வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்


(திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருந்த்தல் நூலை முன்வைத்து)

இரா.கந்தசாமி

 

     சாமான்யப் டிப்பாளியாக வாழ்ந்திருக்கக் கொடுப்பினை உள்ள மனித இருப்பு ஒன்றின் சமூக, வரலாற்றுக் கடன்கள் எவையெவை? மனித உரு தாங்கி இம்மண்ணில் விழுந்துவிட்ட உயிர்மைக்கான அறுதிப் பொறுப்புதான் என்ன? மனிதம் – உயிர்கள் - கோடானுகோடிப் பொருட்கள் - காலம், வெளி – பால்வீதி - அண்டவெளி எனும்  பெருவட்டப் பயணத்தில் மீண்டும் மனிதம் வரும் படிப்பாளி, தன் சாமானியப் படிப்பமைதியை இதயார்த்தம் மிக்க அறிவின் துணைகொண்டு மாந்தம் வளைத்து அரவணைக்கும் உயிர் அன்பே அந்த அறுதிப் பொறுப்பு; இத்தாவர சங்கமத்தின் கடலுள் ஒரு கையளவு வாழ்வின் பொருள்; பொதிகைச் சித்தரின் மொழியில் எம்மனோர்க்குக் கையளிக்கப்படும் பாடம். அப்படித்தான் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது வே.மு. பொதியவெற்பன் அவர்களின் 'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்' நூல். சாமானியப் படிப்பாளி எனத் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும் பொதியவெற்பனின் இதயப்பூர்வமான தருக்கப்பூர்வம். 'இப்பனுவலை எழுதப் புகுமுன் இருந்த 'நான்' வேறு. இதற்கூடாக வெளிப்போந்த பின்பான நான் வேறு. இவ்வனுபவம் உள்ள 'நானு'க்கும் இப்பனுவலூடே சித்திக்கும்.' என்று பொதிகைச் சித்தர் இந்நூலை வாசிக்கக் கிடைக்கும் அனுபவத்தை மிகத் துல்லியமாகக் கணித்திருக்கிறார்.
              ஒரு பெருந் தலைமுறை தாண்டி, வரலாற்றுத் தொடர்ச்சியெனத் தமிழ்ச் சமூக உளவியலின் நுண்ணலகுகளில் ஊடாடி, இருபதின் சமூக, கலை இலக்கியக் களங்களின் களப்பணியாளராய், அக்களங்களின் ஆணி வேர்களை அறிந்து தம்மனோர்க்குக் கை கொடுத்து, அல்லோர் மாட்டு அறச் சீற்றமுற்று, அங்குமிங்கும் சிதைவுற்றுத் தடுமாறிப் புரைக்கேறும் உளைவுற்ற இருப்புகளைத் தலையில் தட்டி அவர்தம் புரைநீக்கி, சிலம்பமாடி வெற்றி மண்ணை நெற்றி மண்ணாய்க் காட்டிச் சிறுபுன்னகையின் அடக்கத்தோடு எங்களுக்குக் கற்றுத்தரும் அவரின் விமரிசன முறையியலின் அழகியலுக்குள் புகுந்துவரும் நாமும் இனி புதிதே!
      எம் போன்ற இளைய ஆய்வாளர்களுக்கு முதலில் புலப்படுவது தலைமுறை தாண்டிய அவருடைய வாசிப்பனுபவத்தின் பிரும்மாண்டம். இங்கிருந்து, ஒருபால் கோடாத அவருடைய அறிவின் நுட்பமும் அறமும் அவற்றின் அழகியலும் அடுத்தடுத்துப் புலனாகி வியக்க வைக்கின்றன. பொதிகைச் சித்தர் ஊடாடும் களங்களின் ஆழமும் அகலமும் நுண்மையும் பற்றிய வரலாற்றுப் புரிதல்களோ, வாசிப்பின் நெறிமைகளோ நமக்குப் போதாதுதான்.
              ஆனாலும் இப்பனுவலின் வாசிப்பனுவத்தோடே முன்பிருந்த நானிலிருந்து பின்புள்ள நான் வேறாயிற்றே! பொதிகைச் சித்தரின் மொழிவலையின் கண்ணிகளில் விழுந்து சிக்குவது என்பது புதிய வாசகர்கள் எதிர்கொள்ளும் மிகத்தூலமான தாக்கம். இத்தகைய ஒரு தாக்கத்தை மிகப்பெருமிதமெனவே எதிர்கொள்ளத் தோன்றுகிறது. நிற்க!
