புனைவுகளாகவும் வாசிக்கமுடியும் விமர்சனக்கட்டுரைகளின் அழகியல்



கண்ணகன்




எத்தனை எத்தனையோ சிந்தனைப்பள்ளிகள்; எத்தனை எத்தனையோ கவிதைப்பள்ளிகள்; எத்தனை எத்தனையோ செல்நெறிகள். ஆனால் இங்கே தத்தம் இயக்கச்சார்பு  மற்றும் செல்நெறிச்சார்புகளை மட்டுமே முன்னிறுத்தி ஏனிந்த நிராகரிப்பின் அரசியல்? பெருங்கதையாடல்களின் தகர்வினை முன்னிறுத்தும் இந்தப் பின்னைநவீனத்துவ ஊழியில் அப்படி என்ன இந்த நவீனகவிதைப் பிதாமகன்களின் ஏகசக்ராதிபத்தியங்கள்? அழகியலின் பேரால் இது இங்கு நிகழ்த்தப்படும் கவிதை அரசியல்தானே. அனைவருக்கும் பொதுவான அழகியல்நியதி என்பது மட்டும் எப்படி சாத்தியப்படும் - வே.மு. பொதியவெற்பன்




   எமது ஆய்வுச்சூழலில் கோட்பாடுகளை முன்வைத்து வெளிவரும் நூல்களை, தனித்த அளவில் கோட்பாடுகளை மட்டும் முதன்மைப்படுத்தி விளக்கிச் செல்வனவாகவும், கோட்பாடுகளை அடிப்படை அணுகுமுறைகளாகக் கொண்டு பிரதிகளை ஆய்விற்குட்படுத்தவனவாகவும் இரு நிலைகளில் அடையாளங்காணமுடியும். படைப்பாக்க நெறிமைகள் குறித்தோ திறனாய்வு அளவீடுகள் குறித்தோ தேவையாய் இருக்கும், இத்தகைய பகிர்வுப்புல பொதுமைத்தன்மைகளில் இருந்து விட்டுவிடுதலையாகித் தனித்துவம் கொண்டு நிற்கிறது. வே.மு. பொதியவெற்பனின்சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும்’ நூல். கோட்பாட்டுப் பலிபீடங்களில் பிரதிகளைக் காவுகொடுத்து நிகழ்த்தும் ஆய்வுச்சடங்கு ஆச்சாரங்களுக்கு எதிர்வினையாய், பிரதிகளில் இருந்தே அவற்றுக்கான கோட்பாடுகளைச் சென்றடைகிற கவிநுட்பம் சித்தித்திருக்கும் வே.மு. பொதியவெற்பனின் ஆகப்பெரிய பலமாக அவரது தாளலயம்பிசகாத மொழிநடையும் வாய்த்திருக்கிறது.

   பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியவகைமைகள் மற்றும் ஆய்வுப்புலங்கள் வரையிலுமாக பன்முக ஆளுமைகளின் ஓர்மையுடன பரந்து விரிந்து சுழலும் பொதியவெற்பனின் வாசிப்பு உலகம், அவரைப்பற்றிய அறிமுக வாசகர்களுக்கு மிரட்சியூட்டக்கூடியதாகவும் கூட இருக்கமுடியும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இலக்கியக் கோட்பாடுகள் ஆனாலும் சரி, பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் ஆனாலும் சரி காலங்களை உட்செரித்து அவரது வாசிப்பனுபவ எல்லைக்குள்ளாக அவை உட்பட்டுவிடக் கூடியனவாகவே இருக்கின்றன. இந்தப் பழந்தமிழ் இலக்கண இலக்கியப் பயில்வுமுதிர்ச்சியில் வாய்க்கப்பெற்றிருக்கும் மொழியாளுமையும் இயங்கச் செறிந்து இறுகிக் கையளிக்கும் இசைத்தன்மை கொண்ட இவரது உரைநடை அல்புனைவிற்கு புனைவின் பரவசத்தை உண்டாக்கிக் காட்டவல்லதாக இருக்கிறது. புனைவிற்குரிய பூடகத்தன்மைகள் ததும்பும் இவரது மொழியின் இறுகல்நிலையே புரிதல் சாத்தியப்பாட்டின் உச்சத்தில் வாசகமனத்தை நெகிழ்த்தும் கவித்துவம் கொண்டதாகவும் இருக்கிறது. ஒன்றாகவும் வேறாகவும் தீபத்திற்குள் இயங்கும் வெம்மையும் வெளிச்சமும் போலஆவிப்பலகை ஊடகமாக நான் ஆடிநிற்குமொரு நாடகம் கட்டுரை புனைவிற்கும் அல்புனைவிற்குமான இடைவெளியின் தூரத்தை வெகுவியல்பாகக் கடந்துவிட்டிருக்கிறது. பொதியவெற்பனின் அனைத்துக் கட்டுரைகளின் ஊடாகவும் ஒரு புனைவுத்தன்மை புதைநிலையில் தொழிற்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்த விமர்சனத்தைப படைப்பாக மாற்றும் கலை புதியதொரு விமர்சன அழகியலாக வே.மு. பொதியவெற்பனின் கட்டுரைகளுக்குள்ளாக வெளிப்பட்டிருக்கிறது.

   வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட பன்னிரண்டு கட்டுரைகள் தொகக்கப்பட்டுள்ள தொகுப்பாக வெளிவந்திருக்கும் பொதியவெற்பனின் இந்நூலினுள், ‘கவிதையில் சொல் : மொழியில் வாழ்தலும் மொழிச்சலவையும் என்னும் கட்டுரை கவிதையாக்க முறையியல் குறித்து தமிழில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க கட்டுரைகளில் ஒன்று. கவிதையாக்க நெறிமைகளின் செயல்திட்ட இயங்கெழுச்சியில் முரண்பட்டுக் கிளைக்கவைத்து உரத்த வாசிப்பிற்கானதாகவும், மௌன வாசிப்பிற்கானதாகவும் தத்தமது திசைவரிகளில் இணைகோடுகளாய் முன்கைகளும் செல் நெறிகளைப் பற்றுக்கோடுகளாகக் கொண்டு ஒன்றையொன்று விலக்கிப் புறந்தள்ளும் நிராகரிப்பின் அரசியலைச் சுட்டிக் காட்டும் மேற்சுட்டிய கட்டுரை,


கவிதைப் பள்ளிகள் பலப்பலவாகலாம். அவரவர் கை மணல் அவரவர்க்கும். அதுஅது அதனதன் அதுஅது. என்றாலும் நமக்கு மந்திரம்போல் ஒலிக்கும் சொல்லின் இன்பமும் வேண்டும். சொல்லிறந்த தூவெளியாம் திருமந்திரமும் வேண்டும்

என்று ஈரெடுத்துரைப்பு வகைமைகளையும் பாரபட்சமின்றி அங்கீகரிக்கிறது. பிரதியைத் தம் சார்புநிலைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகாமல், பிரதியைப் பிரதியில் இருந்தே அணுகும்போது வாய்க்கும் பேதம் கடந்த போதத்தின் புரிதல்தளத்தில் நிற்பதனாலேயே இன்குலாபின் கலகக்குரலுக்கு ஊடான எதிர்அழகியல் குறித்தும், இருந்த போதினில் இருந்தும் இல்லாமலும், இறந்த பின்னரும் இல்லாதிருத்தலுமாய் என்றும் தொடரும் நகுலஇருப்பின் மஞ்சள்பூனை குறித்தும் இவரால் பாகுபாடின்றி எழுதமுடிந்திருக்கிறது.

   சமகாலத் தமிழ்க்கவிதையியலுக்குள் அறிவு -- அதிகாரம் இருட்டடித்து வெறும் கோடிட்ட இடமாய் விட்டு நகரும் விடுபடல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டும்; நிராகரிப்பின்அரசியல் மீதான கூர்மையான அவதானிப்புகளுடனும் கூடியனவாக வே.மு. பொதியவெற்பனின் கட்டுரைகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் தமிழ்க்கவிதைமரபின் சாதகபாதகங்களுக்குள் ஊடாடி ஆக்கபூர்வமான பெறுமதிகளின் பாரியதாக்கத்தினை நவீன கவிதைகளுக்குள்ளாகவும் அடையாளம் கண்டு முன்செல்லும் பொதியவெற்பனின் கட்டுரைகள், வெட்டவெளியில் நின்று வானம் பார்ப்பதுபோல் வசப்பட்டவரையிலும் தமிழ்க்கவிவெளியின் அகண்டத்தைத் தமக்குள் அகப்படுத்திக் கொண்டுவிட முனைந்திருகின்றன.

