’திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ மீதான ஒரு மருத்துவப் பரிசோதனை அறிக்கை

துயரர் 1: ஜெயமோகன்

அறிகுறி மற்றும் உபவிளைவுகள்:

1. காயம்பட்ட வைதிக மன உடைசல் வெளிப்பாடுகள்

2. தானியத்தைப் பதர்தூற்றி வேறு பிரிக்கொணா அளவிற்குக் கருத்துக்குருடு மற்றும் குருதியில் தோய்ந்த காமாலை

3. விழித்திரை மறைக்கும் அளவிற்கு அகமலம்.

4. சித்தக்கட்டமைப்பின் காழ்ப்பினால் மீதூரும்

4.1 சுருக்கிக்கோடல் 4.2 விலக்கித்தள்ளல் 4.3 தொடர்பறுத்தல்

5. இவற்றால் ஏற்படும்

5.1 வெறுப்பு 5.2 எரிச்சல். 5.3. கோபம்

தீர்வு: குணப்படுத்த இயலாவண்ணம் முற்றிய கையறு நிலை

துயரர் 2: தமிழவன்

அறிகுறி மற்றும் விளைவுகள்

1. அமைப்பியல் மீமெய்யியல் உருவெளித் தோற்ற மாயைகள்

2. ஆடியில் தோன்றும் பிரதிபிம்பம் போல எதுவும் இடவல மாற்றமாகவும் தொலைவண்மைத் தோற்றமயக்கங்களாகவுமே காணக்கிடத்தல்

3. கீழைக்கொடையினையும் கூட மேலைக் கொடையாகவே காணும் 'காலனிய மனோபாவம்'

4. உண்மைகளை அவற்றின் இன்மை வரை ஊடுருவிக் காண முற்படாமல் இடைக்கண் முறிதல்

தீர்வு: விடுபட்டாற்போலத் தோன்றினும் பூரண குணமாகாமல் விட்டுவிட்டு மிச்ச சொச்சமாய்த் தலை நீட்டும் நோய்க்கூற்று எச்சங்களை வேரறக் களைய அல்லோபதி தவிர்த்து ஹோமியோபதியினை ஏற்கவும்.

'பிஸியோதெரபி' பிரிஸ்கிரிப்ஷன்:

1. பொதிகைச் சித்தர் பரிந்துரைக்கும் திருமந்திர முதலா வள்ளலாரின் பேருபதேசப் பொழிவு ஈறான தமிழ்ச்சித்தர் மெய்யியல்

2. ராஜன் குறை பரிந்துரைக்கும் அமைப்பின்மை வாதமென்னுந் தோற்றவரைவியல் மூலநூல்கள்

எந்த ஒன்றையும் அணுகத்தலைப்படுகையில் தற்சாய்வோ, பகைக்காய்வோ தலையெடுக்காமல் அணுகத் தலைப்படுவதே காத்திரமான அணுகுமுறையாதல் கூடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முன் தீர்மானமான அகவயநோக்கில் (subjectivity) அணுக முற்படாமல் புறவயநோக்கில் (objectivity) அணுகத் தலைப்பட்டு ஆய்வின் முடிவில் தேடலின் பொருளை வந்தடைவதே சரியான காய்தல் உவத்தல் அற்ற ஆய்வு நேர்மையாக அமைய முடியும். இதற்கு மாறாக இந்தியத் தருக்கமுறையில் குறிப்பிடப்படும் 'சாமானிய ஜாலம்' என்பது குறித்தும், காரல்மார்க்ஸ் குறிப்பிடும் கருத்துக்குருட்டு நோய் குறித்தும் இங்கே காண்போம்.