         ஆகப்படித்த மேதைமைக்கு மோகமுறும் குணப்படுத்தவியலாது திரிந்துவிட்ட இருப்பை (ஜெயமோகனை) அடையாளப்படுத்தி, அந்த இருப்பினால் தொடர்ந்து விளைவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நச்சுவிதைகளை, இவை நச்சு விதைகளே என அம்பலப்படுத்திச் செடியைச் சுட்டெரித்து, நிலத்தைப் பண்படுத்தி ஊருக்கான விதை விதைத்துச் சொல்லேருழும் நல்லேருழவரின் வேளாண்மைக்குள் தங்கும் தாளாண்மைகளை வாசித்து வருகையில் நமக்குக் கிட்டும் பாடங்கள், மறைமுகமான வெளியில் விமரிசன முறையியல் குறித்த நமது கருத்தோட்டங்களின் மீது கடுமையான தாக்கத்தை நிகழ்த்தி விடுகின்றன.
       ஐயோ பாவம் தமிழவன்! அலைவுற்ற தன்மைகளால் இணைக்கப்பட்டு விதைகளைப் பெருக்காமல் மதர்த்து நிற்கும் தேவையற்ற கிளைகளைப் பெருக்கியமையால், கழித்துவிடப்பட வேண்டிய, ஒழுங்குபடுத்திச் செப்பனிடப்படவேண்டிய கடமையை விவசாயிக்கு ஏற்படுத்திவிடுகிறார். கண்ணுங் கருத்துமாய்ப் பயிர்வளர்க்கும் விவசாயிக்கும் வலிதான். என்ன செய்ய? களையோடு சேர்ந்து களையின் தன்மையுறும் செடியும் ரொம்பவே அடிபட்டுப்போகிறது. உழவனின் கைபட்ட பயிர்ச்செடிக்கு அது பெருமைதான். வருந்தாதீர் தமிழவன்!
        தொடக்கக் கட்டங்களில் உரையாடலுக்குத் தோதானவராக இருந்த ஜெயமோகன், பின்னாளில் சுயமோக நோய்க்குறி கொண்டவராக மாறியவுடன் அவருடனான உரையாடலை அறுத்துக் கொண்ட துணிவும், எதிரெதிர்த் துருவங்களின் முரண் ஈர்ப்புகளில் விளையும் விளையாட்டுத் தனத்தில் எதிரியின் முத்தத்தையும் ஏற்று நிற்கும் மேன்மையும் உடைய பொதியவெற்பன் தமிழவனைப் போற்ற வேண்டிய இடங்களில் போற்றவும் தவறவில்லையே!
           'அனுபவம் தர்சனம் எனும் தன்னிலை சார்ந்த அபிப்பிராயங்கள் பிராமணியத்தின் மாற்று வடிவங்கள்' என்றோ, 'நம் நிலத்தின் நிழல்பட்ட மூளையின் செயற்பாட்டைப் புரிந்துகொள்ள இந்தியச் சாதியமைப்பு பற்றிய அறிவு கண்டிப்பாய் வேண்டும்' என்றோ, 'பின்நவீனத்துவம் முன்வைக்கும் கலாச்சார முதல்வாதம் புதிய பார்வையையும் புதிய செயலூக்கத்தையும் தத்துவத்தையும் இடதுசாரி அணிகளுக்கு நல்கும் என்றோ கண்டறிந்து அவற்றைத் தமிழ்ச் சூழலுக்குள் வாய்ப்பாகப் பயன்கொள்ளும் தமிழவனின் நேர்மறைப் போக்குகளையும் சுட்டிக்காட்டி, 'இத்தகைய தமிழவனே நம் எதிர்பார்ப்புக்குரியவர்; அவருடனான உரையாடலுக்குச் சாத்தியமானவராகவே அவர் நீடிக்கிறார்' என்று மதிப்பிடுவது பொதிகையாரின் விமர்சன முறையியலின்படி அது பெருந்தன்மையன்று; நேர்மை.
      இப்படி அல்லவை விலக்கி நல்லவை காணும் ஓர் ஆய்வு முறைமை இப்படி ஒரு 'முறையியலாக' வடிவு கொள்கிறது.


  • தலித் விடுதலைப் போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். 
  • தமிழியக்கம் சைவச் சார்புடையது; திராவிட இயக்கத்துடன் தொடர்பற்றது. 
  • அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தையாக உருவாகி வந்ததே திராவிட இயக்கம். 