  சமகாலத் தமிழ்க்கவிதையியல் குறித்த மேலதிகப் புரிந்துணர்விற்கான வாசக வாசல்களைத் திறந்தபடி பன்மிய சாத்தியப்பாடுகளின் வித்தியாசங்களுடன் விகசித்து கிடக்கும் தமிழ்க்கவிவெளியின் திசைவழிகள் யாவிலும் பகலின் சிறுபொழுதுகளுக்குள் வெவ்வேறு விகிதங்களில் சுடர்ந்தியங்கும் வெயில்போல் பயணித்திருக்கும் வே.மு. பொதியவெற்பனின் ஆய்வுப்பார்வை எந்த கறாரான சார்புநிலைகளையும் தனது அடிப்படைகளாகக் கொண்டிருக்கவோ பின்பற்றியிருக்கவோ இல்லை என்பதே அவரின் தனித்த பங்களிப்பாய் நம்மை கவனங்கொள்ளச் செய்கிறது.

   ‘எல்லாமும் உருகவரும் அகம்படைக்கும் பக்தித் தடத்தையும் கரைந்துருகும் லயிப்பையும் கல்வியின் பரவசமாகவே சித்திரிக்கும் தேன்தமிழின் கவிதைகளுக்குள் பெண்கவிமொழியும் உடல்மொழியும் உருச்சமைக்கும்விரகபக்தி சமகாலப் பெண்கவிஞர்களின் பாடுவெளிக்குள் ஆவாஹிக்கப்படாத அதேவேளையில் ஆண்டாள் பாசுரங்களின் மரபுநீட்சியாய்த் தனித்துவம் கொண்டு வெளிப்பட்டிருப்பதை அறிமுக விமர்சிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறது தான்பற்றி நின்றெரியும் தேன் தமிழின் விரகபக்தி கட்டுரை. பக்தியிலக்கியங்களுக்குள் நாயன்மார்களதும் ஆழ்வார்களதுமான பாடல்கள் நாயகநாயகி பாவத்தில் அமைந்துகிடக்கின்றன எனினும் ஆண்டாளின் பாசுரங்கள் அவற்றிலிருந்து முற்றான முக்கியத்துவம் கொண்ட வேறுபாட்டைக் கொண்டுள்ளது. ஆண்டாளின் பாசுரங்கள் பாவனை வசப்பட்ட கற்பிதங்களாகாமல் நிதர்சன உணர்வுகளின் நிஜங்களாகப் புனையப்பட்டிருக்கின்றன. ஆன்மிக ஆண்கவிஞர்களின் நாயக நாயகி பாவனையில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கிய அகத்திணைப்பாடல்களின் பாவனைமரபினை அடிப்படையாகக் கொண்டிருக்க, சித்தர் மற்றும் சூஃபியர் மரபில் இந்த அகத்திணைமரபு மீறலுக்குள்ளாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒன்றுமட்டும் நுட்பமாய் விதந்தோதிக் காணுதற்குரியது. நாயக நாயகிபாவமான ஆண்கவிஞர் பாவனைப்பாடல்கள் சிற்றின்பத்தை ஊடகமாக்கிப் பேரின்பத்தைப் பூடகமாக்க வல்லன. ஆனால் பெண்கவிஞரின் விரகபக்திப் பெண்மொழியோ, இதனைக் கவிழ்த்துப்போடுவதாய் பேரின்பத்தை முன்னிறுத்திச் சிற்றின்பத்தை இயல்பாகச் சித்திரிக்கின்றன.”

என்றெல்லாம் தேன்தமிழின் கவிதைகளுக்கு ஊடாகப் பின்பின் நகர்ந்து அவரது கவிதைகளுடன் ஒத்திசையும் சங்கச்செய்யுட்கள், ஆண்டாள் பிரசுரங்கள், சித்தர் சூஃபியர் பாடல்கள், பாரதியின் கண்ணன் கண்ணம்மாப் பாடல்களோடும், முன் முன் நகர்ந்து பொதிகைச்சித்தர், மோகன், செல்வி, ரோகிணி, ஆடலரசு, நகுலன், செல்மா ஆகியோரின் கவிதைகளோடும் ஓர் ஒப்பியல் ஆய்வை நிகழ்த்திக் காட்டியிருப்பது பொதியவெற்பனுக்கு மிக எளிதாகக் கைவந்திருக்கிறது.