நா. வானமாமலை: "தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர் சொல்லுகிற சொற்களையும் வாக்கியங்களையும் தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறுவதும், இதனால் எதிரான கொள்கையுடையவருடைய வாதங்களையே திரித்து விடுவதும் ஆகும். இதனை 'அறிவியல் அயோக்கியத்தனம்' என்று பச்சையாகத் தமிழில் கூறலாம். இம்முறையைத் தான் ஆத்திகர்கள் பண்டைகாலத்திலும் நடுக்காலத்திலும், நாத்திகத்தை ஆத்திகமாக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். இப்புரட்டுவாதத்திற்குப் பண்டைய இந்தியத் தருக்கமுறையில் 'சாமான்ய ஜாலம்' என்று பெயர். (இந்திய நாத்தீகமும் மார்க்சியத் தத்துவமும்)

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா: "மரபறிவர்கள் பழையநூல்களின் ஒவ்வொரு நேரடித்தகவலையும் தத்தம் அகச்சார்புகளுக்குத் தக திரித்து விடுகிறார்கள். தற்சார்பில்லாத ஒப்பீட்டு முறையே இந்நோயைத் தணிக்கும்.. மனச்சார்புகளைச் சுய விமர்சனம் செய்துகொள்ளும் தன்மை உள்ளவர்களுக்கே புறவயத்தன்மை அதிகம் இருக்கும். மற்றவர்கள் காரல் மார்க்ஸ் சொன்ன 'கருத்துக்குருடு' நோயால் அவதிப்படுகிறார்கள். ('உலகாய்தம் - பண்டைய இந்தியப் பொருள்முதல் வாதம்')

எந்தவொரு இயக்கமென்று எடுத்துக் கொண்ட போதிலும் அதன் தோற்றுவாய்க்கான காரணிகள், அதன் இயங்குதளம், அதன் பங்களிப்பின் சாதகபாதகமான அம்சங்கள், அது கால்கொண்ட மூலாதார நிலையில் இருந்து காலகதியில் நிறுவனமாக இறுக்கத்தலைப்பட்டபின் அதன் பலாபலன்களின் சாதகமானவற்றை மட்டுமே அறுவடை செய்தபடி தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் சக்திகள் என்கிறரீதியில் அதனைப்பற்றிப் பின்முகமாகவும் நுணுகிப் பார்த்தே அணுக முயலவேண்டும். தமிழ் நவீனத்துவ இலக்கியவாதிகள் மத்தியில் ஒருவிதமான 'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்' இழையோடிக் கிடப்பது கண்கூடு. திராவிட இயக்கம் என்பதை விமர்சன பூர்வமாக அணுகுவது என்பது வேறு. ஒவ்வாமை நோயின் இடைத்தரிப்பிலிருந்து அதன் மீதான அதிர்ச்சிமதிப்புத் தீர்ப்புகளை வழங்குவதென்பது வேறு இங்கே இது குறித்த ராஜன்குறையின் தீர்க்கமான பார்வை மனங்கொள்ளத்தக்கது.

ராஜன் குறை: "தமிழ் நவீனத்துவ இலக்கியவாதிகள் தத்துவத்தையும் வரலாற்றையும் சரியாகப் புரிந்துகொண்டால் தங்கள் இயங்குதளமும் திராவிட இயக்கத்தின் இயங்குதளமும் முற்றிலும் வேறானவை என்பதை உணரலாம். உலகின் பிற குடியுரிமைப் பிரக்ஞை அரசியல் இயக்கங்களை விட தி.மு.க. அதிருப்திப் பிரக்ஞையுடன் விரோதம் கொள்ளாதது. பாரதி - பாரதிதாசன் வம்சாவழிகள் என்று பார்த்தால் நெருக்கத்தின் சாத்தியம் புரியும். ஆனால் காந்தீயத்தையும், கம்யூனிசத்தையுமே அரசியல் தத்துவங்கள் என்று நினைக்கும் சிறுபத்திரிகை மனநிலை திராவிட இயக்கம் தமிழகத்தின் வரலாற்று சக்தி என்பதையும் அது இங்கு ஒரு ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தியது என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கிறது. அவர்கள் விளைவித்த குடியுரிமைப் பிரக்ஞை வாயிலாகவே பலர் அதிருப்திப் பிரக்ஞையை நோக்கி நகர்ந்து நவீன இலக்கிய தளத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதையெல்லாம் புரிந்துகொள்ளும் போதுதான் புதிய தெளிவுகளும் சிந்தனையும் பிறக்கும் திராவிட இயக்கத்தின்மேல் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் என்ன நடந்தது என்று இணைத்துப்பார்த்தால் இது தேசிய நீரோட்டப் பிரச்சினையல்ல என எளிதில் புரிந்து கொள்ள முடியும்." (உயிர்எழுத்து அக்-2009)

