் பிடிபடாமல் இதனை ஈயடிச்சான் காப்பி’யென ஜகன் தாமரை இதழில் முன் வைத்திருந்தார்.13

புரியும் விஷயங்களைக் கூட புரியாமல் செய்து திணர அடிக்கிறார்கள். பழைய இலக்கியத்தின் செழிப்பான மரபுக் கவிதைளிலிருந்து மேற்கோள் காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை வெட்டிவெட்டி விறகுக் கட்டைகளாகப் போட்டு இலக்கியத்தையே கறைப்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக நரகம் என்னும் ஒரு கவிதையில்…..

கோரமான காக்கைவலிப்பு நோய்க்குத் தமிழை உட்படுத்தும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டினார் ஜகன். மாற்றுத்தரப்புகளை இத்துடன் ஒருசேரக் காண்போம்.

இங்குமட்டும் பழம்இலக்கியத்தை அதுவும் அப்படிஅப்படியே காப்பியடிக்கலாமோ என்று ஒருத்தர் குஸ்திக்கு வரக்கூடும். அந்த ஒருத்தர் டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம்மைப் படிக்க வேண்டும். எலியட் தங்கள் ஐரோப்பிய இலக்கியங்களிலிருந்து மட்டும் அல்ல, இந்திய நூல்கள் வரை மேற்கோள்ரீதியில் சேர்த்திருக்கிறான். அது அவனது பாண்டித்தியத்தைக் காட்டுகிற டம்பம் என்று தான் ஆரம்பத்தில் பலர் கருதினார்கள். ஆனால் போகப்போகத் தெரிந்தது. அப்படி மேற்கோள்களாக அவன் பிற நூல்களுக்கு வாசகன் மனத்தை அலைய விட்டிராவிட்டால், ஐந்து பிரிவுகளுக்குப் பதிலாக, பத்து பதினைந்து பெரிய புத்தகங்களே எழுதியிருக்க வேண்டும் என்று அவ்வளவுக்கு அவன் செய்த வேலை பிரம்மாண்டமானது.

ஷேக்ஸ்பியர் பாஷையில் எலியட் சொல்லும் வரிகள், அதே அனுபவத்தை எழுப்பும் இதை, அதுவும் ஓரளவுக்குத்தான் மணி செய்திருக்கிறார் - முதல்முயற்சி என்ற அளவுக்கு. இதுக்கும் தம்மிடம் சொல்ல தமதனுபவம் இன்றிக் காப்பியடித்து இமிட்டேட் செய்வதுக்கும் வித்தியாசம் உண்டு.

பிச்சமூர்த்தியின் கவிதைத்தொகுப்பில், காலம் பிரித்து அவர் சப்தநயத்தை எப்படி மாறி மாறி பொருளின் இசைவுக்கு ஏற்ப உபயோகித்து வந்திருக்கிறார் என்று கண்டால், அதற்குப் பக்கத்திலேயே நிற்கும் இன்றைய புதுக்கவிதைக்காரர்கள் தொகுப்பில், சப்தம் பொருள் இரண்டும் தங்களை மனச்சலனத்தின் இழைக்கு அர்ப்பணித்துள்ளதைக் காணலாம். இந்த மனச்சலனத்தை, பிரக்ஞை ஓட்டத்தை, தூலமான பொருள்களில் அவற்றின் சப்தநயத்தோடேயே சூசகமாக எழுப்பும் முயற்சி, சி.மணியின் நரகம்மில் வந்திருக்கிறது. அதை ஆரம்பத்தில் ஒன்றிரண்டு வாசிப்பில் நான் சரியாக உணரவில்லை. அதில் நிரம்பியிருக்கும் பழம்இலக்கிய வாடை எனக்குச் சலிப்பூட்டியது, வார்த்தைப் பிரயோக விஷயமாக: சேலைத்தலைப்பைப் பட்டம் விட்டு, வானுக்கு வழிகாட்டும் காலச்சுவடு போன்ற சி.மணியின் தனிமுத்திரைகள் விழுந்த படிமங்களைத் தவிர வேறு அதிகம் இல்லையென நினைத்தேன்14 பிரேமிள்.