  • .வெ.ரா. ஆங்கில ஆதரவாளர். தமிழை நீச பாஷை, காட்டுமிராண்டிகளின் மொழி என்றவர். 
  • திராவிட இயக்கம் தன் மேடைப் பேச்சிற்குத் தனித் தமிழியக்கத்தின் சொல்லாட்சிகளைக் கடன் பெற்றது. 
  • திராவிட இயக்கம் நவீன இலக்கியத்திற்கு எதிரான சக்தியாகவே இருந்து வந்துள்ளது. 
  • இலக்கிய ஆளுமைகள் குறித்த வரலாறு எழுதியல் என்பது அவ்வாறு எழுதியோரின் அடையாளச் சிக்கலின் வெளிப்பாடு. 
  • புதுமைப் பித்தனைக் குறித்து இன்னும் சரியான ஆய்வுகள் வெளிவரவில்லை. 
  • திராவிட இயக்கம் வணிக இலக்கிய உத்திகளைக் கட்சிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது. 
  • மொத்தச் சிற்றிதழ் இயக்கமே திராவிட இயக்கத்தின் பெரும்பண்பாட்டுக்கு எதிராக அமைந்தது தான். 
  • பிராமணர்கள் தமிழகத்தில் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. 
  • சோழர்காலத் தேவரடியார் சமூகம் உயர்நிலையுடையதாக இருந்தது. 
  • திராவிட இயக்கம் தமிழ் மரபின் ஒரு சிறுபகுதியை மட்டுமே போற்றியது. 
  • திராவிட இயக்கம் நாட்டார் மரபை மறுத்தது. 
  • திராவிட இயக்கம் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லை.
எனும் ஜெயமோகனின் கருத்துகளை அக்கப்போர்கள், அடாவடித்தனங்கள், வஞ்சகங்கள், திரிபுகள் என்று நிறுவி அவற்றைத் தகர்த்தெறியும் பொதியவெற்பன் உண்மையில் கவனத்திற்குரியவர்.
  • தீண்டாமைக்கு எதிராக அன்றி, திராவிட இயக்கம் பிற்படுத்தப்பட்டோர் இயக்கமாக மாறிவிட்டது. 
  • திரு.வி.. பார்ப்பனச் சார்பாளர். 
  • ஆரம்ப கட்டத்தில் பிராமணர் அல்லாதார் வேறு; தமிழியக்கம் வேறு என்றுதான் இருந்தது. 
  • இன்றைய மக்கள் அரசியல் என்பது கால்டுவெல், சுந்தரம்பிள்ளை கூட்டணியால் விளைந்த காலனிய மனோபாவத்தில் உதித்தவையோ எனும் ஐயுறவு முக்கியமானதே. 
  • சமஸ்கிருதத்தில் உயரிய நாத்திகச் சிந்தனையும் உண்டு. 
  • தி.மு.. கண்டறிந்த மேடைத் தமிழ் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த உரைநடையின் தொடர்ச்சியே! 
  • திராவிட இயக்கம் மேடைக்காக என்று நமத்துப் போய்விட்டது. 
  • திராவிட இலக்கியம் அதிகாரத்தில் இருந்தவர்களால் எழுதப்பட்டது. 
  • திராவிட இயக்கம் நாட்டார் மரபுகளைப் புறம்தள்ளியது. 
  • தமிழக நகர்மயச் சூழலில் செல்வாக்குப் பெற்ற கருத்தே பெரியாரியம்.
என்பன போன்ற தமிழவனின் கருத்துகள், செடியோடு சேர்ந்து வளரும் களையாகி, ஜெயமோகனின் அடாவடிகளுக்கு ஒத்து வளர்வதையும், திராவிட இயக்க உருவாக்கமே காலனியக் கொடைதான் என்று திராவிட இயக்க அறிவு மரபை, மக்கள் சார்பைப் பார்க்கத் தவறும் தமிழவனின் காலனிய மனோபாவத்தையும் பொதியவெற்பன் (பின்வரக் கூடும் அவற்றின் ஆபத்தைக் கருதி) வேரோடு கிள்ளி எறிகிறார். நூல்முழுக்க, நூலிழைப் பின்னல்களாக ஜெயமோகன் சாடப்படுவதும் இப்படியே. திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் நூலின் செல்நெறி இதுதான். இந்த ஒவ்வாமை நோய்க் கூறுகளைக் கண்டறிந்து, அவை வாசகத் தளங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உத்தேசித்து, அவற்றின் மீதான கேள்விகளை எழுப்பி, அவற்றை இல்லாமல் ஆக்குவதைப் பொதியவெற்பன் கடமையெனக் கருதியிருக்கிறார். எவ்வாறெல்லாம் தகர்த்தெறிகிறான் என்று விளக்குதல் என்பது, ஒருவேளை இந்த நூலை மறுபடியும் பார்த்தெழுத நேர்கிற ஒரு சிக்கலையும் கொண்டுவந்துவிடக் கூடும். 