இங்கே ராஜன் குறை குடியுரிமைப் பிரக்ஞை எனக் குறிப்பிடுவது யாதெனில்... முதலீட்டியம் (capitalism) காலனீயம் (colonialism) நவீனம் (modernism) தேசியம் (nationalism) என்னுமிவை ஒன்றோடொன்று நுட்பமாகப் பிணைந்தவை இந்த நவீனகாலப் பிரக்ஞை தனிநபர், குடியுரிமை, வரலாற்றுவாதம், மானுடவாதம் இவற்றால் ஆனதெனச்சுட்டும் ராஜன் குறை இதனையே குடியுரிமைப் பிரக்ஞை எனக்குறிப்பிடுகின்றார்.

ஜெயகாந்தன்: "திராவிட இயக்கத்தை நான் ஓர் இயக்கமாகவே கருதவில்லை. அந்த நோயிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் (’வார்த்தை’ இதழ்) என்றவர் குறிப்பிடும் போது இவரைப்பற்றி இருக்கும் திராவிட இயக்க ஒவ்வாமை நோயை அது புலப்படுத்தி விடுகின்றது. முற்றியிருக்கும் நிலை வரை சாகித்திய அகாதமியின் இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசையில் பெரியார் மற்றும் அண்ணா பற்றிய நூல் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட போது ஜெயகாந்தனும், சா. கந்தசாமியும், தமிழவனும் அதனை மறுதலித்தனர். இதுபற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட தருணங்களில் ’பெரியார், அண்ணா ஆகியோரின் சமூகப்பணிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இலக்கியச் சிற்பிகள் வரிசையில் அவர்கள் இடம்பெறுவதைத் தான் ஆட்சேபித்ததாக’ அவர்கள் தரப்பினை முன்வைத்தார் தமிழவன். பிரேமிள் கடுமையாக இதனை விமர்சித்தார். மட்டுமல்லாமல்
அவர்கள் பங்களிப்பின் சிறப்பியல்புகளையும் எடுத்துரைத்தார்.

ஜெயமோகன்: "புதுமைப்பித்தன் காலக்கட்டத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கைச் சித்திரம் அறிஞர்கள் மத்தியில்தான் இருந்தது. கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பா., எஸ்.எஸ்.தென்னரசு, மு.கருணாநிதி, ஜெகசிற்பியன் முதலிய வரலாற்று நாவலாசிரியர்கள் இச்சித்திரத்தை மிகப்பிரம்மாண்டமாக வளர்த்து நம் மனத்தில் நிறுவியிருக்கிறார்கள்" எனக்குறிப்பிட்டவர் "கருணாநிதி அவர்களின் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை ஏன் நிராகரிக்கிறேன் என்பதற்கு ஒருபுத்தகமே எழுத வேண்டும். தமிழ் இலக்கியத்தைத் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்திய ஆறுமுகநாவலர் மறைமலையடிகளாரில் இருந்து பெருஞ்சித்தரனார் வரையிலான பட்டியலில் கருணாநிதி அவர்களுக்கு இடமில்லை என்கிறார். (பெரியார் பரம்பரையும் ஜெயமோகச் சுயமோகமும்)

பிரேமிள்: "ஆதாரமற்று அபிப்ராயம் சொல்வது உண்மையில் அறிவுவாதிகளின் களத்தில் நடைபாதைத்தனமானது. இத்தகைய அபிப்பிராய விமர்சன மரபில் பட்டியல் விமர்சனமும் அடங்கும்”