சி.சு.செல்லப்பாவும் பரிபாடலின் தாக்கத்தில் மெரினாவைப் படைத்தளித்தார். பல்வேறு சங்கப்பாடல்களைப் புதுமெருகு என புதுக்கவிதை வடிவில் தந்தார். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றிலிருந்து 8 பாடல்களை இவ்வாறு மீளாக்கம் செய்திருந்தார். ஆனால் சி.மணியின் பாநெசவில் பழந்தமிழ் இலக்கியம் முதல் தனிப்பாடல் திரட்டு மற்றும் திரைப்பாடல் வரிகள் வரை நரகம்மிலும் பச்சையத்திலும் இழைபின்னிய ஊடுபாவின் ஊடாட்டத்தின் பரிமாணத்தில் புத்துருக்கொள்வனவாய் இழையோடிச் சிறக்கக் காணலாம். இத்தகு பரிமாணத்தினை நகுலன், நாஞ்சில் நாடன் மற்றும் எனது கவிதைகளுக்கூடாகவும் இனம் காணலாம்.

பழந்தமிழர் வார்த்தைகள் விரவிய யாப்பில் நவீன நிகழ்வுகளை சி.மணி கொண்டு வந்தது தமிழில் புதிய முயற்சி. எளிமை மறைந்து போய், சிக்கல்களும் போலித்தனங்களும் நிரம்பியதாகவும், உயர்ந்த மதிப்பீடுகள் சிதைந்து போனதாயும் நவீனவாழ்க்கை ஆகிவிட்டதை இவரது கவிதைகள் பொதுவாக உணர்த்துகின்றன - மீட்சி15

அவர் (சி.மணி) யாப்பியல் அறிந்தவர் ஆதலின் தமிழ்யாப்பைச் சிதைத்தும் மாற்றியும் பழந்தமிழ்ச் செய்யுள் வடிவங்களில் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்தியும் கிழக்கின் சாயலைப் புதுக்கவிதைக்கு அளித்தார். டி.எஸ். எலியட்டின் பாழ்நிலத்தில் முந்தைய ஆங்கிலக் மரபுக்கவிதை வரிகள் உத்திக்காகச் சேர்க்கப்பட்டிருந்தன. சி.மணியோ தமது நரகத்தில் மட்டுமல்லாமல் எழுதிய அனைத்துக் கவிதைகளிலுமே பழமரபுச்சாயலை ஒரு கோட்பாடாகவே கொண்டார் என்று தெரிகிறது. அவரிடமுள்ள சமூகப் போலிமைகளைத் தோலுரித்துக்காட்டும் ஆழ்ந்த அங்கதத்தொனிக்கு இப்பழமரபுச்சாயல் வெகுவாகப் பயன்பட்டது - அக்னிபுத்திரன்16.

சி.மணியின் நெடுங்கவிதைகள் மூன்று ; நரகம் (360 வரிகள் 1962) வரும் போகும் (350 வரிகள் 1965), பச்சையம் (250 வரிகள் 1966)

முதல் இரண்டும் நகரவாழ்க்கையின் நெருக்கடிகளையும் மாறிவிடும் மதிப்பீடுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு சித்திரிக்கின்றன.

“மொழித்தளத்தில் சங்க இலக்கியங்களிருந்தும் கம்பனிலிருந்தும் பொருத்தமான பாடல் வரிகளை இயல்பாக இழையோட விட்டிருப்பது சி.மணியின் தனித்தன்மை. இதன்மூலம் செவ்வியல் ரசனையையும் அதே நேரத்தில் கிண்டல் தொனிக்கிற ஒரு வக்கிரத்தையும் இந்த நெடுங்கவிதைகள் முன்னிருத்துகின்றன - தி.சு. நடராசன்17

இவை மூன்றும் சி.மணியின் சிறப்பியல்புகளையும் வெவ்வேறு பரிமாணங்களையும் இனங்காணும் வேறுபட்ட வாசிப்பின் வெவ்வேறு பிரதிகளே. டி.எஸ்.எலியட் செய்ததை சி.மணி செய்தார் என்னும் .நா.சு.வின் தரப்பு பொருட்படுத்தத் தக்கதன்று. பாழ்நிலத்தின் தமிழாக்கமன்று நரகம். பாழ்நிலத்தின் சாராம்சத்தையும் உத்தியையும் உள்வாங்கிச் செரித்துத் தன்வயமாக்கி அதன் தாக்கத்தில் தமிழ் இலக்கிய மரபின் தாக்கமும் மீக்கூரப் புத்தாக்கமாகப் புனையப்பட்டதே சி.மணியின் நரகம். பாழ்நிலம் பற்றிக் காண்போம்.