   தமக்கு வரலாற்றுத் திரிபுகளின் ஊடாகச் சிலம்பமாடித் தனியாகவே வெளிவரத் தெரியும் என்றவர் உணர்ந்திருந்தாலும் தமக்கு அணிசேர்க்கும் பக்கபலங்களைக் கண்டறிந்து அவர்களை இணைத்துத் தம் பனுவலாக்கத்தை நிகழ்த்திக் காட்டுவதன் மூலமாக, அன்னோர்க்குச் சிறப்புச் செய்யும் பணியையும் செய்துவிடுகிறார். அந்த வகையில், திராவிட இயக்கக் காழ்ப்புணர்வில் பேசுகிற ஜெயமோகனுக்கும் அதை வழிமொழிகிற தமிழவனுக்கும் பதிலிறுக்கும் வண்ணமாக, திராவிட இயக்கத்தின் நேர்மறைக் கூறுகளை, தமிழ்ப்பெருநிலத்தில் அதன் மறுக்கவியலாப் பங்களிப்பின் பரிமாணங்களை, ஒட்டுமொத்த இயக்கம் எனும் நிலையிலும், திராவிட இயக்கத்தின் தனித்த ஆளுமைகள் எனும் நிலையிலும் விளக்கிச் செல்லும் பிரேமிள், தொ.பரமசிவன், சே.ராசேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, .கீதா, வீ.அரசு, . சிவ சுப்பிரமணியன், ரொமிலா தப்பார், தி.சு. நடராசன், ராஜன்குறை இன்னோரன்ன பலரையும் துணைகொள்கிறார். இது பொதியவெற்பன்எடுத்துக் கொண்ட பேசுபொருளுக்கு வலிமை சேர்க்கும் ஒன்று’ எனும் நிலை,திராவிட இயக்கக் காழ்ப்புணர்வு என்பது போல இது ஒன்றும் திராவிட இயக்கப் போற்றுணர்வு இல்லை’ எனும் ஒருநிலை ஆகியவற்றுடன் ஜெயமோகன் வலையில் சிக்குண்டு காணாமல் அடிக்கப்படும் மேற்குறித்த ஆளுமைகளை ஓரிடத்தில் குவித்துக் காட்டி, அவர்களை அவர்தம் நியாயமான வாதங்களைக் காப்பாற்றித் தருகிற ஒரு பெருங்கடமையும் ஆகிறது. 
    ஒரு மொழி வரலாறு வேர்விடத் தேவையான அடிப்படைப் பணிகள் எவையுமே திராவிட இயக்கத்தவரால் செய்யப்படவில்லை என்று முடிவுகட்டுவதற்குத் தோதாக, ஜெயமோகன் செய்யும் தவறுகளை மறுக்கும் முகமாக, 'தனித்தமிழ் இயக்கமாகட்டும் - தமிழிசை இயக்கமாகட்டும் - தமிழின் மறுமலர்ச்சிக்கான இயக்கம் யாவுமே அவ்வத்துறைகளில் ஊடாடிய ஆரிய - திராவிட இனப்பூசலின் காரணங்களால் ஏற்பட்ட சுயமரியாதை உணர்வின் பெறுபேறுகளாக வாய்த்தவையாகும்' என்று பொதியவெற்பன், அதற்குரிய தரவாதாரங்களோடு நிறுவுகிறார். இவ்வாறு நிறுவுவதற்குச் சார்பாக அண்ணா, திரு.வி..வும் கூட இந்நூலின்கண் பேசுகிறார்கள். 
            ஜெயமோகனின் வஞ்சனைகளுக்குத் தம்மை அறியாமலே தம்மை ஒப்புக் கொடுத்து நிற்கும் நவீன இலக்கிய அலம்பல் ஆளுமைகளையும், திராவிட இயக்கத்தைப் புரிந்துகொள்ள ஆரியர் × திராவிடர் முரணியக்கத்தின் வரலாற்று ரீதியான வலைப்பின்னல்களைக் காணத்தவறிய இடதுசாரிகளின் தவறுதல்களையும் கண்டிக்கும் இடங்களில், தவறுகளின் கண்ணிகளை ஒரு நூலிழையில் கோர்க்கும் ஒழுங்கின் அழகியலும் உடன் ஊடாடுகிறது. 