ஜெயமோகன், தி.பொ. கமலநாதன் நூலை முன்வைத்து தன் வலைப்பதிவில் 'நான் ஏன் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்?' என முன்வைத்துள்ளார். அதனை வாசிக்கையில் ந. முத்துமோகன் "படித்த மேட்டுக் குடியாளனின் மனஉடைசலின் அரசியல் வேறு அதன் வெளிப்பாடு அதீத ஒற்றைப் பரிமாணம் கொண்டது. இந்தியச் சூழலில் அதுகாயம்பட்ட வைதீகம் போல் பரிணமிக்கும்" என மார்க்ஸை முன்வைத்து எழுதிச்செல்வது என்னுள் மின் வெட்டியது. இங்கே ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்து அவர் முன்னிறுத்தும் ஒருசில தரப்புகளையே விவாதப்புள்ளிகளாக முன்வைத்து அவற்றின் மீதான ஒத்த மற்றும் எதிர்தரப்புகளையும் முன்னிறுத்தி அவரது அபிப்பிராய ரசனை மனோபாவத் தரப்புகளை என் வாத விவாத மரபால் எதிர்கொள்கின்றேன். இதன் மீதான வாசிப்பால் காயம்பட்ட வைதீகத்தின் மனஉடைச்சலாக வெளிப்படும் நிராகரிப்பின் அரசியலுக்குள், சாயம் வெளுக்கும் சாமான்ய சாலங்களை இனங் கண்டுகொள்ளலாம்.

ஜெயமோகன் தரப்பு1 : உண்மையில் தலித் விடுதலைப்போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். இதைப் பிற்பட்ட சாதியினரின் நலனுக்கான இயக்கமாக இருந்த திராவிட அரசியலுடன் இணைத்ததன் வழியாக அதன் தனித்தன்மையையும் போர்க்குணத்தையும் இல்லாமல் ஆக்கியது.

தமிழவன்: "திராவிட இயக்கத்தின் இயங்கு போக்கில் தீண்டத்தகாதோர் பற்றிய சிந்தனை உள் அமுங்கி திராவிட இயக்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் இயக்கமாக மாறிவிட்டது. (தீராநதி' நவ.09)

தொ.பரமசிவன்: ”1950 வரை தேசிய, பொதுவுடைமை இயக்கங்கள் தமிழக சமூக மாறுதல்களைச் சாதிய நோக்கில் கணக்கிட முற்படவில்லை. இத்தனைக்கும் தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமைக்கட்சி 'பள்ளர்கட்சி' என்றே அடையாளம் காட்டப்பட்டது. இருந்தாலும் சாதி சார் அடையாளத்தை மறைத்தாலே போதும் என்று தான் பொதுவுடைமைக் கட்சிகள் செயலாற்றின். பெரியாரின் தலைமையிலான திராவிட இயக்கம் மட்டுமே சமூக எழுச்சி என்பது தமிழ்நாட்டில் சாதிச்சங்கங்களை அலகுகளாகக் கொண்டது என்ற கருத்தியலோடு இயங்கியது. ஆக இரண்டு மேல்சாதிகளைத் தவிர்த்த எல்லா சாதிச்சங்கங்களின் கூட்டங்களும் தீர்மானங்களும் பெரியாரின் குடிஅரசு இதழில் செய்தியாக்கப்பட்டன. ('உரைமொழிவு' ஒக் - நவ.2000)

பிரேமிள்: "வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாக ஜாதீயப் போராட்டத்தை உணர்ந்து கொள்கை வகுத்த மேதைமை சி.எண் அண்ணாதுரையுடையது. பார்ப்பனிய மேலாதிக்கமே முதலாளியமாக அண்ணாதுரையின் பார்வையில் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப்பார்வையைத் தமிழகத்தில் கம்யூனிச இயக்கம் உணரவில்லை. ஆனால் மார்க்சிய அறிஞரான எம்.என்.ராய், தமது செயலாளராக இருந்த எம்.கோவிந்தனிடம், 'இவரைக் கவனியுங்கள், சமூக இயக்கத்தின் பிரதேச விஷேசத்தை உணர்ந்துள்ளவர் இவர்" என்று அன்று கூறியதைக் கோவிந்தன் என்னிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்" (பெரியார் பரம்பரையும்..)