   மதிவண்ணனின் கவிதைகளை முன்வைத்து தலித்கவிதைகளின் எதிர்அழகியல் அம்சங்களைப் பேசும் தூமையிற் தோய்ந்த செருப்பூசிக் கவிநெருப்பு கட்டுரை தமிழ்க்கவிதைகளுக்குள், சாதிய மேலாதிக்கத்தின் மீதான உக்கிரம் வெடித்து வெளிப்படும் வசைச் சொல்லாட்சிக் கலகக்குரல்களுக்குச் சித்தர்பாடல்களில் வெளிப்பட்டிருக்கும் காத்திரக்குரல்களை முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டுகிறது. ‘கன்னட - மாராத்திய தலித் கவிதைகளில் மட்டுமின்றித் திகம்பரகவிகளின் புரட்சிகரத் தெலுங்குக் கவிமரபிலும் தலித் கவிதைகளுக்குரிய எதிர் அழகியல் கூறுகளை அடையாளங்காணும் பொதியவெற்பன், பிரேமிள் உள்ளிட்ட அதிரடிக் கவிதைமரபின் தொடர்நீட்சியாகவும் மதிவண்ணனின் சில கவிதைகள் வெளிப்பட்டிருப்பதை அடையாளங்கண்டும் பதிவுசெய்துள்ளார்.

   மதிவண்ணனின் கவிதைக்குள் வெளிப்பட்டிருக்கும் தொல்காப்பியச் சொல்லாடல் மீதான பகடியைத் தலித்கவிதைகளில் எதிர்அழகியலுக்குரிய குணாம்சமாக அதனளவில் புரிந்துகொள்ளக் கூடியவராகவும், அதேவேளையில் பிரேமிளின்வண்ணத்துப்பூச்சியும் கடலும்’ கவிதையைத் தொல்காப்பியப் பொருளதிகாரக் கோட்பாட்டின் ஊடாக அணுகி ஏற்புஅழகியலின் வாசிப்புப்பிரதியைக்கொங்குதேர் வாழ்க்கை - ஏற்பு அழகியலும் வாசிப்பின் பிரதிளும் என்ற கட்டுரையாக முன்வைப்பவராகவும், பிரதிக்குள்ளிலிருந்தும் பிரதிகளை அணுகும் வே.மு. பொதியவெற்பனின் விமர்சன எழுத்துக்கள் - முன்நிபந்தனைகளையோ, முன் முடிவுகளையோ கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்தின் சமகால நிலைபேற்றை, உயிர்த்தியங்கும் அதன் சமகால வகிபாகத்தை நவீனகவிதை வெளியில் வைத்து மதிப்பிட்டிருக்கும் மேற்சுட்டிய கட்டுரை, பிரேமிளின்வண்ணத்துப்பூச்சியும் கடலும் பிரதி மீதான சகபயணிகளின் வாசிப்புப்பிரதிகளையும் தொகுத்துத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   செவ்விலக்கிய முக்கியத்துவம் கொண்டவை என்பதாகவோ; மரபிலக்கியப் பயில்வுத்துறையே புலமைத்துவத்திற்கானது என்பதாகவோ தொடரும் நிறுவனமைய கல்விப்புலச்சூழலில் சங்க இலக்கியங்கள் குறித்த பலபடித்தான ஆய்வுகள் குவிந்துள்ளன. திணை, துறை, கூற்று, பாடியோர், பாடப்பட்டோர் என்ற தொகுத்தும் பகுத்தும் விளக்கிச்செல்லும் ஆய்வியல் போக்கின் திசைமாற்ற முன்னெடுப்பாய், புதிய பாய்ச்சலாய் அமைந்திருக்கும்கவிதை விளையாட்டில் வண்ணத்துப்பூச்சி’ கட்டுரை ஓர் அற்புத தர்சனம். தமிழ் நவீன கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் மட்டுமல்லாது ஜென்ஹைக்கூக்களிலுமாக விரவிக்கிடக்கும் வண்ணத்துப்பூச்சி பற்றிய புனைவுப்பதிவுகளைப் பொதியவெற்பன் தம் வாசிப்பு எல்லைக்குள்ளிருந்து தொகுத்து விவரித்திருக்கும்கவிதை விளையாட்டில் வண்ணத்துப்பூச்சி கட்டுரை நவீனகவிதை விமர்சனத்தின் எதிர்காலப் போக்கிற்கான முன்னோடிப் பங்களிப்பாக கவனிக்கத்தக்கது. வெவ்வேறு கவிதைஆளுமைகள் சங்கமிக்கும் ஒருமித்த புள்ளிகளில் இருந்த நவின தமிழ்க்கவிதைகள் மீதான விமர்சனங்கள் கோலங்களாய் விரிவதற்குண்டான சாத்தியப்பாடுகள் அதிகம். அத்தகைய சாத்தியப்பாட்டினைச் சுட்டிக்காட்டுவதாகவும் தேவைகளை வலியுறுத்துவதாகவும் முக்கியத்துவம் பெறுகிறது பொதியவெற்பனின் கட்டுரை. கவிஞர் ஷாராஷின் ‘பட்டாம்பூச்சியைக் கொல்லும் கலை கவிதை மற்றும் அவரது கவிதைகுறித்த புரிதல்கள் மீதான எதிர்வினையாக வெளிப்பட்டிருக்கும்கொலையின் கவிதையியல் குறித்து என்னும் கட்டுரை எதிர்க்கவிதைக்கும் எதிர்மரபுக்கவிதைக்குமான நுட்பமான வேறுபாட்டை அவற்றுக்கான பின்புலங்களோடு தெளிவுபடுத்துகிறது.