        இந்த ஊடாட்டங்களுக்கிடையிலாக, தமிழ்ச் சமூகப் பெருவெளியின் முரண் கண்ணிகளை ஒரு வகை வரலாற்று நோக்கில் அறிகிறோம். அந்த அறிதலானது சமகாலத் தமிழ்ச் சமூகக் களத்தின் நவீனத்துவ முரணியக்கம் பற்றிய புரிதலில் வந்து நிறைவடைகிறது. அவ்வகையில் ஏறக்குறைய இருநூறு பக்கங்களே கொண்ட ஒரு நூல் தமிழ்ச்சமூகச் செல்நெறிமைகளை விளங்கிக் கொள்ளப் பயன்படும். ஆவணக் குறிப்புகள் பற்றிய ஒரு தொகுதியாக உருக்கொள்கிறது. 
             பொதியவெற்பனின் விமரிசன முறையியல் மனிதார்த்தம் சார்ந்த, தருக்க வயப்பட்ட ஒருபொருள் குறித்த ஓர் ஆவண உருவாக்கமாக மலர்ச்சியுறுகிறது. இந்த ஆவணப்படுத்தலின் ஊடாகவே, வெவ்வேறு உடல்களுள் கூடுபாய்ந்து பின் வெளிவந்த சுய இருப்பை, பற்பல நிறுவியங்களை (Findings) முன்வைக்கிறார். இந்தியாவில் காலகாலமாய் நிலவிவந்த திராவிட × ஆரிய இனப்பூசல், ஐரோப்பியச் சிந்தனை எனும் தாக்குரவின் கொதிநிலையில் பண்பு மாற்றமுற்றனவே தவிர, இந்த இனப்பூசல், ஐரோப்பியர் வரவின் தாக்கத்தால் திராவிட இயக்கத்தார், அவரிடமிருந்து புதிதாகக் கற்றுக் கொண்டதன்று என்பதைப் பலநிலைகளில் நிறுவிச் செல்லும் பொதியவெற்பனின் நேர்த்தி, தொடர் உழைப்பின், கவனத்தின் நேர்த்தியாக அமைகிறது. இவ்வாறு ஒருபொருளை முன்வைத்த பல்வேறு நிறுவியங்களும் பரந்த வாசிப்பு + மனிதார்த்தம் + நச்சு நீக்கம் எனும் கூட்டணியில் விளைந்து நிற்கின்றன. 
                இந்த உண்மை புரியும் நிலையில், இந்நூலின் பதிப்பக உரையானது நூலாசிரியர் மேல்வைக்கும் சில விமரிசனங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியவை என்பது புலப்படும். தோழர் நீலகண்டனின் பதிப்புரையில், 'உடன்பட இயலாக் கருத்துகளினால் இந்நூலை நிராகரிக்க இயலவில்லை' என வெளிப்படும் நேர்மை மிகுந்த பாராட்டுக்குரியது. எனினும் 'தோழர் பொதியவெற்பனின் விவாதப் படிப்பும் மனவெளியும் தி.மு.. வை மனதில் நிறுத்திக் கொண்டு குறுகிவிடுகிறதோ என்கிற அய்யத்தை நம்மில் எழுப்பாமல் இருக்க இயலவில்லை' எனும் கருத்தும், நியாயமான காரணங்களைக் கூறினாலும், 'இந்நூல் பொதியவெற்பன் பாவித்துள்ள பக்தியிலக்கியக் கலைக் கொடைகளை அறியவொணா நாத்திக மரபு, மானுட வாழ்வின் பயங்கரவாத மரபு என்கிற கருத்துகளையும் நாம் மறுதலிக்க வேண்டியுள்ளது' எனும் கருத்தும் தோழர் நீலகண்டன் பொதியவெற்பன் முன்வைக்கும் வினாக்கள் அல்லது ஒருவகைக் குற்றச்சாற்றுகள். 