டி.எம்.மணி: "அம்பேத்கரை வெள்ளைக்காரர்களின் கைக்கூலி என்றார் நேரு. தொங்குசதை என்றார் தாகூர்; நியமிக்கப்பட்ட வேட்டைநாய் என்றார் பட்டேல். ஆனால் மேற்படி தலைவர்கள் எல்லாம் அம்பேத்கர் மீது அவதூறு பேசியதை உடைத்தெறியும் வண்ணம் எடுத்துரைத்து வந்தார் பெரியார்" ('சட்டநாள் மக்கள் மாநாடு மலர் - 2003)

பெரியார்: "நம் எதிரிகள் அவரைச் சர்க்கார்தாசன் என்று சொல்லக்கூடும் அதைப்பற்றி அவர் சிறிதும் பயப்படவில்லை. பதவிக்கு அவர் சென்றது முதலே ஒவ்வொரு மூச்சிலும் தன் இனத்தின் பெயரையும் நிலைமையையும் எடுத்துச் சொல்லிச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தன் இனத்தின் நலத்துக்கு ஏதாவது காரியங்கள் செய்து கொண்டு எதிரிகளை வெள்ளையாய்க் கண்டித்துப் பேசி நடுங்கச் செய்து வருகிறார்" (தலித்முரசு செப். - 2004)

பார்ப்பனியம் - பனியா ஆதிக்கம்பற்றி வலியுறுத்துவார் அம்பேத்கர்; பார்ப்பன வெள்ளாள ஆதிக்கம்பற்றி வலியுறுத்துவார் பெரியார்; இந்தியச் சமூக அமைப்பின் மேலாதிக்கம் பற்றிப் பேசுமுகமாக. இன்று 'பார்ப்பன - வெள்ளாள - பறையர் ஆதிக்கம்' என்ற குரல் அருந்ததியர் தரப்பில் எழுகின்றது. இவையாவும் நம் படிநிலைச் சமூகப் பொறி அமைவின் சூட்சுமத்தால் நேரும் பலாபலன்களே. பார்ப்பன - தலித்கூட்டணிவியூகம் வகுக்கின்றார் மாயாவதி. இத்தகைய மனோபாவத்தின் எதிரொலியே இங்கு ஜெயமோகன் தரப்பும், 'இந்திரர் மாறினும் என்று மாறா இந்திரானை' என்பதைப் போலப் பார்ப்பனியம் இப்படி நிலைச் சமூகப் பொறியமைவிற்கு ஊடாக என்றென்றும் தன் யதாஸ்தானத்தைத் 'ததாஸ்து' எனத் தக்கவைத்துக் கொள்கின்றது இவ்வாறாகத்தான்.

ஜெயமோகன் தரப்பு.2: "தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எந்த வகையிலும் சம்பந்தம் உடையதாக இருக்கவில்லை என்பதே வரலாறு. தமிழியக்கம் பெரும்பாலும் சைவச்சார்பு உடையது. அதன் முன்னோடிகள் பலர் காங்கிரஸ் அனுதாபிகளும் கூட”

தமிழவன்: “திரு.வி.க. சுதந்தரப் போராட்டத்திலும், தொழிற்சங்கத்திலும், சர்வசமய சமரசத்திலும் நம்பிக்கை கொண்ட தமிழறிஞரான பத்திரிக்கைக்காரர். அவர் முழுமுற்றான பிராமண எதிர்ப்பு இயக்கம் நாசத்தைத்தான் கொண்டுவரும் என்று நம்புகிறர்ர். அதில் அவருக்குச் சந்தேகமே இல்லை. இவர் (திரு.வி.க) பிராமண எதிர்ப்பு இயக்கத்தை அங்கீகரிக்காததால் பிராமண எதிர்ப்பு இயக்கம் தமிழ்த்தன்மைப் பண்பு அற்ற இயக்கமோ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆரம்பக்கட்டத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கம் வேறு, தமிழ் இயக்கம் வேறு என்றுதான் இருந்தது. பிற்காலத்தில் சோமசுந்தர பாரதியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோர் முறையாகத் தமிழாய்விலும் (சோமசுந்தர பாரதியாரின் பொருளதிகார விளக்கம் முக்கியமான மறுவியாக்கியானமாகும்) அரசியலிலும், கவிதை மொழியிலும் பிராமண எதிர்ப்பை இணைக்கிறார்கள். ('தீராநதி' முற்சுட்டிய இதழ்)