எவ்வளவு படித்திருப்பவர்களுக்கும் இலியட்டின் கவிதைகள் எளிதில் புரிந்துவிடுவதில்லை. இலியட் மேற்கோள்கள், மறைமுகக் குறியீடுகள், வேற்றுமொழி இலக்கியங்களின் பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு மொசைக் அமைப்பை உருவாக்குகிறார். சில சமயங்களில் புரிதலுக்குத் தடையாகக் கவிதையை அணுகமுடியாத அளவுக்கு இந்த உத்தி அமைந்துவிடுகிறது.

இலியட்டின் கவிதைகள் முழுமையாகப் புரிய வேண்டுமானால் தீவிரமான ஆழ்ந்த படிப்பு அவசியமாகிறது. குறிப்பாக பாழ்நிலம் ஒரு கவிதைப்புதிராக இருக்கிறது.

முற்றிலும் அர்த்தமிழந்த, உடைந்த சில்லுகளை ஒத்த கலாச்சாரம் - மில்டன், ரிச்சர்ட் வேக்னர், பெட்ரோனியஸ், ஷேக்ஸ்பியர், நெர்வால் போன்றவர்களின் கலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிதறல்கள் - இவை ஒன்றின் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டுப் பாழ்நிலத்தின் சிதைவு வெளிப்படுத்தப்படுகிறது - பிரம்மராஜன்18.

பிரக்ஞை எப்பவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த உள்ளத்துக்குத் தான் புதுக்கவிதையின் உள்ளோட்டம் தெரியும். ஒரு சொல்லென்றால், அதன் அகராதி அர்த்தத்துக்கு மேல் ஓடாத மரத்த உள்ளங்களில் பிரக்ஞை இப்படிச் செயல்படப் போவதில்லை. பாழ்நிலம்மிலோ இந்த பிரக்ஞையின் சலனத்தை நூலறிவு வரை ஓட விட்டிருக்கிறான் எலியட். ஓட என்பதை விட, உள்மனசுக்கு ஆழ்ந்துபோக என்பது பொருந்தும்- பிரேமிள்19.

டி.எஸ்.எலியட் என்ன படித்திருக்கிறாரோ அதை எல்லாம் படிக்க வில்லை என்றால் wasteland’ புரியாது. எகிப்து, இந்தியா என்றெல்லாம் திரிந்தார் அவர். இங்கிருந்தெல்லாம் விஷயத்தை எடுத்துக்கொண்டார்.

மிகப் பரிகாசமாகவே கடித்த பாம்பு மெத்த வீங்கியது மாதிரிப் போகிறது. டி.எஸ்.எலியட்டின் எழுத்துகளில் சூஃபிசம், புத்திசம், உபநிஷதம், யுங், ஆட்லர், டெராகார்ட் இப்படி எல்லாமே கலந்து இருக்கும். இவை அத்தனையும் எனக்குத் தெரியும்- சி.மணி20

பிரம்மராஜனின் பார்வை எலியட்டின் கவிதைகளின் எளிதில் புரிந்துகொள்ள இயலாமை குறித்தும் அவரது உத்தியான மொசைக் அமைப்பின் மேலைநூற்கலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிதறல்கள் குறித்தும் பேசுகிறதெனில், சி.மணியின் பார்வை எலியட்டின் பயில்வு குறித்தும் பிரம்மராஜன் குறிப்பிடும் வேற்றுமொழி இலக்கியங்கள் இன்னின்னவை என்பது குறித்த கீழைமரபின் கொடைகள் குறித்தும் பேசுவதாகின்றது. பிரேமிளின் பார்வையோ எலியட்டின் உத்திவித்தையின் உள்ளார்ந்த நுட்பங்குறித்துப் புலப்படுவதாகின்றது. பாழ்நிலம் குறித்த மேலதிகப் புரிதல்களுக்கு இம்மூவர் பார்வைகளும் வழிவகுக்கின்றன. இத்தகைய புரிதல்களின் வெளிச்சத்தில் நரகத்தின் சிறப்பம்சங்களும் நமக்குத் துல்லியமாகின்றன. போகிறபோக்கில் .நா.சு. முன்வைத்த பிழையான தரப்பு இவற்றால் தகர்ந்துபோகின்றது.

தொடரும்...

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 3 )

’திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ மீதான ஒரு மருத்துவப் பரிசோதனை அறிக்கை