6. தாண்டவ மண்டலம்.

கால்பேரில் பாதாளம் பேரும்
கைபேரில் திசைகள் எட்டும் பேரும்
அடிகாள் அறிந்தாடும் ஆற்றாது அரங்கு.

தாளம் பெருகித் திசையெலாம் ஒலிக்க
வானும் மண்ணும் மேல்கீழாய்ச் சுழல
திசைகளில் அடித்து விரிசடை மீளக்
காலின் கீழே புவனங்கள் அதிர
கைகள் அசைந்து
வேற்றுக் கிரகங்கள் தீண்ட

உன் தாண்டவம் நிகழும்போது
என்னே விந்தை என் ஈச!
நீயற்ற இடத்திலும்
உன் தாண்டவம் நிறைந்த மாயை.

நடனமாடும் கடவுள்
இயற்பியல் கொள்கை இவையிரண்டும்
மனத்தின் படைப்புகளே.
தம்மை ஆக்கியோரின்
மெளனம் பற்றிய உள்ளுணர்வு
விவரிக்கும் வடிவமைப்புகள்.

பதஞ்சலி அறியா யோகம் நீ!
புள்ளியில் மயங்கும்
பம்பரம் உலகம்.

நீ ஆடவில்லை
நான் காணவில்லை
நடனம் ஆடிற்று
இரண்டு கண்கள் பிரதிபலித்தன

கவிதை இசை முதலான
இதுகாறும் உள்ள
எல்லாக் கலைகளினதும் மேதைகள்
எல்லோரும் கூடித் தலைகவிழ்ந்து நிற்க
அவள் தொடர்ந்து நடனம்
ஆடிக் கொண்டிருந்தாள்.

நினைப் புணர்ந்த மயக்கத்தில்
தலைகோதும் அன்னை இதழ்களில்
குறுஞ்சிரிப்பு.

ஆடிமுடித்து நிற்பவளின்
களங்கமற்ற பூமுகத்தில்
இவை எதனையுமே அறிந்திரா
வியத்தகு குழந்தைமை

எந்தக்கவி மேதைமையையும்
வெட்கிக்கூசிக்
கதறி மயங்கிவிடச்செய்யும்
பிரகாசம்.

சுழலும் சுழலுள் பெருஞ்சுழலும்
என விரிந்து மயங்கும்
நின் தாண்டவம்.

தாண்டவ மூலம் அறிந்த மனம்
தானே கலந்த இடம்
தாண்டவ மண்டலம்.

*காரைக்காலம்மையார்**பிரேம்:ரமேஷ்**பிரிட்ஜேஃப் காப்ரா**ஆர்.கே.(இரா.குப்புசாமி)**தேவதேவன்*___________________________________________

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.