ந. முத்துமோகன்: "(ஆறுமுக) நாவலர் மேலிருந்து தொடங்கி அடித்தள மக்களை அந்நியப்படுத்தி, சைவத்தை ஆகமச் சைவமாகக் குறுக்கிக் கொள்ள வள்ளலார் கீழிருந்து அதனை விரித்துச் செல்கிறார். தமிழ் அடையாள உருவாக்கத்தில் இராமலிங்கர் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்துகிறார் ('தமிழினி' ஜன.2010) வடமொழி மொழி ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தியதன் பெறுபேறே தமிழ் அடையாள மீட்பு. இதன் வேர்கள் ஆரிய திராவிட இனப்பூசலின் ஆணிவேரிலிருந்து கிளைத்தனவே.

எஸ்.வையாபுரிப்பிள்ளை: ”மொழி உணர்ச்சி அற்ற சுவாமிநாத தேசிகர், 'ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே' என்றுகூறி நமக்கு வியப்பையும் வருத்தத்தையும் உண்டு பண்ணுகிறார்.
தமிழ் மொழியின் இலக்கிய - இலக்கணங்கள் வட மொழியைப் பின்பற்றி எழுந்தன எனும் கருத்தினை இம்மூவரும் (17ஆம் நூற்றாண்டு இலக்கண ஆசிரியர்களான சுப்பிரமணிய தீட்சிதர், வைத்தியநாத தேசிகள், சாமிநாத தேசிகர்) சிறப்பாகக் கொண்டு இருந்தனர். மற்ற இருவரைக் காட்டிலும், சாமிநாத தேசிகள் தமிழில் யாதுமில்லை என்பதை நிலைநாட்ட முயன்றார். இவ்வட மொழிப்பற்றாளர்களின் தவறான போக்கே தனித்தமிழ் இயக்கம் தோன்றக் காரணமாகியது எனலாம்.(தமிழின் மறுமலர்ச்சி ப.88 - 89) எனச்சுட்டிக் காட்டும் வையாபுரியார் தமிழ்மொழியுலகில் வடமொழி புரிந்துவந்த கொடுங்கோலாட்சியை எதிர்க்கத் தூயதமிழ்க் கிளர்ச்சி தோன்றியதாயின் அது நியாயமே என வலியுறுத்துகின்றார். 'அய்ந்தெழுத்தால் ஒரு பாடை' எனும் எள்ளலுக்கு விடையிறுக்கும் முகமாகவே "இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்" என ஆரிய திராவிட இன வேறுபாட்டுணர்வை மொழிவழிப்பட்ட நிலையில் முன்னெடுக்க நேரலாயிற்று.

வள்ளலார்: "இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசையையும், பெரு மறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகிற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது. பயிலுவதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வரத்தால் கிடைத்த தென்மொழி'.

வருணாசிரம தர்மம், ஆரியதருமத்தின் அடிப்படை வேதங்கள் எல்லாச் சாதியார்க்கும் இடங்கொடுக்கத் தவறிட்டன. ஆகையால் அவை முழுமுதற் கடவுளைப்பற்றிப் பேசத்தகுதியற்றன என்பது வள்ளலாரின்துணிவாகும். (திருவருட்பா ப.854) சிவஞான முனிவர், வள்ளலார் இவர்களைப் போலவே இலக்கணக் கொத்தினை ஆராயப்புகுந்த பரிதிமாற்கலைஞரையும் சுவாமிநாத தேசிகரை மறுதலிக்க வைத்தது.

பரிமாற் கலைஞர்: 'பாஷைநூல்' என்னும் அரிய சாஸ்திரத்தின் பயிற்சியும் சரித்திரக்கண்ணும் இல்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களாமென்பது திண்ணம்" (தமிழ்மொழியின் வரலாறு ப.40)

'தமிழ்க்கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்' குறித்து ஆராயப்புகுந்த சே. இராசேந்திரன் ஆரிய திராவிட இனவழிப்பூசல், மற்றும் தமிழ்த் தேசிய உணர்வெழுச்சி ஆகியவற்றை பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராண முதலாக அடையாளப்படுத்துகின்றார்.