   கவிஞர் ரசூலின்மைலாஞ்சி கவிதைத்தொகுப்பின் மீது இஸ்லாமிய அடிப்படைகளுடன் நாகூர்ரூமி முன்வைத்துள்ள மதிபீடுகளுக்கான எதிர்வினையாகவும்; ரசூலின் கவிதைகளை எந்தத் தற்சார்புமில்லாமல் அவற்றின் இயல்பிலேயே அணுகித் தெளியும்போது வெளிப்படும் கலகக்குரல்களை இனங்காட்டவல்லதாகவும் ஒன்றே போல் சிவப்பதில்லை எல்லா விரல்களும்கட்டுரை அமைந்துள்ளது. ‘புனிதச்சட்டங்களைக்கூட கேள்விக்கு உள்ளாக்காமல் அவற்றின் அமலாக்கத்தில் நிலவும் ஆணாதிக்கத்தினைகேள்விக்குள்ளாக்கப் பெண்ணியத் தளத்தில் இயங்கும் ரசூலின் கவிதைகளுக்குள் சித்தர்மெய்யியலையும் சூஃபியிசத்தையும் கண்டடைகிற தர்சனப்பார்வையோடு மாத்திரமல்லாமல் பொதியவெற்பனின் இக்கட்டுரை பெருங்கதையாடல்வழி இறுகும் அதிகாரத்தை அடையாளம்காட்டிக் கட்டுடைக்கவும் செய்திருப்பது ஆக்கபூர்வமான பதிவாக இருக்கிறது.

   கவிஞராகவும் கதைசொல்லியாகவும் இருவேறு படைப்பாளுமைகளுடன் இயங்கும் இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் படைப்புலகம் மீதான ஆய்வாகஅத்திவெட்டி அதிகாரம் - இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் வேர்மூலம் கட்டுரை வெளிப்பட்டிருக்கிறது. கவிஞரின் ஒவ்வொரு பிரதியையும் தனித்தனிப் பிரதிகளாகவும், ஒட்டுமொத்தத் தொகுப்பையோ அல்லது கவியுலகையுமோ ஒரேபிரதியாகவும் அணுகமுடியும். இவ்வெல்லைகளுக்கும் அப்பால்ஞானதிரவியத்தின் கவிதைகளில் காணக்கிடைக்கும் கதைப்பாங்கிற்கும், புனைகதைகளில் காணலாகும் கவித்துவத்திற்குரிய தாதுமூலங்கள் யாவினுக்குமான ஆதிமூலம் அவரை ஈன்றெடுத்த மண்ணாதாரமே என்று அவரது புனைகதைகளுக்கும் கவிதைகளுக்கும் இடையிலான கவித்துவ ஓர்மைகளை அடையாளங்கண்டு பதிவுசெய்திருப்பதாக மேற்சுட்டிய கட்டுரை அமைந்திருப்பது சிறப்பு. சங்கஇலக்கிய மரபுத் தொடர்ச்சியில் ஈழத்துக்கவிதைகளில் காணக்கிடைக்கும் இயற்கைசார் புனைவுவெளியான பசுமை இலக்கியப் பரப்பை இலக்கமிகுமாரன் ஞானதிரவியத்தின் கவிதைகளுக்கூடாகவும் இனம்காணும் இக்கட்டுரை இனவரைவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள சிறப்பிற்குரியதாகவும் இருக்கிறது.

இறுதியாக வே.மு. பொதியவெற்பனின் நூலினது ஒட்டுமொத்த சாராம்சமாக நாம் கண்டடைய வேண்டிய தொடுபுள்ளியை அவரது வார்த்தைகளிலேயே சொல்லிக்காட்டி இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.

புரிந்துணர்வால் சாத்தியப்படட்டும் நமக்கிடையிலான உரையாடல்கள். நமக்கிடையிலான தொலைவைத் தொலைத்தாக வேண்டும். முறுக்கிநிற்கும்நானின்’ நாண்கள் தளரட்டும். முரண்படும் புள்ளிகள் அல்ல முக்கியமானவை. உடன்படும் புள்ளிகளில் சங்கமிப்போம்
 



Comments

Popular Posts

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.