       அரசியற் களமாக ஒரு நிலைப்பாட்டை ஏற்று நிற்றல் என்பது வேறு; ஒரு புலத்தின் மீதான அறிவார்த்தமாக நிகழ்த்தப்படும் ஊடாட்டத்தில் கிடைக்கும் அறிதல் என்பது வேறு. அரசியலும் அறிதலும் ஒன்றாய் நிற்றல் என்பது இன்னொரு தன்மை. இந்துத்துவச் சூழ்ச்சியில் பேரிலக்கியப் பக்திப் பனுவல்களுக்குள் நாட்டார் கலைமரபைப் பெற்று, கலந்து மாற்றியதும், சமண, பௌத்த அறிவுக் கொடைகளைப் பெற்று அவற்றைத் திரித்ததுமான இலக்கியச் செயற்பாட்டின் கண்ணிகளில் இருந்து தப்பி வழிகிற, பொது இந்துத்துவ அரசியலுக்குள் இருந்து விலகிநிற்கும் ஆளுமைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. இராமலிங்கரை அவர்கள் பார்க்கும் முறை வேறு; நாம் கொண்டாடும் புள்ளிகள் வேறு என்று தலித் விமரிசகர் ராஜ்கௌதமன் உரைப்பார். மதவெளிக்குள் நிழலாடும் தொல்தமிழர் மரபுகளை அலசிப் பார்த்துத் தனித்தெடுக்க ஓர் அயோத்திதாசர் தேவைப்படுகிறாரே! மானுட வாழ்வின் மதவெளியின் வகிபாகத்தை அம்பேத்கர் ஏற்பதிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முயல்வோம். அம்பேத்கர் இந்து மதத்தைப் புறந்தள்ளி, பௌத்த மதவெளியை அடைகிறார் என்றால், அயோத்திதாசர் இந்துமதவெளிக்குள் பௌத்தச் சுவடுகளைத் தேடுகிறார். பக்தியிலக்கியக் கலைக் கொடைகளை விருப்பு வெறுப்பற்று அணுகுவதன் மூலம் நமக்கான தேடுகையில் புதிய வெளிச்சங்கள் காணக்கூடும். 
           மரபு யாவற்றையுமே மதக்கறையின் பேரால் மறுதலிக்கும் நிராகரிப்பு அரசியலின் எதிர்மரபைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் எனும் பொதியவெற்பனின் நிலைப்பாட்டில் இந்துமத ஆதரிப்பில்லை. அவர்தான், சித்தர் மரபை மறுதலிக்கும் ஆகமச் சைவ, வடகலை மரபை எதிர்க்க வேண்டும் என்கிறார். இந்தப் பின்னணியிலிருந்து காணும்போது தான் பக்தியிலக்கியக் கலைக் கொடைகளை அறியவொணா வறட்டு நாத்திக மரபு என்பதன் பொருள் புலனாகும். பக்தி இலக்கியங்களுள் செறிக்கப்பட்டுள்ள தொன்மங்கள் நாட்டார் மரபுக்கு உரியவை; அவை திரிக்கப்பட்டுள்ளன; தலைகீழாக்கப்பட்டுள்ளன என்பது அறிவு. இந்தப் பின்னணியில் இருந்துதான் பொதியவெற்பன் எடுத்து விளக்கும் பொது, சிறப்பு எனும் கருத்தாடல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே நேர்கிற தர்மசங்கடமான இக்கட்டு குறித்துப் பொதியவெற்பன் சொல்வது கவனம் கொள்ளத் தக்கது. '.... இந்திய மரபு யாவற்றையுமே இந்து மரபாகத் திரிக்கும் ஜெயமோகன் வகையறாவின் நிராகரிப்பின் அரசியலோடும், இந்திய மரபு யாவற்றையுமே இந்துத்துவ மதக்கறையின் பேரால் முற்றாக மறுதலிக்கும் .மார்க்ஸ் வழியினரின் நிராகரிப்பின் அரசியலோடும் எம்மனோர் ஒரு சேரப் போராடியாக வேண்டி உள்ளது. அவ்வவற்றுக்கான முரண்பாடுகளின் இடத்தில் அவ்வவற்றை முன்னிறுத்தி எதிர் கொண்டாக வேண்டியுள்ளது' (இறுதித் தொடருக்கு அழுத்தம் கொடுக்கவும்). இந்த ஓர் ஆய்வு நிலைப்பாட்டுக்கான முறையியல் இந்த நூலுக்குள்ளேயே மொழியப்பட்டுவிடுகிறது.