சே. இராசேந்திரன்: "தமிழினம் தனிப்பெருமையுடையது என்று தமிழரின் தன்மான உணர்வினைத் தூண்டிவிட்ட சிறப்பு பரஞ்சோதியாருக்கு உரியதாகும். இவருடைய கருத்துகளும் டாக்டர் கால்டுவெலின் ஒப்பிலக்கணக் கருத்துகளும்தான் பேராசிரியர் சுந்தரம் பிளையைத் "தமிழ்த்தெய்வ வணக்கம்" பாடுமாறு தூண்டியது எனலாம். எனவே ஆரிய திராவிட மொழிவழிப்பட்ட இனப்பூசலைத் தொடங்கி வைத்தவர் திருவிளையாடற்புராண ஆசிரியர் எனக் கொள்ளுவது தவறாகாது" (ப.13)

"சித்தாந்த சாத்திரங்களும், ஈட்டுரைகளும் தமிழ்மொழியை வளப்படுத்தின. இப்படிச்சமயப் போராட்டங்களிடையே இனப்பண்பாட்டுணர்வு முகிழ்க்கத் தொடங்கியது. (ப.15)”

தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எந்தவகையிலும் சம்பந்தம் உடையதாக இருக்கவில்லை எனவும் தமிழியக்கம் பெரும்பாலும் சைவச்சார்பு உடையது எனவும் முன்வைக்கப்பட்டுள்ள ஜெயமோகன் தரப்புகள் இனப்பூசலின் மொழிவழிப்பட்ட கூறே தமிழியக்கம் என்பதனையும் சைவசமயம் என்பதற்கு ஊடாகவும் சாராம்ச ரீதியான சமயப்பூசல் வடிவில் கிளைப்பதற்கும் ஆன ஊற்றுக்கண் இனப்பூசலே என்னும் உள்ளார்ந்த மெய்ம்மைகளைத் திரித்து தமக்குத்தக அவ்வுண்மையை 'சாமான்ய சால'ங்களாக எடுத்துரைக்கின்ற வகையிலேயே அமைந்துகிடக்கின்றன.

சே. இராசேந்திரன்:

"திராவிட ஆரிய சமய உணர்வில், சித்தாந்த - வேதாந்த அடிப்படையில் வேறுபாடுகுள் உள்ளன" (ப.16)

"சைவசித்தாந்த வழிப்பட்ட சமயம், சடங்குகள் நிறைந்த வைதிக சமய எதிர்ப்பியக்கமாக வீறுடன் விளங்கலாயிற்று". (ப.17)

"மெய்கண்டாருக்குப்பின் சைவ வேளாள மடங்கள் நாடு முழுவதும் பரவின. ஒரு வகையில் இச்சைவ மடங்கள் பார்ப்பனருக்கு எதிராக அமைக்கப்பட்ட பார்ப்பனரல்லாதாரின் இயக்கமாகக் கருத இடந்தருகிறது." (ப.17)

"சைவ மடங்களின் வழியமைந்த சித்தாந்த வளர்ச்சி, சமயத்துறையில் பார்ப்பனரின் ஆதிக்க வீழ்ச்சியைக் காட்டுவதாக அமைந்தது". (ப.18)
என்றெல்லாம் எழுதிச் செல்பவர் சைவ மடங்களைப் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகக் கருத இடந்தருகின்றதென்பதற்கான சான்றாதாரங்களாக எரால்டு ஸ்கிப்மென்னின் தரவாதாரங்களையும் (Hareld Schilfmon, 'Saiva Siddhanta Movement', Studies in the Language and Culture of South India) முன்னிறுத்துகின்றார். மூன்றாம் குலோத்துங்கன் பற்றிய கல்வெட்டு, மற்றும் பெரியதேவரின் 22ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றை ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டி "இக்கல்வெட்டுச் செய்திகள் உண்மையாகுமானால், பார்ப்பனர் - தமிழர் ஆகிய இருவேறு இனமக்களின் வேறுபட்ட சமயப்பண்பாட்டுக் கொள்கைகளின் மோதுதல் விளைவினால் உண்டானதே 'குகையிடி கலகம்' எனத் துணியலாம்" எனச் சைவ மடங்கள் மீதான தாக்குதல் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

இங்கே கால்வெல்லின் ஒப்பிலக்கண ஆய்வு குறித்து இராசேந்திரனும் சுட்டிக்காட்டி கால்டுவெல் பற்றி க.கைலாசபதியின் கணிப்பினையும் நினைவு கூர்கின்றார்.