   நீலகண்டனின் விமரிசனங்களுக்குப் பதிலிறுத்தலாக, இந்நூலின் 'இருமை எதிர்வின் பிரச்சனைப்பாடுகளும் ஒருங்கிணைவின் பொருத்து சங்கிலிகளும்' எனும் கட்டுரை முழுவதையுமே கொள்ளலாம். இந்திய மதம்   இந்து மதம், தமிழர் மதம், சைவ மதம் எனும் நிலைப்பாடுகள் சாராம்சவாதமாகக் குறுகிவிடும் ஆபத்தை உணரும் பொதிய வெற்பன், ஆரிய × திராவிட இருமை எதிர்வின் முரண்பாட்டைத் தத்துவ நோக்கில் முன்வைத்த மனோன்மணியம் சுந்தரனாரைக் காலனிய மனோபாவத்தினர் (சுந்தரனார் கால்டுவெல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்பதால்) என்று பேசுபவர்கள் இந்து மாயை எனும் காலனியக் கொடை பற்றி ஏன் பேசுவதில்லை எனும் கேள்வி எழுப்புகிறார். ஆரிய மாயை, திராவிட மாயை, இந்து மாயை எனும் மூன்றுமே காலனியக் கொடைகள் என்று நிறுவி, திராவிட மாயை என்பது காலனியக் கொடை என்னும் கருத்தாக்கத்தின் உள்நோக்கத்தைத் தோலுரித்து விடுகிறார். அதனால்தான் அவர் 'இனியான பண்பாட்டு ஆய்வுகளை ஆரிய × திராவிட இருமை எதிர்வினை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ள இயலாது. அவைமட்டுமே போதுமானவை ஆக மாட்டா. அதற்கும் அப்பாலான ஒரு பன்மியப் பாய்வாகவே அவை மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்' எனும் திடமான ஒரு நிறுவியத்தை வந்தடைகிறார். 
       சாராம்ச வாதத்திலிருந்து விடுபட்டுப் பன்மியத்தைக் கொண்டாடும் ஓர் ஆய்வு முறையியல் இப்படியாகவே பொதிய வெற்பனிடம் வடிவம் கொள்கிறது. மாந்தத்துவத்தை இயற்கையின் தளத்தோடு அரவணைக்கும் அன்பிலும் அதன் அடிப்படையிலான அறத்திலும் இந்தப் பன்மியம் உருக்கொள்கிறது. அதனால்தான் அறம் மாறுபட்டுரைப்பதால் தூற்றப்படும் தமிழவன் அறம் தேர்ந்து உரைக்கும் நிலைகளில் போற்றப்படவும் செய்கிறார். சாராம்சவாதியாகக் குறுகி உள்நோக்கம் மிக்க கருத்துகளைத் தூவும் ஜெயமோகன் அறச்சீற்றத்துக்கு உள்ளாகி அழிக்கப்படுகிறார். இந்தப் பன்மைத்துவத்தின் அறத்தின் போக்கில்தான் பொதியவெற்பன் கருத்துகளுக்கு அரணாவோர் அரவணைக்கப்படுகின்றனர். உண்மை பேசும் பெரியாரின் பொம்மை பற்றிப் பாடும் நகரத்துக் கானாவில் வெளிப்படும் பேச்சு மொழியின் எளிமையும் போற்றப்படுகிறது. 
         'அவ்வவற்றுக்கான முரண்பாடுகளின் இடத்தில் அவ்வவற்றை முன்னிறுத்தி எதிர்கொண்டாக வேண்டும்' எனும் தெளிவில் பொதியவெற்பன் தனக்கான அடையாளம், அரசியல் என்பவற்றைக் கலைத்துக் கொள்பவராகிறார். இதனாலேயே இந்நூலில் பொதியவெற்பனை ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டு வரமுடியாமையின் சில விபத்துகளும் வாசிப்போர்க்கு நேர்ந்துவிடுகின்றன. தன்னைக் கலைத்துக் கொள்ளும் இந்த அனுபவம் மூலமாகத்தான் பொதியவெற்பன் பொதிகைச் சித்தராகவும் ஆகிறார். 