க. கைலாசபதி: "தமிழர்சமயம், தனித்தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ் அரசு முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பானதாகாது".

சே. இராசேந்திரன்: "உண்மையில், தமிழருடைய தன்மான இயக்க உணர்வின் 'விடிவெள்ளி' டாக்டர் கால்டுவெல் எனக் கூறினால், அது தவறாகாதெனத் தோன்றுகிறது. நமக்கென ஒருமொழி, நாடு, நாகரிகம், பண்பாடு உண்டு என்பதை உலகோர் அறிவதற்கு முதற்காரணமாக விளங்குபவர் டாக்டர் கால்டுவெல் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. இக்காரணங்களால் டாக்டர் கால்டுவெல் அவர்களின் மொழியியல் ஆய்வு திராவிட இயக்க உணர்விற்குச் சூட்டப்பட்ட மணிமுடியாகத் திகழ்கிறது. (ப. 30-31) ”கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் அரும்பிய திராவிட இனஉணர்வு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் போதாகும் நிலைக்கு வந்துவிட்டது. கால்டுவெல், இராமலிங்க அடிகளார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகியோரின் தொண்டினால், தமிழின் தனிச்சிறப்பு உலகின் கருத்தினைச் சென்ற நூற்றாண்டில் கவர்ந்தது."

இவையாவும் திராவிட இனஉணர்வு இயக்கமாக, அமைப்பு ரீதியாக அணிவகுக்குமுன் காணக் கிடக்கும் முன்னோடித் தடங்களின் தடயங்களில் ஒருசிலவே எனலாம். இதே மூச்சில் இத்துடன் ஒருசேர மனங்கொள்ளத்தக்கது நம்மை வியப்பில் ஆழ்த்தி மலைக்க வைக்கும் ஒரு சம்பவம் பற்றிய சித்தரிப்பு.

சுந்தரம்பிள்ளை: "உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் 'தங்கள் கோத்திரம் என்ன?' என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த, அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், 'எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது - தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்" ('ரசனை' அக். 2008 - டி. தயாளன்) எனத் தயாளன் வழங்கும் சித்திரம் 'அறிவும் நம்பிக்கையும் கிளை பிரியும் இடத்தில் நின்ற மனிதரென' வழிபடப்படும் விவேகானந்தரிடம் இப்படியாகக் கோத்திரமறியக் குறுகுறுக்கும் உணர்வும் ஊடாடிக் கிடந்ததென்பது ஒருபுறமாக; தம் பெயருக்குப் பின்னால் வாலாக இருப்பதே தம் கோத்திரம் என்று கூடக் குறிப்பிட்டுவிட இடமிருந்த போதிலும் தன்மானங்காக்கும் திராவிட இனத்தைச் சார்ந்தவனுக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் கிடையாதென அகக்குமுறலை உள்ளடக்கி, மெல்லிய குரலில் ஆணித்தரமாக விடையளித்த சுந்தரம்பிள்ளையின் 'கோத்திரங்கடந்த குணம்' மறுபுறமாக சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் தோன்று முன்னரே அவற்றிற்கான மூலவித்துக்களின் மூலாதாரமாக நின்ற சுந்தரம் பிள்ளையைச் 'செயல்மறந்து' வாழ்த்தி நிற்கவே தோன்றுகிறது நமக்கு.

திரு.வி.க. குறித்து தமிழவன் முன்னிறுத்திய தரப்புகளுக்கு எதிர்த்தரப்புகளை இனி எடுததுரைக்கப் புகுகின்றேன்.

(தொடரும்.)
நன்றி: லும்பினி.இன்

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

சி.மணி கவிதைகளில் மரபின் தாக்கமும் புத்தாக்கமும் ( பகுதி 3 )