          'பாரதியைக் காவிக்கொடிக் காரர்கள் கோஷங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் அதற்கு அந்தப் பாரதி என்ன செய்வாரய்யா பாவம்' என்று சிந்தித்து மணல்வீடு 'வெட்டவெளி'யில் ஊடாடும் பொதிகைச்சித்தரைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமில்லை. தமிழ் எழுத்தாளர்களாகிய ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றோரின் நிகழ்வெளியை உறுதியோடு மறுக்கும் தெம்போடு வெளிவந்துள்ள குறளி இதழ் நமக்கு நம்பிக்கை தருவதொத்தே ஜெயமோகனை மறுக்கும் பொதியவெற்பன் நம் நம்பிக்கைகளை வலுப்படுத்துகிறார். ஜெயமோகனின் சாராம்சவாதத்தின் கட்டுக் குலைத்தழிக்கும் நிகழ்வில் திராவிட இயக்க ஒவ்வாமை எனும் நோய்க் கூறுகளைக் கண்டறிந்து மருத்துவம் பார்க்கும் அவர் தொழிலில் தி.மு..வை மனதில் நிறுத்துவதைப் போலத் தோன்றினால் அதற்குப் பொதியவெற்பன் என்ன செய்வாரய்யா, பாவம்! மேலும் அவருடைய இந்த நூலிலேயே அப்படி கருத்து தோன்றிவிடும் அபாயம் உணர்ந்து பொதியவெற்;பன் தரும் வாக்குமூலமும் அவரது நிலைப்பாட்டைத் தெளிவுறுத்தி விடுகிறதே!
    'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்' என்பதே இக்கதையின் மூலமுடிச்சு என்று பொதியவெற்பன் கறார் செய்து கொள்கிறார். அந்த மூலமுடிச்சிலிருந்து கதை சமைக்கும் தன்பிரதியை எழுதிவரும் போது '..... ரவிக்குமார் நம்ம பொழப்பே ரெட்டை வேசங்கட்டறதுதான்னு பேட்டி கொடுக்காரு. அவங்க கட்சி சார்பில் கலைஞருக்கு அம்பேத்கர் விருதக் கொடுத்துப்புட்டு அதுக்குப் பண்டமாத்தா அரசாங்கத்திலிருந்து அண்ணா விருது வாங்கிக்கிடுதாரு...' எனும்போது அங்கு விமர்சிக்கப்படுவது ரவிக்குமார் மட்டும்தானா? 'இப்பல்லாம் அறிவுஜீவியை தரகுஜீவியா ஆக்கிக்கறது தான் அதிகார மையங்களோட வேலை'. எனும் வருத்த வளையத்துக்குள் தி.மு.. வும் உட்பட்டு விடுகிறதே! 
           '.... திராவிட இயக்கத்தை விமர்சன பூர்வமாக அணுகுவதென்பது வேறு. தமிழ் நவீனத்துவ இலக்கிய வாதிகள் மத்தியில் 'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்' இழையோடிக் கிடப்பதென்பது வேறு' எனும் தெளிவுடைய பொதியவெற்பனை விளங்கிக்கொள்ள ஒரே ஒரு கருவி (Tool) போதும். அது, சாரம்சவாதம் மறுத்துப் பன்மியம் போற்றுவது என்பதே. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகத்தை மறுதலிக்கும் பகுத்தறிவின் பயங்கரவாத மரபைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையிலேயேகூட, திராவிட இயக்கத்தின் பெருந்தூண் ஒன்று மடமடவென்று சரிந்து விழும் ஓசை கேட்கிறதே! 
         பொதியவெற்பனின் இப்பனுவலில் ஊடாடி வெளிவரும்போது வாசகராக நாம் அடையும் 'நான்' என்பதில் உள்ள மாற்றம் இதுதான். பன்மியத்தின் மொழியின் வசீகரம், பன்மியத்தின் ஆய்வின் நுணுக்கம், பன்மியத்தின் அறிவின் தெளிவு இவை நமக்குக் கிட்டுகின்றன. இவை ஏற்கெனவே உள்ளோர்க்குப் புதியவகைத் தெம்பு கிடைக்கிறது. 
        கதையற்ற கதையோடும், மொழியின் கவித்துவ அழகியலோடும், தருக்க அறிவை அறத்தின் பாற்பட்டுப் பயன்கொண்ட தெளிவோடும் உருவான இப்பனுவலின் ஊடாக மாந்த இதயம் ஒன்றின் துடிப்பும் உடன்வருவதைத் தொட்டுணரும் இந்த மாந்த இருப்பும் முன்னிருந்த நான் அன்று. 
           ஆண்டு பற்றிய குறிப்புகளிலும் ஒரு சில எழுத்துத் தவறுகளிலும் கண்கள் சென்று வருவதைத் தவிர, நிறைவான ஓர் ஆய்வு நூல் கிடைத்திருக்கிறது. இன்னும் நூல் பற்றி விமரிசனங்கள் வரலாம். பன்மியம் அதை நூற்றுப் பதினேழு கைகள் கொண்டு வரவேற்கிறது.

(நன்றி : கணையாழி மாத இதழ்)

Comments

Popular Posts

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.